“தேர்தல் களத்தில் மாமனாவது, மச்சானாவது!” - அன்புமணி மைத்துனர் விஷ்ணு பிரசாத்

By ந.முருகவேல் 


கள்ளக்குறிச்சி: “தேர்தல் களத்தில் மாமனாவது, மச்சானாவது! உறவு வேறு, அரசியல் வேறு. எனக்கு கொள்கையே முக்கியம்” என்று கடலூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளரும், பாமக தலைவர் அன்புமணியின் மைத்துனருமான விஷ்ணு பிரசாத் பேசினார்.

கடலூர் மக்களவைத் தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் விஷ்ணு பிரசாத் இன்று பண்ருட்டியில் நடைபெற்ற வாக்கு சேகரிப்புக் கூட்டத்தில் பேசும்போது, ''இங்கு பேசிய திமுக நிர்வாகி, சில சங்கடமான சூழ்நிலையைக் குறிப்பிட்டார். அரசியல் என்பது வேறு, உறவு என்பது வேறு. இது அனைவரும் அறிந்ததே. நான் அங்கம் வகிப்பது கொள்கைக் கூட்டணி.

இந்தக் கூட்டணி நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த காளான் அல்ல. 20 ஆண்டு காலம் பயணிக்கும் கொள்கைக் கூட்டணி. இந்தக் கூட்டணியில் சேர பலர் விழைகின்றனரே தவிர, எவரும் வெளியேற விரும்பவில்லை. என்னை வழிநடத்துகிறது. அவர்கள் என்ன சொல்கிறார்களோ அதைத்தான் நான் செய்யமுடியும்.

அரசியல் களத்தில் சந்தர்ப்ப சூழ்நிலைக்கேற்ப மாறி மாறி கூட்டணி வைக்கும்போது, நெறிமுறைகளையும், இயல்புகளையும் தவறவிடுவது இயல்புதான். இதை ஒரு மனிதனாக மன்னித்துவிடலாம். ஆனால், தேர்தல் காலத்திலே இந்தியக் குடிமகனாக சந்தர்ப்பத்திற்கேற்ப கூட்டணி அமைப்பதை எப்படி ஏற்பது? நீங்கள் தனியாகக் கூட நின்றிருக்கலாம். ஆனால், மோடியோடு கூட்டணி வைக்கும்போது, உங்களைப் பற்றி நாங்கள் என்ன சொல்வது?

போர்க்களத்தில் மாமனாக இருந்தாலும், மச்சானாக இருந்தாலும் சுடு என்ற அர்ஜுனன் சொன்னபோது, குறிதவறாமல் சுடுவதுதான் என் வேலை. எனக்கும் அப்படித்தான் கூட்டணிக் கட்சியினர் சொல்லிக் கொடுக்கின்றனர். அதை நான் செய்கிறேன். ஏனென்றால் எனக்கு கொள்கைதான் முக்கியம்.

இந்த மாவட்டத்திலே உள்ள என்எல்சி நிறுவனத்திற்கு எதிராகவும், விவசாயிகளுக்கு ஆதரவாகவும் போராடிய பாமகவின் நல்ல நோக்கத்தை வரவேற்கிறோம். ஆனால், அந்த நிறுவனம் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. அந்த மத்திய அரசை எதிர்த்து 6 மாதத்துக்கு முன்பு போராடி விட்டு, தற்போது எந்த முகத்தோடு, நெய்வேலியில் வாக்கு சேகரிப்பீர்கள்.

6 மாதத்துக்கு முன் ஒருவரை எதிர்த்து போராடிவிட்டு, தற்போது அவர்களுடனே கூட்டணி வைத்துக் கொண்டுள்ளீர்கள். கடலூர் மாவட்ட மக்கள் என்ன முட்டாள்களா? கடலூர் வாக்காளர்கள் நெறி தவறாதவர்கள். அவர்களுக்கு எப்படி வாக்களிக்க வேண்டும் என்பது புரியும்.

அதிமுக கூட்டணியில் அங்கம் வகித்த அன்புமணி, சந்தர்ப்ப சூழ்நிலையால், அக்கூட்டணியில் இருந்து வெளியேறுகிறார். அது அவரது கட்சி முடிவு, அவரது விருப்பம். அதை யாரும் குறைகூறவில்லை. ஆனால், அதிமுக தயவில் ராஜ்யசபா உறுப்பினராக பதவி சுகத்தை அனுபவித்தவர், அக்கூட்டணியில் இருந்து வெளியேறும்போது, பதவி ராஜினாமா செய்யாதது ஏன்?

ஆனால், திருமாவளவன் அப்படியல்ல. ஒரு காலத்தில் அதிமுக கூட்டணியோடு சட்டப்பேரவை உறுப்பினராக சட்டப் பேரவைக்குச் சென்றவர், அக்கூட்டணியில் இருந்து வெளியேறும்போது, அந்தப் பதவியை துச்சமென வீசியெறிந்துவிட்டு வெளியேறினார். அவர்தான் தன்மானச் சிங்கம். இந்தக் கொள்கைக் கூட்டணியில் பெரும் தலைவர்கள் உள்ளனர். அவர்களின் வழிகாட்டுதலில் வாக்கு சேகரிக்கிறேன். கண்டிப்பாக இண்டியா கூட்டணி வெற்றி பெறும்'' என்றார் விஷ்ணு பிரசாத்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE