தமிழக அனல்மின் நிலையங்களில் மின்னுற்பத்தி திறன் அதிகரிப்பு

By செய்திப்பிரிவு

சென்னை: தமிழ்நாடு மின்வாரியத்தின் அனல்மின் நிலையங்களில் மின்னுற்பத்தித் திறன் 5,120 மெகாவாட்டாக அதிகரித்துள்ளது. தமிழ்நாடு மின்வாரியத்துக்கு 4,320 மெகாவாட் திறனில் 5 அனல்மின் நிலையங்கள் உள்ளன. திருவள்ளூர் மாவட்டம், அத்திப்பட்டில் ரூ.10,158 கோடி செலவில் 800 மெகாவாட் திறனில் வடசென்னை-3 அனல்மின் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.

இது, மற்ற மின்நிலையங்களை விட அதிக திறன் உடையது. இங்கு கடந்த மாதம் 7-ம் தேதி முதல் மின்னுற்பத்தி தொடங்கப்பட்டுள்ளது. இதையடுத்து, மின்வாரிய அனல்மின் நிலையங்களின் ஒட்டுமொத்த மின்னுற்பத்தித் திறன் 5,120 மெகாவாட்டாக அதிகரித்துள்ளது.

இதுகுறித்து, மின்வாரிய அதிகாரிகள் கூறியதாவது: நாளுக்கு நாள் அதிகரித்து வரும் மின்தேவையைப் பூர்த்தி செய்ய தமிழ்நாடு மின்வாரியம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தமிழகத்தில் தற்போது மின்வாரியத்துக்கு தூத்துக்குடியில் 1,050 மெகாவாட் திறனும், சேலம் மாவட்டம் மேட்டூரில் 840 மெகாவாட் திறனும், மேட்டூர் விரிவாக்கத்தில் 600 மெகாவாட் திறனும், வடசென்னையில் 630 மெகாவாட் திறனும், வடசென்னை விரிவாக்கத்தில் 1,200 மெகாவாட் திறனும் கொண்ட அனல் மின்னுற்பத்தி நிலையங்கள் உள்ளன.

இந்நிலையில், வடசென்னை-3 அனல்மின் நிலையத்தில் 800 மெகாவாட் மின்னுற்பத்தி தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம், மின்வாரியத்துக்குச் சொந்தமான அனல் மின்னுற்பத்தி நிலையங்களில் மின்னுற்பத்தித் திறன் 5,120 மெகாவாட்டாக அதிகரித்துள்ளது. இதன் மூலம், இக்கோடைக் காலத்தில் ஏற்படும் மின்தேவையை மின்வாரியம் எளிதாக பூர்த்தி செய்யும். இவ்வாறு அதிகாரிகள் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE