“3 தெய்வங்களின் கூட்டணி இது!” - பிரேமலதா விஜயகாந்த் பிரச்சாரம்

By செய்திப்பிரிவு

திருவண்ணாமலை: ஆரணி மக்களவைத் தொகுதியின் அதிமுக வேட்பாளர் கஜேந்திரனை ஆதரித்து, தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் திருவண்ணாமலை மாவட்டம் போளூரில் பிரச்சாரம் செய்தார்.

அப்போது அவர் பேசும்போது, “பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து தமிழக மக்களை திமுக, பாஜக அரசு ஏமாற்றுகிறது. கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் தகுதியானவர்களுக்கு ஆயிரம் ரூபாய் வழங்குவதாக கூறுகின்றனர். அப்படி என்றால், மற்றவர்கள் தகுதி இல்லாதவர்களா ? தேர்தலுக்கு முன்பு ஒரு நிலைபாடு, தேர்தலுக்கு பிறகு ஒரு நிலைபாடு என்பது தான் திராவிட மாடல் அரசு. தேர்தல் என்பதால் கச்சத்தீவு பிரச்சினையை பிரதமர் மோடி பேசுகிறார்.

கடந்த 10 ஆண்டுகள் பேசாமல் இருந்தவர், இப்போது பேசுகிறார் என்றால், எவ்வளவு சுயநலம் இருக்கிறது. காங்கிரஸ், திமுக ஆட்சியில் இருந்த போது இலங்கைக்கு கச்சத்தீவை தாரைவார்த்து கொடுத்து விட்டனர். சுயநல அரசியல் செய்யும் பாஜக மற்றும் திமுக அரசுக்கு சரியான பாடத்தை மக்கள் புகட்ட வேண்டும். மறைந்த தலைவர்கள் ஜெயலலிதா, விஜயகாந்த் அமைத்த கூட்டணி தொடர்கிறது. நானும், பழனிசாமியும் கொடுத்த வாக்குறுதி நிறைவேறும் என்ற நம்பிக்கை உங்களுக்கு உள்ளது.

துளசி கூட வாசம் மாறும், நமது தவசி வாசம் மாறாது. அன்னதான பிரபுவாகவே வாழ்ந்தவர். மக்கள் மனதில் வாழ்கிறார். மக்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்த 3 தெய்வங்களின் கூட்டணி வெற்றி பெறும். சத்துணவு திட்டத்தை எம்ஜிஆரும், அம்மா உணவகத்தை ஜெயலலிதாவும், ஏழை மக்களுக்கு விஜயகாந்த் உணவு வழங்கினார். இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளர் கஜேந்திரனை வெற்றி பெற செய்ய வேண்டும்” என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE