“பாஜகவுக்கு ராமதாஸ் பல்லக்கு தூக்குகிறார்” - முதல்வர் ஸ்டாலின் சாடல் @ விழுப்புரம் 

By செய்திப்பிரிவு

விழுப்புரம்: “சாதிவாரிக் கணக்கெடுப்பு கூடாது என்று சொல்லும் கட்சி, பாஜக. அந்தக் கட்சிக்கு பல்லக்கு தூக்குவது யார்? மருத்துவர் ராமதாஸ். இந்த சந்தர்ப்பவாதக் கூட்டணியின் ரகசியம் அவருக்கு மட்டும்தான் தெரியும் என்று நினைக்கிறார். ஆனால், அவரைவிட உங்களுக்கு நன்றாகத் தெரியும்” என்று விழுப்பரத்தில் நடந்த பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (மார்ச் 5) விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியில் நடைபெற்ற இண்டியா கூட்டணியின் மக்களவைத் தேர்தல் பரப்புரைப் பொதுக்கூட்டத்தில் விழுப்புரம் வேட்பாளர் ரவிக்குமார், கடலூர் வேட்பாளர் விஷ்ணுபிரசாத் ஆகியோரை அறிமுகப்படுத்தி, இண்டியா கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்களிக்குமாறு பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் உரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், “இன்றைக்கு நாடு மிகப்பெரிய ஆபத்தில் சிக்கியிருக்கிறது. பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, பட்டியலின, பழங்குடியின, சிறுபான்மையினர் இட ஒதுக்கீட்டுக்கு ஆபத்து வந்திருக்கிறது. ஆபத்து என்றால், எப்படிப்பட்ட ஆபத்து? உதாரணத்துக்கு இரண்டு மட்டும் சொல்கிறேன்.

நாட்டை நிர்வகிக்கும், மத்திய அரசு செயலாளர்களில் 3 விழுக்காடு கூட பிற்படுத்தப்பட்ட சமுதாய மக்கள் இல்லை. அதேபோல், மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் இருக்கும் பேராசிரியர், உதவிப் பேராசிரியர் போன்ற பணிகளில் இப்போதும் இதர பிறப்படுத்தப்பட்ட சமூகங்களையும், பட்டியலின, பழங்குடியின சமூகங்களையும் சேர்ந்தவர்கள் இட ஒதுக்கீடு முறையில் தேர்வாவது இல்லை.

இதைப் பற்றி, எதிரில் கூடியிருக்கும் நீங்கள் சிந்தித்தாக வேண்டும். உங்களில் பலரும் இப்போது படித்திருப்பீர்கள். ஆனால், உங்கள் அப்பா–அம்மா, அவர்களின் அப்பா-அம்மாவைப் பற்றி யோசித்துப் பாருங்கள். எதிர்காலத்தில், உங்கள் குழந்தைகள் படிக்க வேண்டாமா? நல்ல வேலைக்குச் செல்ல வேண்டாமா? கடந்த இரண்டு, மூன்று தலைமுறையாகத்தான் நாம் படித்து முன்னேறி வருகிறோம். நல்ல மரியாதையான வேலைகளுக்கு வந்திருக்கிறோம்.

இதற்கு என்ன காரணம்? நாங்கள் போராடிப் பெற்ற இட ஒதுக்கீடும்; சமூகநீதியும்தான். இன்னும் நமக்கான பிரதிநிதித்துவம் சரியாக முழுமையாக கிடைக்கவில்லை. அதற்கு யார் காரணம்? பாஜக. இட ஒதுக்கீட்டுக்கு ஆபத்து உண்டாக்குகிறார்கள், ஏன்? ஒவ்வொருமுறையும் “இட ஒதுக்கீடு எங்கள் உரிமை” என்று போராட வேண்டியிருக்கிறது, ஏன்? ஏன் என்றால், ஒதுக்கீட்டுக்கும், சமூக நீதிக்கும் முற்றிலும் எதிரான கட்சி, பாஜக. பாஜக மீண்டும் ஒருமுறை ஆட்சிக்கு வந்தால், இந்தியாவில் இடஒதுக்கீடு முறை இருக்காது.

சமூக நீதிக்குச் சவக்குழி தோண்டிவிடுவார்கள். நம்முடைய மக்களை, நூறு ஆண்டுகள் பின்னோக்கி இழுத்துவிட்டுச் சென்றுவிடுவார்கள். இதற்காகத்தான் நாம் பாஜகவை எதிர்க்கிறோம். இட ஒதுக்கீடு கிடைக்க நாங்கள் ஆண்டாண்டு காலமாகத் தொடர்ந்து போராடுகிறோம். திமுக ஆட்சி என்பதே, சாமானிய மக்களுக்கான ஆட்சிதான். மறைந்த முதல்வர்களான அண்ணா, கருணாநிதி வழியில், திராவிட மாடல் என்ற பெயரில், இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினான நானும் சாமானியர்களுக்கான ஆட்சியைத்தான் நடத்தி வருகிறேன்.

மறைந்த முதல்வர் கருணாநிதி தன்னுடைய வாழ்க்கையையே சமூகநீதிக்காக அர்ப்பணித்தவர். அவர் முதல், இரண்டு முறை முதல்வராகப் பொறுப்பேற்றபோதுதான், முதன்முதலாக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, ஆதிதிராவிடர் நலத்துறை என்ற புதிய துறையையே ஒடுக்கப்பட்ட மக்கள் பயனடையத் தனித் தனியாக உருவாக்கினார். பிற்படுத்தப்பட்டோர் நலனுக்கான சட்டநாதன் ஆணையத்தை அமைத்தார். பிற்படுத்தப்பட்டோர் 25 விழுக்காடு இடஒதுக்கீட்டை 31 விழுக்காடாக உயர்த்தினார். ஆதிதிராவிட சமூகத்துக்கான 16 விழுக்காடு இடஒதுக்கீட்டை 18 விழுக்காடாக வழங்கினார்.

மூன்றாவது முறை முதல்வராக இருக்கும்போதுதான், மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாயங்களுக்கு 20 விழுக்காடு இடஒதுக்கீடும், பழங்குடியின மக்களுக்கு 1 விழுக்காடு இடஒதுக்கீடும் வழங்கி, இப்போது தமிழகத்தில் 69 விழுக்காடு இடஒதுக்கீடு இருக்கக் காரணமாக இருப்பவர் மறைந்த முதல்வர் கருணாநிதிதான். இங்கு மட்டுமல்ல, மண்டல் கமிசன் மூலம், மத்தியில் இடஒதுக்கீடு வழங்கவும் காரணமானார். இப்படி, ஒடுக்கப்பட்ட மக்கள் வாழ்வில் ஒளியேற்றி, ஒட்டுமொத்த நாட்டுக்கே சமூகநீதிப் பாதையை காட்டியவர்தான் மறைந்த முதல்வர் கருணாநிதி.

அந்தப் பாதையில் நாடு தொடர்ந்து, நடைபோட வேண்டும் என்றுதான், திமுக முன்னெடுப்பில், அகில இந்திய அளவில் சமூகநீதி மேல் உண்மையான அக்கறை உள்ள இயக்கங்களை, அரசியல் கட்சிகளை இணைத்து, அகில இந்திய சமூகநீதிக் கூட்டமைப்பை உருவாக்கினோம். அந்தக் கூட்டமைப்பு மூலமாக கூட்டங்களை நடத்தி, சமூகநீதிக்காக இந்தியா முழுவதும் உரக்கப் பேசினோம். மற்ற இயக்கங்களையும் பேச வைத்தோம்.

இப்போது நம்முடைய முழக்கம் தேசிய இயக்கங்களில் எதிரொலிக்கத் தொடங்கியிருக்கிறது. நம்முடைய கோரிக்கையை ஏற்று, காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில், ராகுல் காந்தி என்ன அறிவித்திருக்கிறார்? இண்டியா கூட்டணி ஆட்சி அமைந்ததும், நாடு முழுவதும் சமூக, பொருளாதார, சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தப்படும்.மத்தியில் இடஒதுக்கீடு உச்சவரம்பு 50 விழுக்காடு என்பதை உயர்த்த சட்டத்திருத்தம் செய்யப்படும். SC, ST, OBC பிரிவினருக்கான காலிப்பணியிடங்கள் ஓராண்டுக்குள் நிரப்பப்படும். SC, ST, OBC மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை இரண்டு மடங்கு ஆக்கப்படும் என்று அறிவித்திருக்கிறார்.

காங்கிரஸ் கட்சி வெளியிட்டிருக்கும் தேர்தல் அறிக்கை, நம்முடைய நாட்டைப் படுகுழியில் தள்ளிய பாஜகவிடமிருந்து மீட்கும் தேர்தல் அறிக்கை. நூறாண்டுகள் பின்னோக்கி இழுத்துச் செல்ல பாஜக தீட்டியிருக்கும் திட்டங்களுக்குத் தடைபோடும் தேர்தல் அறிக்கை. இந்தியாவை முன்னேற்றப் பாதையில் கொண்டுபோய் மீண்டும் வளர்ச்சியை ஏற்படுத்த இருக்கும் தேர்தல் அறிக்கை. பாஜக இதுபோல வாக்குறுதி கொடுத்திருக்கிறதா?

அதனால்தான், நான் உங்களைச் சந்திக்கும்போதெல்லாம், இது மிக மிக முக்கியமான தேர்தல் என்று சொல்லிக்கொண்டு வருகிறேன். இது, இந்திய ஜனநாயகத்தை மீட்கும் தேர்தல். சர்வாதிகாரத்தை விரட்டியடிக்கும் தேர்தல். சமத்துவம், சகோதரத்துவம், மத நல்லிணக்கம், நம்முடைய உயிர்மூச்சான சமூகநீதிக் கொள்கை ஆகியவற்றைப் பாதுகாக்க வேண்டிய தேர்தல். சமூகநீதியை நிலைநாட்டப் போராடும் நமக்கும், சமூக அநீதியை இழைத்து வரும் பாஜக கூட்டணிக்கும் நடக்கும் தேர்தல். மொத்தத்தில் இந்தியாவைப் பாதுகாக்க இண்டியா கூட்டணியை உறுதியாக வெற்றிபெறச் செய்ய வேண்டிய தேர்தல்.

நம்முடைய நாட்டை மத, இன, சாதி ,மொழி அடிப்படையில் பிளவுபடுத்தி இடஒதுக்கீட்டை ரத்து செய்யப் பத்தாண்டுகால ஆட்சியில் எல்லாவற்றையும் செய்தது மோடி அரசு. தமிழகத்துக்கு ஒரு சிறப்பு திட்டத்தைக்கூட கொடுக்காமல் வஞ்சித்தது மோடி அரசு. சாதிவாரிக் கணக்கெடுப்பு கூடாது என்று சொல்லும் கட்சி, பாஜக. அந்தக் கட்சிக்கு பல்லக்கு தூக்குவது யார்?

மருத்துவர் ராமதாஸ். தன்னுடைய உயிர் என்று அவர் சொல்லிக் கொள்ளும் சமூகநீதி கொள்கைக்குப் பரம எதிரியான பாஜகவோடு கூட்டணி வைத்து, அவர்களுடைய வேட்பாளர்களையும் பிரதமர் மோடியையும், அமித் ஷாவையும் போற்றிப் புகழ்கிறாரே, சில நாட்களுக்கு முன்பு வரை என்ன சொன்னார்? மோடி ஆட்சிக்கு எவ்வளவு மதிப்பெண் கொடுக்க வேண்டும் என்று ஒரு பேட்டியில் ராமதாஸிடம் நிருபர் கேள்வி கேட்டபோது, “சைபருக்கும் கீழ் ஒன்றும் இல்லை. இருந்தால், அதைதான் கொடுப்பேன்” என்று சொல்லி, பாஜகவைக் கடுமையாக விமர்சித்தார்.

ஆனால், இப்போது அவர்களோடு கூட்டணி வைத்திருக்கிறார்? இந்த சந்தர்ப்பவாதக் கூட்டணியின் ரகசியம் அவருக்கு மட்டும்தான் தெரியும் என்று நினைக்கிறார். யாமறியேன் பராபரமே! ஆனால், அவரைவிட உங்களுக்கு நன்றாகத் தெரியும். அதனால், இதைப் பற்றி விளக்கமாகப் பேச விரும்பவில்லை. திமுகவுக்குச் சமூகநீதி என்பது உயிர்மூச்சான கொள்கை. அதனால்தான், ஒரு கொள்கைக் கூட்டணியை அமைத்து, அதனுடைய வெற்றிக்காக இங்கு மேடையில் இருக்கும் வேட்பாளர்களுக்கு வாக்கு கேட்க வந்திருக்கிறேன். அமையவுள்ள இண்டியா கூட்டணி அரசு, நிச்சயம் சமூகநீதி அரசாக இருக்கும்.

பாஜகவுடன் கள்ளக் கூட்டணி வைத்துக் கொண்டு, உத்தமபுத்திரன் போன்று ஊர்வலம் சென்று வாய்க்கு வந்தபடி புலம்பும் பழனிசாமியின் லட்சணம் என்ன? மோடி இந்தியாவைச் சீரழித்தார் என்றால், தமிழகத்தைச் சீரழித்த பாவத்தை செய்தவர் பழனிசாமி. பழனிசாமி ஆட்சிதான், தமிழகத்தின் இருண்ட காலம். தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் உயிரிழந்த பாவத்தைச் செய்தவர் பழனிசாமி. கோடநாடு கொலை, கொள்ளை, தற்கொலை நடந்த ஆட்சியை நடத்தியவர். பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமையை வேடிக்கை பார்த்து, குற்றவாளிகளைப் பாதுகாத்தவர். இளைஞர்களைச் சீரழிக்கும் போதைப் பொருட்களைத் தமிழகத்துக்குள் பழனிசாமி ஆட்சிதான் அனுமதித்தது.

அமைச்சர் மற்றும் டிஜிபி மீது சிபிஐ வழக்கு போட்டதும் பழனிசாமி ஆட்சியில்தான். பெண் எஸ்.பி.க்குப் பாலியல் வன்முறை நடந்தபோது, அதை வேடிக்கை பார்த்தவர் பழனிசாமிதான். சட்டம்–ஒழுங்கு என்பதே இல்லாமல், ஒட்டுமொத்த நிர்வாக இயந்திரமும் முடங்கிய ஆட்சியை நடத்தியவர். தான் பதவிசுகம் அனுபவிக்க தமிழகத்தின் உரிமைகளை அடகு வைத்து, அடிமை சேவகம் செய்தவர் பழனிசாமி. நான்கு ஆண்டுகளாக ஒன்றுமே செய்யாமல் அனைத்துத் துறைகளிலும், தமிழகத்தை அதலபாதாளத்தில் தள்ளியவர் பழனிசாமி.

நான் ஆட்சிப் பொறுப்புக்கு வந்தவுடனே, ஒவ்வொரு துறையாக ஆய்வு செய்தேன். அந்தக் கோப்புகளைப் பார்த்த பிறகுதான் தெரிந்தது. அறிவிப்புகளை வெளியிட்டதுடன் சரி. அந்த அறிவிப்புகளுக்கான அரசாணைகூட போடாமல் அம்போ என்று விட்டுவிட்டு சென்றிருந்தார் பழனிசாமி. ஒரு அரசு நிர்வாகம் எப்படி இருக்கக் கூடாது, எப்படி அலங்கோலமாகச் செயல்படக் கூடாது என்பதற்கு எடுத்துக்காட்டுதான், பாதம்தாங்கி பழனிசாமியின் நான்காண்டுகால ஆட்சி. அதிமுக ஆட்சியில் சீரழிந்த நிர்வாகத்தைச் சீர்திருத்த, பல அவசர நடவடிக்கைகளை எடுக்க வேண்டியதாயிற்று. கோட்டையில் இருந்து மட்டும் ஆய்வுக் கூட்டங்களை நடத்தினால் போதாது ஒவ்வொரு மாவட்டமாக ஆய்வு செய்ய வேண்டும் என்று முடிவு செய்தேன். அதன்படி, மாவட்டந்தோறும் ஆய்வுகளை நடத்தினேன்.

இது ஒருபக்கம் என்றால், அரசு கஜானாவைத் தூர்வாரிவிட்டார். நிதிநிலைமையைச் சரி செய்யவே ஒரு கமிட்டி போட்டேன். அதுவும் சாதாரண கமிட்டி இல்லை. இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் தலைமையில், பொருளாதார அறிஞர்களின் குழுவை அமைத்தேன். இப்படியெல்லாம், அடுத்தடுத்து பல தொடர் நடவடிக்கைகளை எடுத்து ஆய்வுகளை செய்து பழனிசாமியின் நிர்வாகச் சீர்கேட்டைக் களைந்து, இன்று மற்ற மாநிலங்கள் மட்டுமல்ல உலக நாடுகள் பலவும் கவனிக்கும் சாதனைகளை செய்துகொண்டு இருக்கிறோம்.

பழனிசாமி தமிழகத்தை மட்டும் அடகு வைக்கவில்லை; அதிமுகவையும் சேர்த்துதான் அடகு வைத்திருக்கிறார். அதனால், தமிழக மக்கள் மட்டுமல்ல உண்மையான அதிமுக தொண்டர்களும் பழனிசாமியை நம்பத் தயாராக இல்லை. இதுவரை நடந்த தேர்தல்களில் எல்லாம் தோற்ற பழனிசாமி, இந்தத் தேர்தலிலும் தோற்கத்தான் போகிறார். ஆனால், இப்போதுகூட, பாஜகவின் கள்ளக்கூட்டணி வைத்துக்கொண்டு, கூட்டணி இல்லை என்று விழுந்து புரண்டு நடிக்கிறார். உங்கள் நடிப்பு ஒருபோதும் எடுபடாது பழனிசாமி.

நேற்று செய்திகளில் பிரதமர் வருகையைப் பற்றிப் பார்த்திருப்பீர்கள். தமிழகத்தை வெள்ளம், புயல் தாக்கியபோது எட்டிக்கூட பார்க்காதவர் மோடி. தமிழகத்துக்கான நிவாரண நிதி கொடுக்க மனம் வராதவர் மோடி. தேர்தல் வருகிறது என்று ஏற்கெனவே நான்கு முறை வந்தார். இப்போது இன்னும் நான்கு முறை வரப் போகிறாராம். தமிழ்க மக்களுக்குத் தமிழில் வணக்கம் சொன்னால்போதும். வேட்டி கட்டினால்போதும், இட்லி பிடிக்கும், பொங்கல் பிடிக்கும் என்று சொன்னால்போதும் என்று நினைத்துக் கொண்டு வருகிறார் பிரதமர் மோடி.

மக்களுக்குத் தேவையான நேரத்தில் உதவி செய்பவர்களைத்தான் மக்கள் நினைத்துப் பார்ப்பார்கள். மக்களை மதிக்கவில்லை என்றால், அவர்களும் மதிக்க மாட்டார்கள். பிரதமர் மோடி மீண்டும் மீண்டும் நீங்கள் எத்தனை முறை படையெடுத்து வந்தாலும் தமிழகத்தை பாஜக கைப்பற்றவே முடியாது. இது பெரியார் மண். அண்ணாவின் மண். கருணாநிதியுடைய மண். திமுக இருக்கும்வரை உங்கள் எண்ணம் பலிக்கவே பலிக்காது.

மக்களுக்கு நன்கு தெரியும். தமிழகத்தின் பொற்காலம் என்பது, திமுக ஆட்சிதான். தமிழகத்தின் உட்கட்டமைப்பு வசதிகள் பெருகியது திமுக ஆட்சியில்தான். தமிழகத்தின் கல்வி அறிவு உயர்வுக்கு வித்திட்டது திமுக ஆட்சிதான். தமிழகத்துக்கு எண்ணற்ற முத்திரைத் திட்டங்களை நிறைவேற்றியது திமுக ஆட்சியில்தான். இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கிக் கொடுத்தது திமுக ஆட்சிதான். மாவட்டந்தோறும் தொழிற்சாலைகளைக் கொண்டு வந்து வளர்ச்சிக்கு வழிவகுப்பதும் திமுக ஆட்சிதான். இந்த திராவிட மாடல் ஆட்சி, டெல்லியிலும் இண்டியா கூட்டணி மூலமாக எதிரொலிக்க வேண்டும். ஏன் என்றால், பாஜக வீட்டுக்கும், நாட்டுக்கும் கேடு.

சமீபத்தில் ப.சிதம்பரம் ஒரு தொலைக்காட்சியில் அளித்த பேட்டியைப் பார்த்தேன், நீங்களும் பார்த்திருப்பீர்கள். பாஜகவுக்கு ஏன் வாக்களிக்கக் கூடாது என்று அவர் சொன்ன கருத்துகளை வழிமொழிந்து, நான் கூடுதலாகச் சொல்கிறேன். பாஜகவுக்கு வாக்களித்தால், நாடெங்கும் மதவெறி ஊட்டப்பட்டு, எங்குப் பார்த்தாலும் மதக்கலவரம் என்ற நிலைமை உருவாகும். மக்களைப் பிளவுப்படுத்தி வேற்றுமைகளும் - அடிமைத்தனமும் நிறைந்த சமூகத்தை மீண்டும் உருவாக்க அரசியல்சட்டத்தை மாற்றுவார்கள். படிப்பதால்தான் இவர்கள் உரிமைகளைக் கேட்கிறார்கள் என்று கல்வியை நம்மிடம் இருந்து பறிப்பார்கள்.

மக்களைச் சிந்திக்க விடாமல் தடுக்க வரலாற்றை, பொய்களால் மாற்றி எழுதுவார்கள். மாநிலங்களின் உரிமைகளைப் பறித்து மாநிலங்களை நகராட்சிகள் போன்று நடத்துவார்கள். மாநிலங்களில் இருக்கும் மக்கள், சிறிய பிரச்சினைக்குக்கூட மத்திய அரசை எதிர்பார்த்து நிற்கும் நிலைமை உருவாகிவிடும். மாநில மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளை, ஆளுநர்கள் மூலமாக செயல்படவிடாமல் தடுத்து, போட்டி அரசாங்கம் நடத்துவார்கள். சொந்தங்களாக வாழும் இஸ்லாமிய கிறிஸ்துவர்களை, இரண்டாம்தரக் குடிமக்களாக மாற்றி, அவர்களுக்கு எதிராக வெறுப்பை விதைப்பார்கள்.

ஒரே நாடு, ஒரே கலாச்சாரம், ஒரே மொழி, ஒரே மதம், ஒரே தேர்தல், ஒரே ரேஷன் கார்டு, ஒரே உணவு, ஒரே அரசு, ஒரே கட்சி, ஒரே தலைவர் என்று ஒரே ஒரே - என்று ஒரேயடியாக நாட்டை நாசமாக்கிவிடுவார்கள். பாஜகவின் திட்டங்கள் மிக மிக மோசமானது. இந்த விடுதலைப் போரில் இந்திய மக்கள் வெற்றி பெற வேண்டும் என்றால், எதிரிகளை அடையாளம் காண்பது மட்டுமல்ல, துரோகிகளையும் சேர்த்தே அடையாளம் காண வேண்டும். எதிரிகளையும் - துரோகிகளையும் விரட்டியடிக்க வேண்டும். பாஜகவுக்கு சமூகநீதி மண்ணான தமிழகத்தில் தக்க பாடம் புகட்ட வேண்டும். எனவே, தமிழகத்தை வஞ்சித்த பாஜக அதற்குத் துணைபோகும் பாமக, தமிழகத்தைப் பாழ்படுத்திய அதிமுக ஆகிய துரோகிக் கட்சிகளை ஒருசேர வீழ்த்துங்கள்” என்று முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

33 mins ago

தமிழகம்

48 mins ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

மேலும்