“தேர்தல் முடிந்த பிறகு விடுபட்டோருக்கு மகளிர் உரிமை தொகை” - அமைச்சர் ஐ.பெரியசாமி

By செய்திப்பிரிவு

திண்டுக்கல்: தேர்தல் முடிந்த பிறகு விடுபட்டவர்களுக்கு மகளிர் உரிமைத் தொகை கிடைக்கும், என அமைச்சர் ஐ.பெரியசாமி பேசினார்.

திண்டுக்கல் தொகுதியில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் ஆர்.சச்சிதானந்தத்தை ஆதரித்து, ஆத்தூர் மேற்கு ஒன்றியம் வீரக்கல், வீ.கூத்தம்பட்டி, வண்ணம்பட்டி ஆகிய கிராமங்களில் அமைச்சர் ஐ.பெரியசாமி பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது: வீரக்கல்லில் உள்ள பள்ளியை மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தியதால், வீரக்கல்லைச் சேர்ந்த மாணவர்கள் படிப்பதற்காக வெளியூருக்கு செல்ல வேண்டிய நிலை இல்லை.

வீரக்கல் அருகே கூட்டுறவுத் துறை மூலம் கொண்டு வரப்பட்ட கலை மற்றும் அறிவியல் கல்லூரியால், இப்பகுதி மாணவர்கள் பட்டப் படிப்பு வரை சிரமம் இல்லாமல் படிக்கும் நிலை உருவாகியுள்ளது. தற்போது, வீரக்கல் அருகே தொழிலாளர் நல மருத்துவமனை வர உள்ளது. இதன் மூலம் இப்பகுதியை சேர்ந்த ஆலை தொழிலாளர்கள் மற்றும் தனியார் நிறுவனங்களில் வேலை பார்க்கும் ஊழியர்களும் பயன் பெறுவார்கள். மகளிர் உரிமைத் தொகை பெறாமல் இருப்பவர்கள் மனு கொடுத்துள்ளார்கள். அவர்களுக்கு தேர்தல் முடிந்தவுடன் மகளிர் உரிமைத் தொகை கிடைத்துவிடும் என்றார்.

பிரச்சாரத்தின் போது, வேட்பாளர் ஆர்.சச்சிதானந்தம் மற்றும் திமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE