“தமிழகத்தில் பாஜக ஒரு தவழும் குழந்தை” - அதிமுக துணை பொதுச் செயலர் கே.பி.முனுசாமி

By எஸ்.கே.ரமேஷ்

கிருஷ்ணகிரி: “தேசிய அளவில் பாஜக கட்சி பெரிய ஆளாக இருந்தாலும், தமிழகத்தை பொறுத்தவரை பாஜக ஒரு தவழுகின்ற குழந்தை” என கிருஷ்ணகிரியில் அதிமுக துணை பொதுச் செயலாளர் கே.பி.முனுசாமி எம்எல்ஏ கூறியுள்ளார்.

கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதியில் அதிமுக வேட்பாளர் ஜெய பிரகாஷை ஆதரித்து, கிருஷ்ணகிரி நகரில் பிரச்சாரம் மேற்கொண்ட அக்கட்சியின் துணை பொதுச் செயலாளர் கே.பி.முனுசாமி எம்எல்ஏ பேசியது: "ஓட்டப் பந்தயத்தில் முன்னணியில் செல்பவர்கள் அடுத்ததாக யார் வருகிறார்கள் என்பதை தான் பார்ப்பார்கள். அவரை தோற்கடிக்க வேண்டும் என்கிற சிந்தனையில்தான் ஓடிக்கொண்டிருப்பார்கள்.

தற்போதைய தேர்தல் களம் என்கிற ஓட்டப் பந்தயத்தில் அதிமுக முன்னணியில் ஓடிக்கொண்டிருக்கிறது. எங்கள் பின்னால் திமுக ஓடி வந்து கொண்டிருக்கிறது. அதனால், திமுகவை பற்றிதான் பேசி வாக்கு சேகரிப்போம். வெற்றிப் பாதைக்கு வர முடியாமல் கடைசி இடத்தில் இருப்பவர்களை பற்றி பேசுவதற்கு வாய்ப்பு இல்லை. அந்தக் கடைசி இடத்தில்தான் பாஜக உள்ளது.

நேரடி களத்தில் வருபவர்களை பற்றிதான் பேச முடியும். பாஜகவை சரியான நேரத்தில் விமர்சிப்போம். இதுகுறித்து ஸ்டாலின் அவர்கள் கவலைப்பட வேண்டிய தில்லை. மேலும், தேசிய அளவில் பாஜக பெரிய ஆளாக இருந்தாலும், தமிழகத்தை பொறுத்தவரை பாஜக ஒரு தவழுகின்ற குழந்தையாகும்.

தமிழக மக்களிடத்திலேயே உங்களுடைய எந்த விதமான சித்து விளையாட்டுகளும் எடுபடாது. எம்ஜிஆர், ஜெயலலிதாவை குறித்து பிரதமர் மோடி பேசுவது, எங்கள் தலைவர்களை உண்மையாக நேசித்து கூறவில்லை. தமிழக மக்கள், எம்ஜிஆர் மீதும், ஜெயலலிதா மீதும் ஈடில்லா அன்பு கொண்டிருப்பதால், அந்த அன்பு உள்ளங்கள் மாறி நமக்கு வாக்களிக்க மாட்டார்களா என்ற சுயநலத்தோடுதான் மோடி இந்த கருத்துகளை சொல்லிக்கொண்டிருக்கிறார்” என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE