“மலையை காணோம்!” - வடிவேலு பட பாணியில் அன்புமணி குற்றச்சாட்டு @ கிருஷ்ணகிரி பிரச்சாரம்

By எஸ்.கே.ரமேஷ்

கிருஷ்ணகிரி: தேசிய ஜனநாயக கூட்டணியின் கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நரசிம்மனை ஆதரித்து பாமக தலைவர் அன்புமணி பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசியது: “தொலை நோக்கு சிந்தனையுடன் பாமக, தற்போது கூட்டணி அமைத்துள்ளது. இதனை திமுக, அதிமுக கட்சிகள் விமர்சனம் செய்கிறது.

முதல்வர் ஸ்டாலின், ‘சமூக நீதி பேசும் பாமக, ஏன் பாஜக, கூட்டணியில் சேர்ந்தது’ என்கிறார். சமூக நீதியை பற்றி பேச திமுகவுக்கு என்ன தகுதி இருக்கிறது? பாமக, பாஜகவோடு கூட்டணி வைப்பது புதிதல்ல. முன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலத்தில் 6 ஆண்டுகள் பாஜகவோடு, பாமக கூட்டணி வைத்தது. அப்போது திமுகவும் அதில் 5 ஆண்டுகள் அதே கூட்டணியில்தான் இருந்தது. அதை மறந்து ஸ்டாலின் பேசுகிறார்.

குடிகார நாடு, கஞ்சா நாடு: கடந்த 2014, 2019, 2021 தேர்தல்களிலும் பாஜகவோடு இணைந்துதான் பாமக தேர்தலை சந்தித்தது. தற்போதும் பாஜக கூட்டணியில் தேர்தலை சந்திக்கிறோம். இதில் வெளியேறியது அதிமுகதான். தமிழகத்தில் கடந்த 57 ஆண்டுகளாக திமுகவும், அதிமுகவும் மாறி மாறி ஆட்சி அமைத்தது போதும் என்றுதான் தற்போது இதே கூட்டணியில் தொடர்கிறோம். அவர்கள் ஆட்சியில், தமிழ்நாடு என்ற பெயர் மாற்றியதை தவிர்த்து, குடிகார நாடு, கஞ்சா நாடு என்ற பெயரைத்தான் பெற்று தந்துள்ளனர். இதை தடுக்கும் போலீஸாரை ஆளுங்கட்சியினர் சுதந்திரமாக செயல்பட விடுவதில்லை.

வடிவேலு பட பாணியில் 'மலையை காணோம்’ - தமிழக முதல்வர் ஸ்டாலின் தன்னை சுற்றி, 4 அமைச்சர்களை வைத்துகொண்டு அவர்கள் சொல்படி செயல்படுகிறார். அவர்களோ, அமைச்சர்கள் என்ற பெயரில் வணிகம், வர்த்தகம் செய்யும் வியாபாரிகளாக செயல்படுகின்றனர்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தை பொறுத்தவரை இயற்கை வளம், மண், பாறை, மலை சுரண்டி விட்டனர், வடிவேலு பட பாணியில் 'மலையை காணோம்' என்றுதான் சொல்ல வேண்டும். இதையெல்லாம் இளைஞர்கள் சிந்திக்க வேண்டும்.

பழனிசாமி நம்மை பார்த்து துரோகம் செய்துவிட்டார்கள் என்கிறார். துரோகத்தை பற்றி யார் பேசுவது? தன்னை தூக்கி நிறுத்தியவர்கள், வழிநடத்தியவர்கள் உள்ளிட்ட அத்தனை பேருக்கும துரோகம் செய்தது யார்? நாங்கள் பாட்டாளிகள். வியர்வை சிந்தி உழைப்பவர்கள். நம்பி வந்தால் உயிரை கொடுத்து அவர்கள் வெற்றிக்காக பாடுபடுபவர்கள். நாங்கள் உங்களோடு கூட்டணியில் இல்லாவிட்டால், உங்களால் கடைசி 2 ஆண்டுகள் ஆட்சி நடத்தியிருக்க முடியுமா?

நாங்கள் உங்களிடம் கேட்ட உள்ஒதுக்கீட்டையும், பல்வேறு போராட்டங்களுக்குப் பின் தேர்தல் அறிவிக்கும் நாளில் அறிவித்தீர்கள். அதுவும் நீங்கள் போட்ட அரைகுறை சட்டத்தை உயர் நீதிமன்றமே கண்டித்து சட்டம் ரத்து செய்யப்பட்டது. அந்தச் சட்டத்தை அமல்படுத்தவும், பாமகவை கூட்டணி பேசி பணியவைத்தீர்கள். மீண்டும் அந்தச் சட்டத்தை கொண்டு வருவதற்கு யாராவது குரல் கொடுத்தீர்களா? அதிமுகவின் 66 எம்எல்ஏக்களில் 36 பேரை வெற்றி பெற செய்த இந்த சமூகத்தினருக்காக முனுசாமி, சம்பத், சண்முகம், வீரமணி உள்ளிட்ட யாராவது குரல் கொடுத்தார்களா? சுதந்திரம் அடைந்த 77 ஆண்டுகளில் 60 ஆண்டுகள் ஆட்சி செய்த காங்கிரஸ் குரல் கொடுத்ததா?

ஆனால், பாரத பிரதமர் மோடி ஓபிசி சமூகத்தினருக்கு தேசிய பிற்படுத்தப்பட்ட ஆணையத்திற்கான அரசியல் சாசன அந்தஸ்து பெற்று தந்தார். சேலம் பொதுக் கூட்டத்துக்கு வந்த போது நம் தலைவர் ராமதாஸை கட்டித் தழுவினார். எங்களுக்குள் அந்த நட்பு உள்ளது. அதை வைத்து தமிழ்நாட்டுக்கு நல்ல திட்டங்களை கொண்டு வர முடியும்.

டாஸ்மாக் விற்பனையில் வளர்ச்சி இலக்கு: ஆனால், தற்போதைய திமுக அரசு மத்திய அரசுடன் சண்டையிட்டு வருகிறது. அரசியல் மேடைகளில் கருத்து ரீதியாக பேசுவதை தவிர்த்து, அநாகரிமாக, சரியான அணுகுமுறை இல்லாமல் பேசி வருகின்றனர். வெள்ள நிவாரணம் தரவில்லை என மத்திய அரசை திட்டுகின்றனர். வெள்ள நிவாரணத்துக்கான முன்னேற்பாடு திட்டங்களை நீங்கள் ஏன் செய்ய வில்லை. அந்த திட்டங்களை பற்றி புரிதல் உங்களிடம் இல்லை.

பொருளாதாரம், சுகாதாரம், வேளாண் துறையில் வளர்ச்சி இலக்கை வைக்காமல், டாஸ்மாக் விற்பனையில் வளர்ச்சி இலக்கு வைக்கின்றனர். எனவே, வரும் 2026-ல் திமுக, அதிமுக, இல்லாத கூட்டணி ஆட்சி உருவாகும் வகையில் தொலை நோக்கு கூட்டணி வைத்துள்ளோம். இது நிச்சயம் வெல்லும்” என்று அன்புமணி பேசினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

4 mins ago

தமிழகம்

26 mins ago

தமிழகம்

33 mins ago

தமிழகம்

40 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்