பயணிகளிடம் கூடுதல் கட்டண வசூல்: தனியார் பேருந்துக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் @ தருமபுரி

By எஸ்.ராஜா செல்லம்

தருமபுரி: தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே பயணிகளிடம் கூடுதல் கட்டணம் வசூலித்த தனியார் பேருந்துக்கு போக்குவரத்துத் துறையினர் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தனர். தருமபுரி - பாலக்கோடு வழித்தடத்தில் இயக்கப்படும் தனியார் பேருந்துகள் சிலவற்றில், பயணிகளிடம் நிர்ணயிக்கப்பட்டதை விட கூடுதலாக கட்டணம் வசூலிப்பதாக மாவட்ட ஆட்சியருக்கு தொடர்ந்து புகார் சென்றது.

அதைத் தொடர்ந்து, இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க போக்குவரத்துத் துறையினருக்கு மாவட்ட ஆட்சியர் சாந்தி உத்தரவிட்டார். அதன்படி, பாலக்கோடு மோட்டார் வாகன ஆய்வாளர் வெங்கிடுசாமி தலைமையிலான குழுவினர் 2-ம் தேதி பாலக்கோடு அடுத்த சோமனஅள்ளி புறவழிச் சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது தருமபுரியிலிருந்து பாலக்கோடு நோக்கி வந்த தனியார் பேருந்து ஒன்றை நிறுத்தி சோதனை மேற்கொண்டனர். மேலும், பேருந்து பயணிகளிடம் பயண சீட்டை பெற்றும் சோதனை மேற்கொண்டனர். அப்போது, அரசு நிர்ணயம் செய்துள்ள கட்டணத்தைவிட ரூ.2 முதல் ரூ.5 வரை கூடுதலாக கட்டணம் வசூலிக்கப்பட்டு இருந்தது தெரிய வந்தது.

எனவே, அந்த பேருந்துக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்க மோட்டார் வாகன ஆய்வாளர் மாவட்ட ஆட்சியரிடம் பரிந்துரை செய்துள்ளார். மேலும், இதேபோன்ற செயலில் மீண்டும் ஈடுபட்டால் பேருந்துக்கான உரிமம் ரத்து செய்யப்படும் எனவும் எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE