‘சிறுபான்மையினர் ஆதரவு அதிமுகவுக்கு அதிகரித்துள்ளது’ - கோகுல இந்திரா

By ச.கார்த்திகேயன்

அதிமுக அமைப்புச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கோகுல இந்திரா 'இந்து தமிழ் திசை' நாளிதழிடம் உரையாடினார். அப்போது அவர் கூறியதாவது:

கட்சியில் இளம் தலைமுறையினருக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்பதற்காக இந்த தேர்தலில் போட்டியிடவில்லை. எங்களைப் போன்ற அனுபவம் வாய்ந்த மூத்தவர்கள் களப்பணி மேற்கொள்ள வேண்டியுள்ளது. ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுகவில் பெண் வேட்பாளர்களுக்கு பஞ்சமெல்லாம் ஏற்பட்டுவிடவில்லை.

திருநெல்வேலியிலும், விளவங்கோட்டிலும் பெண்களைத்தான் நிறுத்தி இருக்கிறோம். திமுகவின் 3 ஆண்டு ஆட்சியால் மக்கள் விரக்தியின் விளிம்பில் உள்ளனர். திமுகவை ஏன் ஆட்சியில் அமர்த்தினோம் என்று வருந்துகின்றனர்.

அவர்களின் கோபத்தை வெளிப்படுத்த இந்த தேர்தலை வாய்ப்பாக கருதுகின்றனர்.பல்வேறு தொகுதிகளில் திமுக வேட்பாளர்களை, இப்போ எதுக்கு வந்தீங்க? என்று கேள்வி எழுப்பி விரட்டி வருகின்றனர். எனவே, தேர்தலில் வெற்றியை தீர்மானிப்பவர்கள் மக்கள்தான். திமுகவில் கூட்டணி இருக்கலாம்.

மக்கள் அவர்களை ஆதரிக்கவில்லை. அதேபோல், கூட்டணி கட்சிகளை நம்பி அதிமுக இல்லை. வந்தால் வரவேற்போம். இல்லாவிட்டால் சொந்த பலத்தில் தேர்தலை எதிர்கொள்வோம். 2019 இடைத்தேர்தலில் பாமக கூட்டணியால்தான் அதிமுக ஆட்சி நிலைத்தது என அன்புமணி கூறுவது நிஜமல்ல.

இன்று பாமகவில் 5 எம்எல்ஏக்கள் பேரவைக்கு செல்வதற்கு அதிமுகவுடன் 2021-ல் பாமக கூட்டணி வைத்ததுதான் காரணம். அதிமுகவின் பலம் என்னவென்று எங்களுக்கு தெரியும். தற்போதைய அதிமுக கூட்டணி முழு மன நிறைவைத் தருகிறது.

2021 பேரவை தேர்தலின்போது, வாக்கு சேகரிக்க சென்றால், முஸ்லிம் வாக்காளர் முகத்தை திருப்பிக் கொள்வார்கள். இன்று தென் சென்னை பகுதியில் அவர்களின் வீடுகளுக்கு செல்லும்போது உற்சாகமாக வரவேற்கின்றனர்.

எஸ்டிபிஐ போன்ற கட்சிகளுடன் கூட்டணி வைத்திருப் பதாலும், பல்வேறு முஸ்லிம் அமைப்புகள் அதிமுகவுக்கு ஆதரவு தெரிவித்திருப்பதால், முஸ்லிம் வாக்குகள் அதிக அளவில் அதிமுகவுக்கு கிடைக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE