80-வது ஆண்டில் தென் மண்டல வானிலை மையம்: கடந்த 1945-ம் ஆண்டு ஏப்.1-ம் தேதி நிறுவப்பட்டது

By செய்திப்பிரிவு

சென்னை: சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தென் மண்டல வானிலை ஆய்வு மையம் 80-வது ஆண்டில் நேற்று அடியெடுத்து வைத்துள்ளது.

இந்தியாவின் மிகப் பழமையான வானிலை ஆய்வு மையம் சென்னை வானிலை ஆய்வு மையம்தான். இது சென்னை நுங்கம்பாக்கத்தில் 1792-ம் ஆண்டு நிறுவப்பட்டது. 232 ஆண்டுகளாக வானிலை சேவை வழங்கி வருகிறது. இம்மையம் 100 ஆண்டுகளுக்கும் மேலாக ஒருநாள் தவறாது வானிலை தரவுகளைப் பதிவு செய்து வெளியிட்டு வருகிறது. இந்த மையம் நூற்றாண்டு கடந்து சேவையாற்றியதற்காக உலக வானிலை அமைப்பு அங்கீகரித்து கடந்த 2019-ம் ஆண்டு கவுரவித்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையம், கடந்த 1945-ம் ஆண்டு ஏப்.1-ம் தேதி தென் மண்டல வானிலை ஆய்வு மையமாக உருவாக்கப்பட்டது. இம்மையம் நேற்று 80-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

இது தொடர்பாக வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டலத் தலைவர் எஸ்.பாலசந்திரன் கூறியதாவது: 1945-ம் ஆண்டு தென் மண்டல வானிலை ஆய்வு மையம் பிரிக்கப்படும்போது, நம்மிடம் தானியங்கி வானிலை கருவிகள் கிடையாது. அப்போது ரேடாரும் பயன்பாட்டில் இல்லை. இந்த மையம் இன்று பல்வேறு தொழில்நுட்ப மாற்றங்களைக் கண்டுள்ளது.

ஏராளமான இடங்களில் தானியங்கி வானிலை கருவிகளை நிறுவி இருக்கிறோம். 3 இடங்களில் ரேடார்களை நிறுவி இயக்கிவருகிறோம். ரேடார் இயக்குவதிலும், பழுது நீக்குவதிலும் வல்லவர்கள் சென்னையில்தான் இருக்கிறார்கள். அந்த அளவுக்கு சிறப்புவாய்ந்ததாக தென் மண்டலம்உள்ளது. வரும் காலங்களில் மேலும் தொழில்நுட்ப வளர்ச்சிபெற்று, தொடர்ந்து முதன்மைமண்டலமாகத் திகழ உழைப்போம்.

இவ்வாறு கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE