“தமிழகத்தில் 2-ம் இடத்துக்கு பாஜகவால் வர முடியாது” - முத்தரசன் சிறப்பு நேர்காணல்

By ப.முரளிதரன்

திமுக கூட்டணி கட்சிகளுக்கு ஆதரவாக, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். சென்னை, தி.நகரில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் அவர் ‘இந்து தமிழ் திசை’ நாளிதழுக்கு அளித்த சிறப்பு நேர்காணல்:

தேர்தல் பிரச்சாரத்தில் மக்களை சந்தித்து வருகிறீர்கள். தேர்தல் களம் எப்படி உள்ளது?

மக்கள் மோடி ஆட்சியின் மீது கடும் அதிருப்தியில் உள்ளனர். சமையல் காஸ் சிலிண்டர் விலை, பெட்ரோல், டீசல் விலை குறைப்பு எல்லாம் ஏமாற்று நாடகம் என மக்கள் கருதுகின்றனர். தமிழ்நாட்டில் இயற்கை சீற்றத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.37 ஆயிரம் கோடி நிவாரணம் தருமாறு பிரதமரிடம் முதல்வர் கேட்டார்.

ஆனால், ஒரு பைசா கூட வழங்கப்படவில்லை. தொழில், விவசாயம், வணிகம் என அனைத்தும் பாதிக்கப்பட்டுள்ளதால் மக்களிடம் கடுமையான அதிருப்தி நிலவுகிறது.

பாஜகவை, அதிமுக விமர்சனம் செய்வது இல்லை. திமுகவுக்கு எதிராக மட்டுமே பிரச்சாரம் செய்கிறது என்று உங்கள் கூட்டணி தலைவர்கள் பேசுகிறார்கள். ஆனால், நீங்கள் அதிமுகவை விடவும் பாஜகவைத்தானே அதிகமாக விமர்சனம் செய்கிறீர்கள். ஏன்?

கடந்த 10 ஆண்டுகளில் தற்போதைய தேர்தலுக்கு முன்பு வரை பாஜகவை அதிமுக ஆதரித்துதான் வந்தது. இப்போது தேர்தல் வரும் நேரத்தில் நாங்கள் உறவை முறித்துக் கொண்டுள்ளதாக சொல்கிறார்கள். இன்றைக்கும் பாஜகவுடன், அதிமுக கள்ளத்தனமான உறவை வைத்துக் கொண்டுள்ளது.

தமிழ்நாட்டில் இந்த தேர்தலில் உங்கள் கூட்டணியின் பிரதான அரசியல் எதிரி அதிமுகவா அல்லது பாஜகவா?

நாடு தழுவிய அளவில் எங்களுக்கு எதிரி பாஜக. பாஜகவின் ‘பி டீம்’ ஆக அதிமுக உள்ளது. எனவே, இரு கட்சிகளையும் நாங்கள் எதிர்க்கிறோம். எனினும், கொள்கை ரீதியாக எங்களது பிரதான எதிரி பாஜகதான்.

உங்கள் கூட்டணியின் பிரச்சாரத்தில் பாஜகவுக்கு தரும் முக்கியத்துவத்தை பார்த்தால், தமிழ்நாட்டில் பாஜக வேகமாக வளர்ந்து வருவதுபோல தெரிகிறதே?

கொள்கை ரீதியாக பாஜகவை அதிகளவில் விமர்சனம் செய்வதால் அக்கட்சி வளர்ந்து விட்டதாக அர்த்தம் இல்லை. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் 2-ம் இடத்துக்குக் கூட பாஜகவால் வர முடியாது. பல்வேறு தொகுதிகளில் அவர்கள் டெபாசிட் தொகையை கூட திரும்ப பெற முடியாது.

திமுக கூட்டணியில் 2 இடங்களைப் பெற்றிருக்கிறீர்கள். இன்னும் எத்தனை ஆண்டுகளுக்கு 2, 3 சீட்களை நம்பியே கம்யூனிஸ்ட் கட்சி இருக்கப் போகிறது? இதனால், கட்சியின் வளர்ச்சி பாதிக்காதா?

எங்கள் கூட்டணியில் உள்ள எல்லாக் கட்சிகளுக்கும் சீட்களை பகிர்ந்தளிப்பதில் நடைமுறை சிக்கல் உள்ளது. நாங்கள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, விசிக உள்ளிட்டவை தலா 3 இடங்களை கேட்டோம். ஆனால், அப்படி கொடுப்பதில் நடைமுறையில் வாய்ப்பு கிடையாது. இதனால் கட்சி வளர்ச்சி பாதிக்காது.

தமிழ்நாட்டில் திமுக அரசின் செயல்பாடுகளை கம்யூனிஸ்ட் கட்சிகள் பாராட்டிக் கொண்டே இருக்கின்றன. இந்த அரசின் செயல்பாடுகளில் உங்களுக்கு விமர்சனமே இல்லையா?

விமர்சிக்க வேண்டிய விஷயங்களில் விமர்சனம் செய்ததோடு, களத்தில் இறங்கி போராடியும் உள்ளோம். குறிப்பாக, தொழிலாளர்களுக்கான வேலை நேரம் 8 மணியில் இருந்த 12 மணி நேரமாக உயர்த்தப்பட்ட போது கடுமையாக விமர்சனம் செய்ததோடு, போராட்டம் நடத்தினோம். உடனடியாக, முதல்வர் அதை திரும்ப பெற்றார். திமுக ஒழிக என நீங்கள் ஏன் போராட்டம் நடத்தவில்லை என சிலர் எதிர்பார்க்கின்றனர். அதை நாங்கள் செய்ய முடியாது.

அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், போக்குவரத்து ஊழியர்கள் திமுக அரசின் மீது அதிருப்தியில் இருப்பதுபோல் தெரிகிறதே?

அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியம் செயல்படுத்த வேண்டும் என்ற பிரச்சினை உள்ளது. அதேபோல், போக்குவரத்து தொழிலாளர்களுக்கும் பிரச்சினை உள்ளது. இவர்களை முதல்வர் நேரில் அழைத்து பேசிநிதி நிலைமை சீரடைந்த பிறகு சரி செய்யப்படும் என உத்தரவாதம் அளித்துள்ளார்.

அதிமுக உருவான காலத்தில் இருந்து அக்கட்சியுடன் நீண்ட காலம் இணக்கமாக செயல்பட்டது உங்கள் கட்சி. அண்மைக் காலத்தில் அக்கட்சியின் செயல்பாடுகள் பற்றி உங்கள் கருத்து என்ன? அக்கட்சிக்கான எதிர்காலம் எப்படி இருக்கும்?

பழனிசாமியால் கட்சியை ஒரு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை. இதே நிலை நீடித்தால் அதிமுக பலவீனப்படுவதைத் தவிர வேறு வழியில்லை.

மிக விரைவிலேயே திமுக, பாஜக என்பதாகத்தான் தமிழக அரசியல் களம் இருக்கும் என்றும், அதிமுக 3-ம் இடத்துக்கு தள்ளப்படும் என்றும் கூறப்படுவது பற்றி...

ஜுன் 4-ம் தேதிக்குப் பிறகு பாஜக எத்தனையாவது இடத்தில் உள்ளது என்பது தெரிந்து விடும்.

கடந்த தேர்தலை ஒப்பிடும்போது அகில இந்திய அளவில் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கான வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது?

அகில இந்திய அளவில் பல மாநிலங்களில் இந்தியா கூட்டணியுடன் உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. போன தேர்தலில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி 2, மார்க்சிஸ்ட் கம்யூனிட் கட்சி 3 என மொத்தம் 5 இடங்களைத் தான் கம்யூனிஸ்ட் கட்சி பெற்றது. இந்த முறை இந்த எண்ணிக்கை அதிகரிக்கும் என நாங்கள் எதிர்பார்க்கிறோம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

மேலும்