டாஸ்மாக் விற்பனையை அதிகரிப்பதே தமிழக அரசுக்கு இலக்கு: பாமக தலைவர் அன்புமணி குற்றச்சாட்டு

By செய்திப்பிரிவு

கிருஷ்ணகிரி: தேசிய ஜனநாயக கூட்டணியின் கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நரசிம்மனை ஆதரித்து, கிருஷ்ணகிரியில் நேற்றுநடைபெற்ற கூட்டத்தில் பாமக தலைவர் அன்புமணி பேசியதாவது:

தொலைநோக்கு சிந்தனையுடன் பாமக கூட்டணி அமைத்துள்ளது. முதல்வர் ஸ்டாலின், “சமூக நீதிபேசும் பாமக, பாஜக கூட்டணியில் சேர்ந்தது ஏன்” என்று கேட்கிறார். சமூக நீதியைப் பற்றி பேச திமுகவுக்கு என்ன தகுதி இருக்கிறது?

கடந்த 2014, 2019, 2021-ல்நடைபெற்ற தேர்தல்களை பாஜகவுடன் இணைந்துதான் சந்தித்தோம். தமிழகத்தில் கடந்த 57ஆண்டுகளாக திமுகவும், அதிமுகவும் மாறி மாறி ஆட்சி அமைத்தது போதும் என்றுதான் பாஜக கூட்டணியில் தொடர்கிறோம்.

அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி பாமகவைப் பார்த்து“துரோகம் செய்துவிட்டார்கள்” என்கிறார். துரோகத்தைப் பற்றி யார் பேசுவது? தன்னை தூக்கிநிறுத்தியவர்கள், வழி நடத்தியவர்கள் உள்ளிட்ட அத்தனை பேருக்கும் துரோகம் செய்தது யார்?

பிரதமர் மோடி ஓபிசியினருக்கு தேசிய பிற்படுத்தப்பட்ட ஆணையத்துக்கான அரசியல் சாசன அந்தஸ்து பெற்றுத் தந்தார். எங்களுக்குள் நட்பு உள்ளது. அதைக் கொண்டு, தமிழகத்துக்கு நல்ல திட்டங்களைக் கொண்டுவர முடியும். ‘வெள்ள நிவாரணம் தரவில்லை’ என மத்திய அரசை திமுகவினர் விமர்சிக்கின்றனர். வெள்ளப் பாதிப்புகளைத் தடுக்க ஏன் உரியமுன்னேற்பாடுகளை மேற்கொள்ளவில்லை? பொருளாதாரம், சுகாதாரம், வேளாண் துறைகளில் வளர்ச்சிஇலக்கை வைக்காமல், டாஸ்மாக் விற்பனையில் வளர்ச்சி இலக்கை வைக்கின்றனர்.

இவ்வாறு அன்புமணி பேசினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE