புதுச்சேரி பாஜக அலுவலகம் முன்பு ஐஜேகே நிர்வாகிகள் மோதல் - பேனர் கிழிப்பு

By செ. ஞானபிரகாஷ்

புதுச்சேரி: புதுச்சேரியில் பாஜக அலுவலகம் முன்பாக ஐஜேகே தொண்டர்கள் மோதிக் கொண்டனர். மேலும், பிரச்சார வாகன பேனரை கிழித்தனர்.

தேசிய ஜனநாயக கூட்டணியில் இந்திய ஜனநாயக கட்சி (ஐஜேகே) இடம்பெற்று தமிழகத்தில் ஒரு தொகுதியில் போட்டியிடுகிறது. புதுச்சேரியில் போட்டியிடும் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி வேட்பாளர் நமச்சிவாயத்துக்கு ஐஜேகே ஆதரவு தெரிவித்துள்ளனது. ஐஜேகே கட்சியின் மாநில அமைப்பாளர் அண்ணாதுரை மற்றும் கட்சி நிர்வாகிகள் இன்று காலை பாஜக அலுவலகத்துக்கு வந்தனர்.

அப்போது, பாஜக அலுவலக வாசலில் பிரச்சார வாகனம் ஒன்று நின்று கொண்டிருந்தது. அதில் ஐஜேகே கட்சியில் இருந்து நீக்கப்பட்ட சத்தியவேல் படம் ஒட்டப்பட்டிருந்தது. அருகில் சத்தியவேல் நின்று கொண்டிருந்தார். இதைக் கண்ட அண்ணாதுரை தலைமையிலான புதிய நிர்வாகிகள் "நாங்கள்தான் ஐஜேகே கட்சியின் புதிய நிர்வாகிகள், ‘நீ எப்படி கட்சியின் பெயரை பயன்படுத்தலாம்’ எனக் கூறி, பிரச்சார வாகனத்தில் இருந்த பேனரை கிழித்தனர். இதைத் தடுக்க வந்த சத்தியவேலையும் தாக்கினர். இதையடுத்து சத்தியவேல் அந்த வாகனத்தை அங்கிருந்து எடுத்துக் கொண்டு கிளம்பிச் சென்றார்.

இது குறித்து ஐஜேகே கட்சியின் மாநில அமைப்பாளர் அண்ணாதுரை கூறுகையில், "கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பே சத்தியவேல் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். ஆனால் தொடர்ந்து மாநில அமைப்பாளர் எனக் கூறி பணம் பறித்து வருகிறார். இது குறித்து போலீசிலும் புகார் அளித்துள்ளோம். இப்போது நாடாளுமன்றத் தேர்தலில் பணம் பெற்றுக் கொண்டு பிரச்சாரம் செய்ய வந்துள்ளார். அவரை கையும், களவுமாக பிடித்ததால் விரட்டியடித்தோம்" எனத் தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE