மது அருந்திவிட்டு பணியாற்றிய பள்ளி தலைமையாசிரியர் பணி நீக்கம் @ தருமபுரி

By எஸ்.ராஜா செல்லம்

தருமபுரி: தருமபுரி மாவட்டத்தில் மது அருந்திவிட்டு பணியாற்றிய அரசு நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர் பணி நீக்கம் செய்யப்பட்டார்.

தருமபுரி ஒன்றியம் மாரவாடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியராக குணசேகரன்(57) என்பவர் பணியாற்றி வந்தார். இப்பள்ளிக்கு அண்மையில் மாவட்ட கல்வி அலுவலர்(தொடக்கக் கல்வி) மான்விழி பள்ளிப்பார்வை நிகழ்வுக்காக சென்றிருந்தார். அப்போது அப்பள்ளி தலைமையாசிரியர் குணசேகரன் மது அருந்திவிட்டு பணியாற்றியது தெரிய வந்தது. எனவே, அவரை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தி மருத்துவ சான்று பெறப்பட்டது.

மேலும், அவர் மீது துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு விசாரணை அலுவலரின் விசாரணை அறிக்கை மற்றும் மருத்துவரின் சான்றுப்படி, மது அருந்திவிட்டு பணியாற்றியது உறுதி செய்யப்பட்டது. அதேபோல, அவர் தொடர்ந்து இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்ததும் விசாரணையில் தெரிய வந்தது.

எனவே, மாவட்ட கல்வி அலுவலர்(தொடக்கக் கல்வி) மான்விழி வெள்ளிக்கிழமை (ஏப். 5) தலைமையாசிரியர் குணசேகரனை பணியிலிருந்து விடுவித்ததற்கான ஆணையை அவரிடம் வழங்கினார். இந்நிகழ்வு தருமபுரி மாவட்ட கல்வித்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE