‘இந்து தமிழ் திசை'க்கு, திமுகவின் துணைப் பொதுச் செயலாளரும் தூத்துக்குடி தொகுதி வேட்பாளருமான கனிமொழி எம்.பி. வழங்கிய நேர்காணல்:
திமுகவின் தேர்தல் அறிக்கையில் என்னென்ன சிறப்பம்சங்கள் உள்ளன?
ஆளுநர் நியமன முறையில் திருத்தம், சட்டப் பிரிவு 356 அகற்றுதல், ஒன்றியத்தில் தமிழ் ஆட்சி மொழி, மாநில மொழிகளுக்கு சம அளவு நிதி, சென்னையில் உச்ச நீதிமன்ற கிளை எனப் பல முக்கிய அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. அத்துடன், காலை உணவுத் திட்டம், மகளிர் உரிமைத் தொகை போன்ற திட்டங்களை தேசிய அளவில் செயல்படுத்துதல். பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை குறைப்பு உள்ளிட்ட வாக்குறுதிகள் இந்திய அளவில் மக்கள் நலனை முதன்மையாக கொண்டிருக்கும்.
கல்விக் கடன் தள்ளுபடி, நீட் ரத்து என மீண்டும் அதே வாக்குறுதிகளா என்று எதிர்க்கட்சிகள் விமர்சிக்கின்றனவே?
வாக்குறுதி என்பதை விடவும், நீட் விலக்கு எங்களின் கொள்கைப் போராட்டம். வெற்றி பெறாமல் போராட்டத்தை எப்படி நிறுத்த முடியும்? தமிழ்நாட்டுக்குள் நீட்டை திணிக்க பாஜகவுக்கு துணைபோன அதிமுகவுக்கு, திமுகவை விமர்சிக்கத் தகுதியில்லை.
தமிழ்நாட்டில் அதிமுகவைவிடவும், திமுகவுக்கு கடுமையான போட்டியை தரும் கட்சியாக பாஜக தெரிகிறதே?
எங்களின் எதிர்க்கட்சியாக அதிமுகவை தான் பார்க்கிறோம். ஆனால், எதிர்க்கட்சியின் தகுதியுடன் அதிமுக செயல்படுகிறதா என்றால், இல்லை. ஊடகங்களால் உருவாக்கப்பட்ட பிம்பத்தைத் தாண்டி, பாஜகவை எங்களுக்கு நிகராக நாங்கள் கருதுவதில்லை.
அண்மைக் காலத்தில் தமிழ்நாட்டில் பாஜக வேகமாக வளர்ந்து வருவதாகக் கூறப்படுவது பற்றி?
அண்மையில் பாஜக வளர்ந்து வருவதாக சமூக ஊடகங்களில் திட்டமிட்டு ஒரு கருத்தை பரப்ப முயல்கிறார்கள். அன்றாடம் நாம் அவர்களை பற்றி பேசவேண்டும் என்பதற்காக கவன ஈர்ப்பு செயல்களை மட்டுமே இங்கு பாஜக செய்துவருகிறது. பெரும்பாலான தொகுதிகளில் பிரபலமான
வேட்பாளர்களை பாஜக களத்தில் இறக்கியுள்ளது. இது அவர்களுக்கு சாதகமானது என கூறப்படுகிறதே?
ஊடகங்களின் கவனத்தை ஈர்க்கும் தன்மையுடன் பாஜக யாரை வேண்டுமானாலும் போட்டியிட வைக்கலாம். ஆனால், தங்களுடன் களத்தில் நிற்பவர்கள் யார் என்று மக்களுக்குத் தெரியும்.
திமுக என்ற கட்சியே இல்லாமல் செய்து விடுவோம் என பிரதமர் மோடி கூறுகிறார். தமிழ்நாட்டுக்கு அடுத்தடுத்து பயணம் மேற்கொள்கிறார். இது திமுகவுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்கிறார்களே..?
இதற்குப் பலமுறை அளித்த பதில்தான். அப்படிச் சொன்னவர்கள் எல்லாம் இன்று காணாமல் போய்விட்டார்கள். வெள்ளம் பாதித்த போது மக்களைச் சந்திக்க வராத பிரதமர், தேர்தல் நேரத்தில் வருவது எதற்காக என்று மக்கள் நன்கு அறிவார்கள்.
தேசிய அளவில் பாஜக கூட்டணியே வெல்லும் என கூறப்படும் நிலையில், தமிழ்நாட்டில் திமுக அணி வென்றால்கூட என்ன பயன்?
மதச்சார்பற்ற இந்தியா கூட்டணிக்கு நிச்சயமாக மக்கள் வாக்களிப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. வட மாநிலங்களில் பாஜகவினர் பலர் தங்களுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைத்தும் போட்டியிலிருந்து பின் வாங்கிக்கொண்டுதான் உள்ளார்கள். அவர்கள் தங்கள் வெற்றி வாய்ப்பின் மீது நம்பிக்கையற்று இருக்கிறார்கள்.
காங்கிரஸ் 100 இடங்கள் பிடிப்பதுகூட சாத்தியமில்லை என்று கணிப்புகள் கூறுகின்றனவே?
கணிப்புகளை பொருட்படுத்த தேவையில்லை என்று கலைஞர் எங்களுக்கு கூறியுள்ளார். தீர்ப்பை மக்கள் எழுதுவார்கள்.
காங்கிரஸ் கட்சி விட்டுக் கொடுத்து பேசியிருந்தால் இண்டியா கூட்டணியை இன்னும் வலிமைப் படுத்தியிருக்கலாம் என்று கூறப்படுவது குறித்து..?
இந்தியாவின் பன்முகத்தன்மையை உணர்ந்தும் புரிந்தும் உருவான கூட்டணிதான் இண்டியா கூட்டணி. இக்கூட்டணி, இப்போதும் வலிமையாகத் தான் உள்ளது.
வரும் தேர்தலுக்குப் பிறகு தேசிய அரசியலில் என்னென்ன மாற்றங்கள் இருக்கும் என்று யூகிக்கிறீர்கள்?
முதலில் ஒன்றியத்தில் ஆட்சி மாற்றமிருக்கும். கடந்த பத்தாண்டுகளில் மாநிலங்கள் இழந்த உரிமைகள் மீட்கப்படும். கருத்துச் சுதந்திரம் மீட்டளிக்கப்படும். சமூகநீதி கொள்கைகளை இந்தியா முழுமைக்கும் செயல்வடிவமாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.
தூத்துக்குடி தொகுதி வாக்காளர்களிடம் நீங்கள் என்னென்ன அம்சங்களை பிரதானமாக கூறி பிரச்சாரம் செய்கிறீர்கள்?
நாட்டின் இரண்டாவது விடுதலைப் போரான இந்த தேர்தலில் பாஜக வீழ்த்தப்பட வேண்டும். வரும் தலைமுறைக்குப் பாதுகாப்பான நாடு வேண்டுமென்றால்; ஜனநாயகம் காக்கப்பட வேண்டுமென்றால் இண்டியா கூட்டணி வெல்ல வேண்டும், என்பதைத் தான் கூறிவருகிறேன்.
தூத்துக்குடியில் உங்கள் வெற்றி வாய்ப்பு பற்றி கூறுங்கள்?
திமுக அரசின் மீது மக்கள் நம்பிக்கை வைத்துள்ளார்கள். தூத்துக்குடி மக்களின் நம்பிக்கையை பெற்றிருக்கிறேன் என நம்புகிறேன். நிச்சயம் மீண்டும் என்னை தேர்ந்தெடுப்பார்கள்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
2 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
13 hours ago