தேர்தல் நடத்தை விதிமுறைகளை காரணம் காட்டி வங்கிப் பணிக்கு புதிதாக தேர்வானோரை நியமனம் செய்வதில் தாமதம் கூடாது: அகில இந்திய வங்கி ஊழியர் சங்கம்

By செய்திப்பிரிவு

சென்னை: வங்கிகளில் புதிதாக நியமிப்பதற்காக தேர்வு செய்யப்பட்டுள்ள 25 ஆயிரம் ஊழியர்களை தேர்தல் நடத்தை விதிகளை காரணம் காட்டி பணி நியமனம் செய்வதில் காலம் தாழ்த்தக் கூடாது என வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து, அகில இந்திய வங்கி ஊழியர் சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் சி.எச்.வெங்கடாச்சலம், இந்திய வங்கிகள் கூட்டமைப்பின் தலைமை செயல் அதிகாரி சுனில் மேத்தாவுக்கு அனுப்பிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாவது:

நடப்பு 2024-25-ம் ஆண்டில் வங்கிகளில் 25 ஆயிரம் கிளார்க் மற்றும் வாடிக்கையாளர் சேவை ஊழியர்களை நியமிக்க வங்கிப் பணியாளர் தேர்வு நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டு தேர்வு நடத்தி முடிவுகளையும் அறிவித்துள்ளது.

இந்நிலையில், தேர்தல் ஆணையம், மத்திய நிதி சேவைகள் துறை செயலாளருக்கு எழுதியுள்ள கடிதத்தில், தேர்தல் முடியும் வரை வங்கிஅதிகாரிகளுக்கு பதவி உயர்வும், பணியிட மாறுதல்களையும் வழங்கலாம். ஆனால், புதிதாக ஊழியர்களை பணி நியமனம் செய்யக்கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வங்கிப் பணியாளர் தேர்வு நிறுவனம், பல மாதங்களுக்கு முன்பே ஆட்களை தேர்வு செய்வதற்கான நடைமுறைகளை தொடங்கி விட்டது. பொதுத் தேர்தல் அறிவிப்பு வெளியான பிறகு இந்த நடைமுறைகள் தொடங்கப்படவில்லை. எனவே, தேர்தல் நடத்தை விதிமுறைகள் ஊழியர்களை தேர்வு செய்யும்நடைமுறைக்கு பொருந்தாது.

ஏற்கெனவே, வங்கிகளில் ஊழியர் பற்றாக்குறை நிலவி வருகிறது. குறிப்பாக, எழுத்தராக பணியாற்றிய ஊழியர்கள் அதிகாரிகளாக பதவி உயர்வு பெற்றுள்ளனர். இதனால், வங்கிகளில் எழுத்தர் பணியிடங்கள் காலியாக உள்ளன.

அத்துடன், வங்கி ஊழியர்கள் பலர் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதனால், வங்கிகளில் வாடிக்கையாளர் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.

எனவே, வங்கி ஊழியர் கூட்டமைப்பு இப்பிரச்சினையை தேர்தல் ஆணையத்தின் கவனத்துக்கு கொண்டு சென்று தேர்வு செய்யப்பட்டுள்ள வங்கி ஊழியர்களை பணி நியமனம் செய்வதற்கான நடைமுறைகளை விரைந்து முடித்து அவர்களுக்கு பணிநியமன ஆணை வழங்குவதோடு, அவர்களை விரைவாக பணி நியமனம் செய்ய வங்கிகளை அறிவுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும். இவ்வாறு கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE