வேலூர்: வரலாற்றில் இல்லாத அளவுக்கு கடந்த 10 ஆண்டுகளில் மீனவர்கள் கைது, துப்பாக்கிச்சூடு நடந்தபோது இலங்கையை கண்டிக்காத பிரதமர் மோடி, இப்போது கச்சத்தீவு பிரச்சினையை பேசுகிறார். கச்சத்தீவு விவகாரம் இப்போது பாஜகவுக்கு எதிராகவே திரும்பிவிட்டது என்று வேலூரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
திமுக வேட்பாளர்கள் கதிர்ஆனந்த் (வேலூர்), ஜெகத்ரட்சகன் (அரக்கோணம்) ஆகியோருக்கு வாக்கு சேகரிக்கும் வகையில் வேலூர் கோட்டை மைதானத்தில் நேற்று மாலை பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:
முதல் விடுதலை போர் தொடங்கிய வேலூருக்கு வந்துள்ளேன். ஜனநாயகத்தை காக்க இரண்டாம் விடுதலை போராட்டத்துக்கு வந்துள்ளேன். தமிழ்நாட்டுக்கு ‘பார்ட் டைம்’ (பகுதிநேர) அரசியல்வாதியாக வருகிறார் பிரதமர் மோடி. பொய்களையும், அவதூறுகளையும் துணைக்கு அழைத்துக்கொண்டு தேர்தலுக்காக வருகிறார். வெள்ளம் வந்தால் வரமாட்டார். நிதி கேட்டால் தரமாட்டார். சிறப்பு திட்டம் கேட்டால் கொடுக்க மாட்டார். தமிழ்நாட்டுக்கு துரோகம் செய்யும் ‘பார்ட் டைம்’ அரசியல்வாதியை நீங்கள் புறக்கணிக்க வேண்டும். தேர்தல் முடிந்ததும் தமிழ்நாடு பக்கம் அவர் வரமாட்டார்.
அதிமுக அதிகாரத்தில் இருந்தபோது சிறுபான்மையினர்களின் முதுகில் குத்தியது. இப்போது பாஜகவுடன் கள்ளக்கூட்டணி அமைத்து சிறுபான்மையினர் மீது அக்கறை காட்டுவதுபோல் பழனிசாமி நாடகம் ஆடுகிறார். ஜூன் 4-ம் தேதிக்கு பிறகு சிஏஏ சட்டம் ரத்து செய்யப்படும்.
பழைய சம்பவங்கள், பொய்யான கதைகள் சொல்லி அதன் மூலம் மக்களை குழப்பி தேர்தல் ஆதாயம் அடைய முடியுமா என முயற்சி செய்கிறார். அதற்குத்தான் இப்போது கச்சத்தீவு பிரச்சினையை பேசுகிறார். இந்திய அரசு கச்சத்தீவை இலங்கைக்கு கொடுத்ததை இப்போது பேசுகிறார்கள். இது அவர்களுக்கு எதிராகவே திரும்பிவிட்டது. தேன் கூட்டில் கை வைத்ததுபோல் பாஜக முழிக்கிறது. கடந்த 2014-ல் ஆட்சிக்கு வந்த பாஜக உச்ச நீதிமன்றத்தில் கச்சத்தீவை மீட்பதாக சொல்லவில்லை.
கடந்த 10 ஆண்டுகளில் எத்தனையோ முறை இலங்கைக்கு பயணம் செய்த மோடி ஒருமுறையாவது கச்சத்தீவை திரும்ப கேட்டாரா? இலங்கை அதிபரை சந்தித்தபோதெல்லாம் கச்சத்தீவு இந்தியாவுக்கு சொந்தம் என்று சொல்லவில்லையே. அப்போதெல்லாம் மோடிக்கு கச்சத்தீவு ஞாபகம் இல்லை. நேரு, இந்திரா காந்தி காலத்தில் நடந்தது எல்லாம் ஞாபகம் இருக்கும் மோடிக்கு, 2 ஆண்டுகளுக்கு முன்பு சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ‘‘ஜிஎஸ்டி நிலுவைத் தொகை தரவேண்டும், நீட் விலக்கு அளிக்க வேண்டும்’’ என பல கோரிக்கைகளை வைத்தேன். அதில் முதல் கோரிக்கையாக, ‘‘கச்சத்தீவை மீட்டு மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமையை மீட்க வேண்டும்’’ என்று கோரிக்கை வைத்தேன். அந்த கோரிக்கை மனுவைக்கூட படித்தீர்களா?
ஆர்டிஐ விண்ணப்பம் போட்ட நான்கு நாளில் எப்படி பதில் வருகிறது. இரண்டாவதாக வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், கடந்த 2015-ல் துறை செயலராக இருந்தபோது கச்சத்தீவு இந்தியாவின் பகுதியாக எப்போதும் இல்லை என்று தகவல் கொடுத்தார். இப்போது, தேர்தல் வருவதால் தங்கள் விருப்பத்துக்கு ஏற்ப தகவலை மாற்றி கொடுக்கிறார். மூன்றாவதாக கடந்த பல ஆண்டுகளாக கச்சத்தீவை பற்றி நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியபோது உரிய பதில் அளிக்கவில்லை.
எத்தனையோ பேர் ஆர்டிஐ விண்ணப்பம் அளித்தபோது தெளிவான பதில் கொடுக்கவில்லை. உச்சநீதிமன்ற விசாரணையில் இருப்பதாக பதில் சொன்ன பாஜக அரசு, ஆர்டிஐ மூலம் எப்படி தவறான தகவல் தந்தார்கள்?
பாஜகவை சேர்ந்த ஒருவருக்கு வெளியுறவுத் துறை பாதுகாப்பு தொடர்பான ஆவணங்களை கொடுத்துள்ளனர். நான்காவதாக கச்சத்தீவுக்காக திடீர் கண்ணீர் வடிக்கும் மோடி, கடந்த 10 ஆண்டுகளில் வரலாற்றில் இல்லாத அளவுக்கு மீனவர்கள் கைது, துப்பாக்கிச்சூடு நடந்தபோது இலங்கையை கண்டித்தாரா.
சீனா குறித்து மோடி வாய் திறந்தாரா? அருணாச்சல பிரதேச பகுதிகளுக்கு சீனா சொந்தம் கொண்டாடி 30-க்கும் மேற்பட்ட இடங்ளுக்கு சீன மொழியில் பெயர்கள் வெளியிட்டுள்ளனர். அதற்கு என்ன சொல்லப் போகிறார்கள். இலங்கையை கண்டிக்கவும், சீனாவை எதிர்க்கவும் துணிச்சல் இல்லாத நிலையில், கச்சத்தீவு பற்றி பேசலாமா? இவ்வாறு அவர் பேசினார்.
கனடாவிலும் காலை உணவு திட்டம்; முதல்வர் பெருமிதம்: பொதுக்கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பேசும்போது, ‘‘இந்தியா மட்டுமல்ல கனடாவிலும் காலை உணவு திட்டம் தொடங்கியிருப்பதை பார்த்தேன். இது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. தேர்தலில் வாக்குறுதி தராவிட்டாலும் இத்திட்டத்துக்கு கையெழுத்திட்டேன். இன்று தமிழகம் முழுவதும் 16 லட்சம் குழந்தைகள் காலை உணவை வயிறார சாப்பிடுகின்றனர்.
1.16 கோடி பெண்கள் மாதம் ரூ.1,000 பெறுகின்றனர். இது ஸ்டாலின் தரும் தாய்வீட்டு சீதனம் என்கின்றனர். இதுதவிர, விடியல் பயணம், புதுமைப்பெண், தமிழ் புதல்வன், நான் முதல்வன் என பல திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது’’ என்று தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
6 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
17 hours ago