“காங். தேர்தல் வாக்குறுதிகளால் இண்டியா கூட்டணியின் செல்வாக்கு உயரவில்லை” - மத்திய அமைச்சர் கருத்து 

By அ.முன்னடியான்

புதுச்சேரி: “காங்கிரஸ் தேர்தல் வாக்குறுதிகளால் மக்களிடையே இண்டியா கூட்டணிக்கு செல்வாக்கு உயரவில்லை” என மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே கருத்து தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் நமச்சிவாயத்துக்கு ஆதரவு தெரிவித்து இந்தியக் குடியரசுக் கட்சியின் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. காமராஜர் சாலையில் உள்ள தனியார் ஓட்டலில் நடந்த கூட்டத்தில் இந்திய குடியரசு கட்சியின் தேசிய தலைவரும், மத்திய அமைச்சருமான ராம்தாஸ் அத்வாலே சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அப்போது அவர் பேசும்போது, “புதுச்சேரி மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் நமச்சிவாயம் வலிமையானவர். மக்களுக்கு நன்கு பரிட்சயமானவர். அவருக்கு இந்திய குடியரசுக் கட்சி தனது ஆதரவை தெரிவிக்கிறது” என்றார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், “பிரதமர் நரேந்திர மோடி நம் நாட்டை வளர்ச்சிப் பாதைக்கு அழைத்துச் செல்கிறார். அவர் இந்திய நாட்டில் மிகச் சிறந்த தலைவராக மட்டுமல்லாது, உலக அளவில் தலைவராக விளங்குகிறார். கடந்த 10 ஆண்டுகளில் பிரதமர் நரேந்திரமோடி வலிமைமிக்க தலைவராக விளங்கி வருகிறார். நடைபெறும் மக்களவைத் தேர்தலில் பாஜக 400 இடங்களுக்கு மேல் பெற்று நரேந்திர மோடியே மீண்டும் பிரதமராவார்.

மத்திய பாஜக அரசு ஏழை, எளிய மக்களுக்கு ஆதரவாக உள்ளது. 80 கோடி மக்கள் இலவச ரேஷன் பொருட்கள் பெற்று பயனடைந்துள்ளனர். 51 கோடி மக்களுக்கு வங்கி கணக்கு தொடங்கப்பட்டுள்ளது. 46 கோடி மக்கள் முத்ரா கடன் திட்டத்தில் பயன்பெற்றுள்ளனர். இந்தியா முழுவதும் 10 கோடி மக்களுக்கு இலவச கேஸ் சிலிண்டர் வழங்கப்பட்டுள்ளது. 4 கோடி பேர் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் பலன்பெற்றுள்ளனர்.

காங்கிரஸ் கட்சியானது ஊழலின் அடையாளமாக உள்ளது. ஆனால், பிரதமர் நரேந்திர மோடி ஊழலுக்கு எதிரானவராக இருக்கிறார். காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியின் பாத யாத்திரையானது நாட்டை ஒற்றுமைப்படுத்துவதை விட்டு, அதைச் சீர்குலைப்பதாக உள்ளது. பிரதமர் நரேந்திர மோடியின் நடவடிக்கையால் காஷ்மீரில் தீவிரவாதம் அடியோடு ஒடுக்கப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் அங்கு வந்து செல்கின்றனர்.

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தைப் பற்றி காங்கிரஸ் கவலைப்பட வேண்டிய அவசியமில்லை. ஏனென்றால் சட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி பாதுகாத்து வருகிறார். அதனால் தான், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கிய அம்பேத்கர் ஏற்படுத்திய குடியரசுக் கட்சி பிரதமருக்கு ஆதரவளிக்கிறது. அவரையே மீண்டும் நாட்டின் பிரதமராக்கவும், பாஜக வேட்பாளருக்கும் ஆதரவளிக்கிறோம்.

காங்கிரஸ் தேர்தல் வாக்குறுதிகளால் மக்களிடையே இண்டியா கூட்டணிக்கு செல்வாக்கு உயரவில்லை. பிரதமர் நரேந்திர மோடி நாட்டை வளர்ச்சிப் பாதைக்கு அழைத்துச் செல்வதை மக்கள் புரிந்துள்ளதால், அவருக்கான ஆதரவுதான் பெருகி வருகிறது. புதுச்சேரி, தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் பாஜக வளர்ச்சியடைந்து வருகிறது.

புதுச்சேரி முதல்வர் மிகுந்த வலிமையானவர். 4-வது முறையாக முதல்வராக உள்ளார். புதுச்சேரி மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் நமச்சிவாயத்துக்கு இந்திய குடியரசு கட்சி முழு ஆதவவையும் அளிக்கிறது” என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE