சென்னை: “தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் தொழிலதிபர்களுக்கு கோடிக்கணக்கான ரூபாயை கடனாக வாரி வழங்கியவர் நிர்மலா சீதாராமன். இதன்மூலம் அதானி, அம்பானி உள்ளிட்ட கார்ப்பரேட்டுகள் சொத்துகளை குவிப்பதற்கு துணை போனவர்” என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “பிரதமர் நரேந்திர மோடி தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி ஒன்றிலும், நேற்று சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனும் கச்சத்தீவு குறித்தும், காங்கிரஸ் கட்சி குறித்தும் அடிப்படையற்ற உண்மைக்கு புறம்பான தகவல்களை கூறியிருக்கிறார்கள்.
கச்சத்தீவு குறித்து சமீப காலத்து பேச்சுகளினால் இலங்கையில் 75 சதவிகித சிங்களர்கள் வாழ்கிற நாட்டில் சிறுபான்மையினராக உள்ள இலங்கைத் தமிழர்கள் மற்றும் இந்தியத் தமிழர்கள் ஆக மொத்தம் 35 லட்சம் தமிழர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளது.
இலங்கைத் தமிழர்களின் 40 ஆண்டு கால துயரை போக்கிட அன்றைய பிரதமர் ராஜீவ் காந்தி இலங்கை அரசோடு ஒப்பந்தம் போட்டு அதற்காக தமது உயிரை துறந்து, இன்றைக்கு இலங்கைத் தமிழர்களுக்கு ஒரே பாதுகாப்பாக இருப்பது அவர் போட்ட ஒப்பந்தத்தினால் இலங்கை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 13-வது திருத்தம் தான்.
» அரசுப் பணிகளில் பெண்களுக்கு 50% இடங்கள்: காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி வாக்குறுதி
» ரூ.1,800 கோடி செலுத்த காங்கிரஸ் கட்சிக்கு நோட்டீஸ்: வருமான வரித் துறை அதிகாரிகள் அனுப்பினர்
தமிழர்களுடைய உரிமைகளின் பாதுகாப்பிற்கு குந்தகம் விளைவிக்கின்ற வகையில் கச்சத்தீவு பிரச்சினை குறித்து நரேந்திர மோடியும், நிர்மலா சீதாராமனும் பேசியது இலங்கைத் தமிழர்களிடையே பதற்றமான சூழலை உருவாக்கியுள்ளது. இந்நிலை குறித்து அங்கே வெளிவருகிற பிரபல ஆங்கில நாளேடுகள் தலையங்கம் எழுதியிருக்கின்றன.
அதில், டெய்லி மிரர் என்ற ஆங்கில நாளேட்டில் எழுதியுள்ள தலையங்கத்தில், ‘அதிகாரத்தின் உச்சத்தில் இருப்பவர்களின் தொடர்ச்சியான தூண்டிவிடும் பேச்சுகள், நம்முடைய தேசம் தனது பாதுகாப்பிற்கான உத்தரவாதத்தை வேறு எங்கிருந்தாவது (சீனா உட்பட) நாடும்படி கட்டாயப்படுத்திவிடும். அயல்நாட்டு உறவுகளை அசோக மன்னனிடமிருந்தும், வியூகங்களை கௌடியர்களிடமிருந்தும் இந்த தேசம் கற்று வைத்திருக்கிறது. இருந்தபோதிலும், பக்கத்தில் இருப்பவன் விரோதி.
அவனுக்கு பக்கத்தில் இருப்பவன் நண்பன் என்கிற கௌடில்யரின் ராஜமண்டல கோட்பாட்டை இலங்கை பயன்படுத்த வேண்டியிருக்குமானால் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் அது துயரமாகத் தான் அமைய முடியும்” என்று குறிப்பிட்டிருக்கிறது. இதன்மூலம் பிரதமருடைய பேச்சுகளால் இலங்கையுடனான நமது உறவுகள் பாதிக்கப்படுமேயானால் ஏற்கனவே சீனாவின் வலையில் சிக்கியிருக்கிற அந்நாடு, நமது புவிசார் பாதுகாப்பிற்கு மிகப்பெரிய அச்சுறுத்தலுக்கு ஆளாகிவிடும் என்பதை மறந்து பிரதமர் மோடி பேசுவதை அந்நாளேடுகள் கவலையோடு எச்சரித்திருக்கின்றன.
நுணலும் தன் வாயால் கெடும் என்பார்களே, அதற்கு மோடியும், நிர்மலா சீதாராமனும் சிறந்த உதாரணமாகும். ஒரு மாநிலத் தேர்தலில் அரசியல் ஆதாயம் தேடுவதற்காக இந்தியாவின் பாதுகாப்பு நலன்களை தாரை வார்க்கிற பிரதமர் மோடியை எவருமே மன்னிக்க மாட்டார்கள்.
சீனாவோடு 13 முறை பேச்சுவார்த்தை நடத்தியும், ஆக்கிரமிக்கப்பட்டுள்ள 2000 சதுர கி.மீ. நிலத்தை மீட்பதற்கு பிரதமர் மோடி இதுவரை எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை. ஆனால், இந்திய நிலத்தை சீனா ஆக்கிரமிக்கவில்லை எனக் கூறி நற்சான்றிதழ் வாங்கியதை தேசபக்தியுள்ள எந்த இந்தியரும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.
இந்நிலையில், சீன நாடு நான்காவது முறையாக அருணாசல பிரதேச பகுதியில் 30 இடங்களுக்கு புதிய பெயரை சூட்டிய பட்டியலை வெளியிட்டிருக்கிறது. இதையெல்லாம் தடுத்து நிறுத்த முடியாத பிரதமர் மோடி, கச்சத்தீவைப் பற்றி பேசுகிறார். இதன்மூலம் அரசியல் ஆதாயத்திற்காக பிரதமர் மோடி இந்தியாவின் நலனுக்கு எதிராக செயல்படத் தயங்க மாட்டார் என்பது இன்றைக்கு அம்பலமாகியிருக்கிறது.
நிர்மலா சீதாராமன் காங்கிரஸ் கட்சியைப் பற்றி கவலைப்படுகிறார். நிதியமைச்சராக இருக்கிற நிர்மலா சீதாராமன், வங்கிகளில் ரூபாய் 53,000 கோடி கடன் வாங்கிய நிரவ் மோடி, மெகுல் சோக்ஷி உள்ளிட்ட 23 பேர் வெளிநாடுகளுக்கு தப்பி ஓடிய அவர்களை 10 ஆண்டுகளில் மீட்டெடுக்க நிதியமைச்சகம் என்ன நடவடிக்கை எடுத்தது?
தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் தொழிலதிபர்களுக்கு கோடிக்கணக்கான ரூபாயை கடனாக வாரி வழங்கியவர் நிர்மலா சீதாராமன். இதன்மூலம் அதானி, அம்பானி உள்ளிட்ட கார்ப்பரேட்டுகள் சொத்துகளை குவிப்பதற்கு துணை போனவர்.
கார்ப்பரேட்டுகள் வாங்கிய கடனில் 2014 முதல் 2023 வரை வாராக் கடன் ரூபாய் 66 லட்சத்து 50 ஆயிரம் கோடி. இதில் தள்ளுபடி செய்யப்பட்டது ரூபாய் 14 லட்சத்து 56 ஆயிரம் கோடி. இதில் பெரும் தொழிலதிபர்கள் வாங்கிய கடன் ரூபாய் 7 லட்சத்து 40 ஆயிரத்து 968 கோடி தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இது தள்ளுபடி செய்யப்பட்ட கடனில் 48.36 சதவிகிதம் ஆகும். இதன்மூலம் நிர்மலா சீதாராமன் தனது நிதியமைச்சகத்தை தொழிலதிபர்களுக்காக பயன்படுத்தினார் என்பதை ஆதாரத்தோடு தெரிந்து கொள்ளலாம்.
விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்யாத நிர்மலா சீதாராமன், கார்ப்பரேட்டுகளின் வாராக் கடனை தள்ளுபடி செய்ததை விட விவசாயிகள் விரோத நடவடிக்கை வேறு என்ன இருக்க முடியும் ? எனவே, பிரதமர் மோடி, நிர்மலா சீதாராமன், 20 ஆயிரம் புத்தகங்களை படித்த அறிவு ஜீவி என்று தன்னைத் தானே கூறிக் கொள்கிற அண்ணாமலை ஆகியோரின் ஆதாரமற்ற அவதூறான கோயபல்ஸ் பிரச்சாரத்தினால் தமிழக மக்கள் ஏமாற மாட்டார்கள்.
கடந்த மக்களவைத் தேர்தலை விட வருகிற தேர்தலில் மிகத் தெளிவாக தமிழகத்தில் இண்டியா கூட்டணிக்கு மக்கள் ஆதரவளித்து வெற்றி பெறச் செய்வார்கள் என்பதில் எவருக்கும் எந்த சந்தேகமும் வேண்டாம். நாற்பதும் நமதே, நாளையும் நமதே. எதிர்கால தமிழகம் விடியல் பெற தமிழக மக்களின் ஆதரவோடு நமது வெற்றியை உறுதி செய்வோம்” எனத் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
36 mins ago
தமிழகம்
48 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago