முதல்வர் ஸ்டாலினுக்கு அண்ணாமலை சவால்: “முதல்வர் ஸ்டாலின் வீதிக்கு வந்தால் மக்கள் அவர்மீது எவ்வளவு கோபத்தில் இருக்கிறார்கள் என்பது தெரிந்துவிடும். முதல்வர் வீதி வீதியாக வர வேண்டும். ஆனால், அவர் வருவதில்லை. முதல்வரை ரோடு ஷோ வர சொல்லுங்கள் பார்க்கலாம். தமிழகத்தின் ஒரு நகரத்தை தேர்ந்தெடுத்து 10 கிலோ மீட்டர் வரை அவரே ஒரு ரோடு ஷோ வரட்டும். எத்தனை பேர் முதல்வரைக் காண வருகிறார்கள் என்பதை பார்க்கலாம், நான் சவால் விடுகிறேன்.
பிரதமர் மோடி கோவையில் ரோடு ஷோ வந்து சென்று இருக்கிறார். அமித் ஷா தேனியில் ரோடு ஷோ வர இருக்கிறார். மீண்டும் மோடியின் முக்கியமான ரோடு ஷோ ஒரு இடத்தில் நடக்க இருக்கிறது. அவர்கள் இரண்டு மூன்று மணி நேரம் நின்று மக்களை சந்திக்கிறார்கள். முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒரு மாய உலகில் அவரே கட்டிய கோட்டைக்குள் அமர்ந்து கொண்டு பிரதமரை குறை சொல்கிறார்” என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகளுக்கு தடை: ஏப்ரல் 19 காலை 7 மணியிலிருந்து ஜூன் 1-ம் தேதி மாலை 6.30 மணி வரை, வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளை நடத்துவது மற்றும் அதனை அச்சு ஊடகம் அல்லது மின்னணு ஊடகம் வாயிலாக வெளியிடுவது அல்லது வேறு ஏதேனும் முறையில் பரப்புவது ஆகியவை தடை செய்யப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
» மருந்துகளின் விலை 12% வரை உயர்வா? - மத்திய அரசு மறுப்பு
» பாஜகவின் ‘இணைய’ ஆளுமை... யார் இந்த தவால் படேல்? | 2024 தேர்தல் கள புதுமுகம்
EVM-ல் கடந்த கால நடைமுறைகளை பின்பற்ற வேண்டும்: திமுக: “காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை, இவிஎம் இயந்திரம் மீது அனைத்து அரசியல் கட்சிகளுக்கும், நியாயமான சந்தேகம் வந்திருக்கிறது. இந்த சந்தேகத்தைப் போக்க வேண்டியது தேர்தல் ஆணையத்தின் கடமை. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் கடந்தகால நடைமுறைகளை பின்பற்ற வேண்டும்” என்று திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி வலியுறுத்தி கூறியுள்ளார்.
“மோடியின் குடும்பம் என்பது ‘ED - IT - CBI’ தான்!” - ஸ்டாலின்: “பேச நா இரண்டுடையாய் போற்றி” எனப் பேரறிஞர் அண்ணா அன்று சொன்னது யாருக்குப் பொருந்துகிறதோ இல்லையோ… ஊழல்வாதிகளை எல்லாம் கட்சியில் இணைத்து உத்தமர்களாக்கிவிட்டு, ஊழலை ஒழிப்போம் எனக் கூசாமல் புளுகும் பிரதமருக்கு நன்றாகவே பொருந்துகிறது மோடியின் குடும்பம் என்பது ‘E.D – I.T. – C.B.I.’தான்!" என்று பாஜகவை முதல்வர் ஸ்டாலின் விமர்சித்துள்ளளார்.
“தமிழகம் முழுவதும் அதிமுக அலை வீசுகிறது” - பழனிசாமி: “நான் தமிழகம் முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொள்ளும்போது, எங்கு பார்த்தாலும், அதிமுக அலைதான் வீசிக் கொண்டிருக்கிறது. 520 கவர்ச்சிகரமான அறிவிப்புகளை அறிவித்து ஆட்சியில் அமர்ந்த கட்சி திமுக. இந்த வாக்குறுதிகளில் இதுவரை 10 சதவீதத்தைக்கூட அவர்கள் நிறைவேற்றவில்லை” என்று சேலத்தில் நடந்த அதிமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார்.
பாஜகவில் இணைந்த குத்துச்சண்டை வீரர் விஜேந்தர் சிங்: 2008 ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற குத்துச்சண்டை வீரர் விஜயேந்தர் சிங், காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில் இணைந்துள்ளார். இவர், கடந்த 2019 மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். ஹரியாணாவை ஒட்டியுள்ள தென் டெல்லி தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். இதனிடையே, தற்போது நடக்கவுள்ள மக்களவை தேர்தலில் உத்தரப் பிரதேசத்தின் மதுரா தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட ஆர்வம் காட்டியதாக கூறப்பட்டது. இந்தநிலையில், எதிர்பாராத ட்விஸ்டாக காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில் இணைந்துள்ளார்.
வயநாடு தொகுதியில் ராகுல் காந்தி வேட்புமனு தாக்கல்: காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி புதன்கிழமை கேரள மாநிலம் - வயநாடு தொகுதியில் வேட்பு மனு தாக்கல் செய்தார். அப்போது அவரது சகோதரி பிரியங்கா காந்தி உடன் இருந்தார்.
ராகுல் காந்தி போட்டியிடும் வயநாடு தொகுதியில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிடும் ஆனி ராஜாவும் புதன்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தார். இந்திய அளவில் எதிர்க்கட்சிகளின் இண்டியா கூட்டணியில் கம்யூனிஸ்ட் கட்சிகளும், காங்கிரஸும் அங்கம் வகித்து வருகின்றன. எனினும், கேரளாவில் இரு தரப்புமே வலுவான வேட்பாளர்களுடன் எதிரெதிர் அணியாக களம் காண்பது குறிப்பிடத்தக்கது.
“ஜனநாயகம், அரசியல் சாசனத்தை காப்பதற்கான தேர்தல் இது” - ராகுல்: வேட்புமனு தாக்கலுக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி, "நாட்டின் ஜனநாயகம் மற்றும் அரசியல் சாசனத்துக்கான போராட்டம்தான் இந்தத் தேர்தல். ஒருபக்கம் நாட்டின் ஜனநாயகத்தையும் அரசியல் சாசனத்தையும் அழிக்க நினைக்கும் சக்திகள் இருக்கிறார்கள். மறுபக்கம், நாட்டின் ஜனநாயகத்தையும் அரசியல் சாசனத்தையும் பாதுகாப்பதற்கான சக்தியாக நாங்கள் நிற்கிறோம்” என்று தெரிவித்தார்.
4.5 கிலோ எடை குறைந்தாரா கேஜ்ரிவால்? - திஹார் சலசலப்பு: “கேஜ்ரிவாலுக்கு நீரிழிவு நோய் இருக்கிறது. தனக்கு கடுமையான உடல்நல பிரச்சினைகள் இருந்தபோதிலும் தேசத்துக்கு சேவை செய்ய 24 மணி நேரமும் உழைக்கிறார். கைது செய்யப்பட்டதிலிருந்து இப்போது வரை அரவிந்த் கேஜ்ரிவால் நான்கரை கிலோ எடை குறைந்துள்ளார். இது மிகவும் கவலை அளிக்கிறது. பாஜக அவரது உடல்நிலையை ஆபத்தில் ஆழ்த்தியுள்ளது. கேஜ்ரிவாலுக்கு ஏதாவது நடந்தால், நாடு மட்டுமல்ல, கடவுள் கூட அவர்களை மன்னிக்க மாட்டார்” என்று டெல்லி அமைச்சர் அதிஷி குற்றம்சாட்டியுள்ளார்.
அதிஷியின் இந்த குற்றச்சாட்டை திஹார் சிறை வட்டாரங்கள் மறுத்துள்ளன. இது தொடர்பாக பேசிய திஹார் சிறை அதிகாரிகள், “கேஜ்ரிவால் சிறைக்கு அழைத்து வரப்பட்டபோது இருந்த அவரது உடல் எடையில் தற்போது எந்த மாற்றமும் இல்லை. அவரது ரத்த சர்க்கரை அளவும் தற்போது சாதாரணமாகவே உள்ளது தற்போது வரை அவர் நலமாக இருக்கிறார்” என்று தெரிவித்தனர்.
மீண்டும் புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை: சென்னையில் தங்கம் விலை புதன்கிழமை சவரனுக்கு ரூ.560 அதிகரித்து புதிய உச்சத்தைத் தொட்டது. ஒரு கிராம் தங்கம் ரூ.6,500-க்கும், ஒரு சவரன் ரூ.52,000-க்கும் விற்பனை செய்யப்பட்டது. நாளுக்கு நாள் தங்கத்தின் விலை அதிகரித்து வருவது மக்களிடையே பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
முருகன், ஜெயக்குமார், ராபர்ட் பயஸ் இலங்கைக்கு அனுப்பி வைப்பு: முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுவிக்கப்பட்டு திருச்சி முகாமில் தங்க வைக்கப்பட்டு இருந்த முருகன், ஜெயக்குமார், ராபர்ட் பயஸ் ஆகியோர் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
அமித் ஷாவின் தமிழக பயணம் ரத்து: மக்களவைத் தேர்தலையொட்டி, ஏப்ரல் 4 மற்றும் ஏப்ரல் 5-ம் தேதிகளில் உள்துறை அமைச்சர் அமித்ஷா பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து தமிழகத்தில் பிரச்சாரம் மேற்கொள்ளவிருந்தார். இந்நிலையில், உடல்நலக்குறைவு காரணமாக, அமித் ஷாவின் சுற்றுப்பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது.
'தேர்தல் வந்தால் கைது செய்யக் கூடாதா?' : "தேர்தல் வந்தால் கைது செய்யக் கூடாது எனச் சொல்வது மோசமான வாதம். நாட்டை கொள்ளையடித்தாலும் தேர்தல் வந்தால் கைது செய்யக் கூடாது எனப் பேசுவது தவறு" என்று டெல்லி முதல்வர் கேஜ்ரிவால் ஜாமீன் வழக்கில் அமலாக்கத் துறை வாதிட்டுள்ளது. மேலும், போதுமான ஆதாரங்கள் இருந்ததன் அடிப்படையில் கேஜ்ரிவால் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கின் முறைகேட்டில் கேஜ்ரிவாலின் தொடர்பை விசாரணையின் முடிவில்தான் தெரிந்துகொள்ள முடியும்" என்று தெரிவித்தது.
''எனது மைத்துனர் டெபாசிட் இழக்க வேண்டும்” - அன்புமணி: “திருமண மண்டபம் மாறி கடலூர் வந்துள்ள எனது மைத்துனரான விஷ்ணு பிரசாத் டெபாசிட் இழக்க வேண்டும். உலகமறிந்த நம்ம மாப்பிள்ளை தங்கர் பச்சானே எனக்கு முக்கியம்” என திட்டக்குடியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பாமக தலைவர் அன்புமணி பேசினார். பாஜக கூட்டணியில் உள்ள பாமக, கடலூர் தொகுதியில் தனது கட்சி சார்பில் திரைப்பட இயக்குநர் தங்கர் பச்சானை நிறுத்தியுள்ளது. இங்கு பாஜக கூட்டணிக்கு எதிராக திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி சார்பில் விஷ்ணு பிரசாத் போட்டியிடுகிறார். இவர் அன்புமணியின் மைத்துனர் என்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழகத்தில் பாஜக ஒரு தவழும் குழந்தை”: “தேசிய அளவில் பாஜக கட்சி பெரிய ஆளாக இருந்தாலும், தமிழகத்தை பொறுத்தவரை பாஜக ஒரு தவழுகின்ற குழந்தை” என கிருஷ்ணகிரியில் அதிமுக துணை பொதுச் செயலாளர் கே.பி.முனுசாமி எம்எல்ஏ கூறியுள்ளார்.
மோடி ஆதரவாளர்களுக்கு சசி தரூர் பதில்: "நாடாளுமன்ற ஜனநாயகத்தில் நாம் தனிநபரைத் தேர்ந்தெடுப்பது இல்லை. மாறாக, ஒரு கட்சியையோ அல்லகு கூட்டணியையோ தான் தேர்ந்தெடுக்கிறோம்" என்று காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர் தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சிகளின் பிரதமர் வேட்பாளர் குறித்த கேள்விக்கு இவ்வாறு அவர் பதிலளித்தார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago