ஈவிஎம் குறைபாடுகளை களையக் கோரி திமுக தொடர்ந்த வழக்கு ஜூன் 25-க்கு தள்ளிவைப்பு

By செய்திப்பிரிவு

சென்னை: தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் ஏப்.19-ம் தேதி நடைபெறுகிறது. இந்நிலையில், நேர்மையான, வெளிப்படையான தேர்தலை உறுதி செய்யும் வகையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் மற்றும் கட்டுப்பாட்டு இயந்திரத்தின் நடுவே ஒப்புகை சீட்டு இயந்திரத்தை இணைக்கக் கூடாது என வலியுறுத்தி திமுக சார்பில் அக்கட்சியின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி ஜெ.சத்யநாராயண பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஆர்.எஸ்.பாரதி சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ, ‘‘ஒப்புகைச் சீட்டைஎண்ணுவது குறித்து முடிவெடுக்க தேர்தல் அதிகாரிக்கு அதிகாரம் இருந்தபோதும், அதுதொடர்பான விதிகள் எதுவும் இல்லை’’ என்றார்.

அப்போது குறுக்கிட்ட தலைமை நீதிபதி, ‘‘தமிழகத்தில்மக்களவைத் தேர்தல் நெருங்கியுள்ள நிலையில் தற்போது இந்தவழக்கை தொடர்ந்து இருப்பது ஏன்’’ என கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ, எதிர்கால தேர்தல்களை கருத்தில்கொண்டே இந்த வழக்குதொடர்ந்துள்ளதாக தெரிவித்தார்.

தேர்தல் ஆணையம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் நிரஞ்சன் ராஜகோபாலன், ‘‘மூன்றாம் தலைமுறை மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம், 2013-ம் ஆண்டு முதல்பயன்படுத்தப்பட்டு வருகிறது. 2021சட்டப்பேரவை தேர்தலிலும் இதேஇயந்திரங்களே பயன்படுத்தப்பட்டன. அந்த தேர்தலில் மனுதாரர் சார்ந்துள்ள கட்சிதான் வெற்றி பெற்றது.தேர்தலுக்கு அனைத்து ஏற்பாடுகளும் தயாராக உள்ள நிலையில், இந்த வழக்கை ஏற்றால் அது தேர்தல்ஆணையம் மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கைக்கு ஊறு விளைவி்க்கும்’’ என்றார்.

அதையடுத்து நீதிபதிகள், இந்தவழக்கை தேர்தலுக்குப் பிறகு பரிசீலிக்கலாம் எனக் கூறி விசாரணையை ஜூன் 25-ம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE