‘ஸ்டார் தொகுதி’ கிருஷ்ணகிரி களம் எப்படி? - ஒரு பார்வை

By எஸ்.கே.ரமேஷ்

கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதியில் சந்தன கடத்தல் வீரப்பனின் மகள் வித்யா ராணி போட்டியிடுவதால் தேர்தல் களத்தில் இத்தொகுதி கவனத்தை ஈர்த்துள்ளது. கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட சட்டப்பேரவை தொகுதிகளில் கடந்த 2021-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் ஊத்தங்கரை, வேப்பனப்பள்ளி, கிருஷ்ணகிரி ஆகிய சட்டப்பேரவை தொகுதிகளில் அதிமுகவும், ஓசூர், பர்கூரில் திமுகவும், தளியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் வெற்றி பெற்றன.

ஆந்திர, கர்நாடக மாநில எல்லையில் கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதி உள்ளதால், இங்கு தமிழ், தெலுங்கு, கன்னட மொழி பேசும் மக்கள்பரவலாக உள்ளனர். மேலும், ஓசூர் பகுதி தொழிற்சாலைகளில் பல்வேறு மாவட்டம் மற்றும் வட மாநில தொழிலாளர்கள் அதிக அளவில் உள்ளனர்.

இதுவரை நடந்து முடிந்த 17 மக்களவைத் தேர்தல்களில் காங்கிரஸ் 8 முறையும், திமுக 5, அதிமுக 3, தமாகா1 முறை வெற்றி பெற்றுள்ளன. மேலும், 1971-ல் நடந்த மக்களவை இடைத்தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. கடந்த 1980, 1984, 1989, 1991 ஆகிய 4 தேர்தலில் தொடர்ச்சியாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் வாழப்பாடி கே.ராமமூர்த்தி வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

தற்போதைய தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி சார்பில், ஓசூர் சட்டப்பேரவைத் தொகுதியில் 3 முறை வெற்றி பெற்ற முன்னாள் எம்எல்ஏ கோபிநாத், அதிமுக சார்பில் ஓசூர் மாநகராட்சி மாமன்ற உறுப்பினரும், மண்டல குழுத் தலைவருமான வி.ஜெயப்பிரகாஷும் போட்டியிடுகின்றனர்.

மேலும், காங்கிரஸ் கட்சியில் பல ஆண்டுகள் பயணித்து, இத்தொகுதியில் தமாகா சார்பில் போட்டியிட்டு ஒரு முறை எம்பியாக இருந்தவரும், தற்போது பாஜக மாநில செய்தி தொடர்பாளருமான நரசிம்மன் பாஜக சார்பிலும், நாம் தமிழர் கட்சி சார்பில் சந்தன கடத்தல் வீரப்பனின் மகள் வித்யா ராணி மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் உட்பட 27 பேர் போட்டியிடுகின்றனர்.

பிரதான அரசியல் கட்சி வேட்பாளர்கள் அனைவரும் தொகுதி மக்களுக்கு நன்கு அறிமுகமானவர்கள். தேர்தல் பிரச்சாரத்தில் காங்கிரஸ் வேட்பாளர் கோபிநாத், மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது செய்த சாதனை திட்டங்கள் மற்றும் திமுக அரசின் சாதனைகளை எடுத்துக் கூறி வருவதோடு, தனக்கு கூட்டணி கட்சிகளின் ஆதரவு மற்றும் தெலுங்கு பேசும் மக்கள் ஆதரவு கைகொடுக்கும் என்ற நம்பிக்கையோடு வலம் வருகிறார்.

அதிமுக வேட்பாளர் ஜெயப்பிரகாஷ், காவிரி உள்ளிட்ட நதி நீர் பிரச்சினைகள் மத்திய, மாநில அரசுகளின் மெத்தனப்போக்கை சுட்டி காட்டியும், மாநில அரசு மீது பல்வேறு குற்றச்சாட்டுகளைக் கூறியும் பிரச்சாரத்தில் ஈடுபடுகிறார். மேலும், கடந்த 10 ஆண்டுக்குமேல், தான் பாமகவில் இருந்த நிலையில் நட்புரீதியான வாக்குகள் தனக்கு கிடைக்கும் என்ற நம்பிக்கையும், மத்திய, மாநில அரசுகள் மீதான அதிருப்தி வாக்குகள் தனக்கு சாதகமாகும் என்றும் கருதுகிறார்.

பாஜக வேட்பாளர் நரசிம்மன், பிரதமர்மோடியின் சாதனை திட்டங்களையும், அவர் எம்பியாக இருந்தபோது, தொகுதிக்கு செய்த பல்வேறு திட்டங்களையும் எடுத்துக்கூறி பிரச்சாரம் செய்து வருகிறார்.

நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் வித்யா ராணி, விவசாயம் சார்ந்த திட்டங்களுக்கு முக்கியத்துவம் அளிப்பதோடு, தனது தந்தை மக்களுக்கு பல்வேறு நன்மைகள் செய்ய நினைத்ததை தான் செய்து முடிப்பேன் எனக் கூறி பிரச்சாரத்தில் கவனம் ஈர்த்து வருகிறார். மேலும், இத்தொகுதியில் தீர்க்கப்படாத பிரச்சினைகள் அனைத்தையும் தீர்ப்பதாக அனைத்து வேட்பாளர்களும் கூறி தேர்தல் களத்தில் வெற்றி நம்பிக்கையோடு வலம் வருகின்றனர்.

தீர்க்கப்படாத பிரச்சினைகள்: தொகுதி மக்களின் 82 ஆண்டுகால கோரிக்கையான ஜோலார்பேட்டையிலிருந்து கிருஷ்ணகிரி வழியாக ஓசூருக்கு ரயில் திட்டம் மற்றும் ஓசூர் மெட்ரோ ரயில் திட்டம், ஓசூரில் விமான நிலையம், கிருஷ்ணகிரி சுங்கச்சாவடி இடமாற்றம்.

அரசு சார்பில் மாங்கூழ் தொழிற்சாலை, உலகளவில் மா ஏற்றுமதி மையம், புளி பதப்படுத்த குளிர்பதன கிடங்கு, ஆவின் மேம்பாலத்தில், சென்னை, சேலம், பெங்களூரு தேசிய நெடுஞ்சாலைகள் இணைக்கும் வகையில் உயர் மட்ட வட்ட சாலை, அஞ்செட்டியில் தொட்டல்லா அணை உள்ளிட்ட கோரிக்கைகள் கடந்த தேர்தல்களில் அரசியல் கட்சிகளின் வாக்குறுதிகளாக அளிக்கப்பட்டு தற்போதும் நிறைவேற்றப்படாத அறிவிப்புகளாகவே உள்ளன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE