“பிரதமர் மோடி நடிகரை போல் வலம் வருகிறார்” - வாகை சந்திரசேகர் பேச்சு @ சிவகாசி

By அ.கோபால கிருஷ்ணன்

சிவகாசி: “300 படங்களுக்கு மேல் நடித்த நான் திமுக தொண்டனாக உங்கள் முன் நிற்கிறேன். ஆனால் பிரதமர் நரேந்திர மோடி நடிகர் போல் வலம் வந்து கொண்டிருக்கிறார்” என சிவகாசியில் நடிகர் வாகை சந்திரசேகர் பேசினார்.

தமிழ்நாடு இயல் இசை நாடக மன்ற தலைவரான நடிகர் வாகை சந்திரசேகர், விருதுநகர் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூரை ஆதரித்து சிவகாசி கந்தபுரம் காலனியில் பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசுகையில், “இந்த மக்களவை தேர்தல் மிக முக்கியமான தேர்தல். இதில் பாஜக வெற்றி பெற்று விட்டால், அடுத்து இந்தியாவில் தேர்தலே நடக்காது. சர்வாதிகார ஆட்சி தான் நடக்கும்.

பல கலாச்சாரங்கள், வழிபாடுகளைக் கொண்ட இந்தியாவில், ஒரே நாடு, ஒரே மதம், ஒரே மொழி, ஒரே கடவுள், ஒரே தேர்தல் என கொண்டு வர மோடி முயற்சிக்கிறார். விருதுநகர் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூருக்கு கை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற வைத்து டெல்லிக்கு அனுப்பினால் தான், மோடியை வீட்டுக்கு அனுப்ப முடியும்.

முதல்வர் ஸ்டாலின் ஆட்சிக்கு வந்தவுடன் கரோனா நிவாரணத் தொகை, மகளிர் உரிமைத்தொகை, காலை உணவு திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை கொண்டு வந்துள்ளார். நான் 300 படங்களுக்கு மேல் நடித்துள்ளேன். அனைத்து வேஷங்களையும் போட்டுள்ளேன். உங்கள் முன் வரும்போது, திமுக தொண்டனாக, உங்களில் ஒருவனாக நின்று வாக்கு கேட்கின்றேன்.

ஆனால் பிரதமர் மோடி விதவிதமான ஆடைகளை அணிந்து கொண்டு, நாட்டு மக்களை மறந்து விட்டு, சினிமா நடிகர் போல் உலகம் முழுவதும் சுற்றி வருகிறார். ஜனநாயகம், சுயமரியாதையை காக்க, நமக்கு பிடித்த தெய்வங்களை வழிபட இண்டியா கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும். காலம் காலமாக சிறுபான்மை மக்களுக்கு துணை நிற்பது திராவிட இயக்க மட்டும் தான்” என்றார். மேயர் சங்கீதா, துணை மேயர் விக்னேஷ் பிரியா மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE