ஓய்வுபெற்ற வட்டாட்சியர் வீட்டில் திருடிய 2 பேர் வாகன சோதனையில் சிக்கினர்: தலைமைக் காவலருக்கு டிஜிபி பாராட்டு

By செய்திப்பிரிவு

சென்னை: ஓய்வு பெற்ற வட்டாட்சியர் வீட்டில் திருடிவிட்டு வந்தவர்களை வாகன சோதனையில் பிடித்த தலைமைக் காவலரை டிஜிபி சங்கர் ஜிவால் பாராட்டினார்.

மக்களவை தேர்தலை முன்னிட்டு பணப்பட்டுவாடா மற்றும் குற்றச் செயல்களைத் தடுக்கும் வகையில் அனைத்து மாவட்ட போலீஸாரும் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இரவு ரோந்து பணியும் முடுக்கி விடப்பட்டுள்ளது.

இந்நிலையில் கடந்த 31-ம் தேதி அதிகாலை 3 மணியளவில் காஞ்சிபுரம் மாவட்டம், விஷ்ணுகாஞ்சி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பிஎஸ்கே தெரு, பாண்டுரங்கன் பெருமாள் கோயில் அருகே தலைமைக் காவலர் நித்தியானந்தம் என்பவர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தார்.

அப்போது, அந்த வழியாக வந்த ஆட்டோவை சந்தேகத்தின்பேரில் நிறுத்தி சோதனை மேற்கொண்டார். ஆட்டோவில் அமர்ந்திருந்த ஊரப்பாக்கத்தைச் சேர்ந்த ஏகா என்ற ஏகாம்பரம், ஆட்டோவை ஓட்டி வந்த செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூரைச் சேர்ந்த ஓட்டுநர் விக்னேஷ் இருவரும் முன்னுக்குப் பின் முரணாகப் பதிலளித்தனர். இதையடுத்து, இருவரையும் கீழே இறக்கிவிட்டு, ஆட்டோவில் சோதனை நடத்தியபோது பணம், தங்கம் மற்றும் வெள்ளி பொருட்கள் சிக்கின.

ரூ.2.10 லட்சம் ரொக்கம்: ஆட்டோவில் வந்தவர்களை விசாரணை செய்ததில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் வசிக்கும் ஓய்வுபெற்ற வட்டாட்சியர் ஒருவரது வீட்டின் பூட்டை உடைத்து சுமார்11 பவுன் நகைகள், 679 கிராம் வெள்ளிப் பொருட்கள் மற்றும் ரூ.2.10 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை திருடி வந்தது தெரியவந்தது.

இதையடுத்து அவர்கள் இருவரையும் தலைமைக் காவலர் நித்யானந்தம் கைது செய்து அவர்களிடம் இருந்த நகை, பணத்தை மீட்டார். வாகன சோதனையின்போது விழிப்புடன் செயல்பட்டு குற்றவாளிகளைக் கைது செய்து திறம்படப் பணி செய்த தலைமைக் காவலரை டிஜிபி சங்கர் ஜிவால் நேற்று தனது அலுவலகத்துக்கு வரவழைத்துப் பாராட்டி சான்றிதழ் வழங்கினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE