அண்ணாமலை வெளியிடும் ‘சீரியல்கள்’ எல்லாம் வெத்து பட்டாசுதான்: கார்த்தி சிதம்பரம்

By செய்திப்பிரிவு

சிவகங்கை: அண்ணாமலை வெளியிடும் சீரியல்கள் எல்லாம் வெத்து பட்டாசுதான் என்று சிவகங்கை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரம் தெரிவித்தார்.

சிவகங்கை துர்க்கை அம்மன் கோயிலில் அவர் நேற்று தரிசனம் செய்தார். பின்னர் பேருந்து நிலையம் அருகேயுள்ள ஆட்டோ நிலையம், அரசு போக்குவரத்துக் கழக பணிமனை உள்ளிட்ட பகுதிகளில் வாக்கு சேகரித்தார்.

அப்போது செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: சரித்திரத்தில் சண்டைபோடுவது பாஜகவின் பழக்கமாக உள்ளது. நிகழ்கால நிலைக்கு பாஜக வருவதில்லை. நடைமுறையில் மக்கள் பிரச்சினையை பற்றி பேசாமல், 50 ஆண்டுகளுக்கு முன்பு 2 நாடுகளுக்கு இடையே நடந்த ஒப்பந்தத்தை பற்றி பேசுகின்றனர். சின்னத் தீவை இலங்கைக்கு கொடுத்துவிட்டு, அதன் மூலம் இந்தியா வந்த 6 லட்சம் தமிழர்கள் நம் நாட்டின் குடியுரிமை பெற்றனர். தற்போது சீனா ஊடுருவி 1,000 சதுர கி.மீ. நிலத்தை எடுத்துவிட்டனர். குடியிருப்புகளை ஏற்படுத்தி சாலை அமைத்து விட்டனர்.

இது குறித்து நாடாளுமன்றத்தில் கேள்வி கேட்டால் பதில் தரவில்லை. இதுபோன்ற விஷயங்களை திசை திருப்பவே சரித்திர விஷயங்களை கிளப்பு கின்றனர். விலைவாசி, வேலையின்மை அதிகரித்துள்ளது. மொழியை அழிக்கின்றனர். இது பற்றி பேசுவது கிடையாது. அவர்கள் எதை பற்றி பேசினாலும் தமிழகத்தில் பாஜக 3-வது இடத்துக்கு மோசமான நிலைக்கு தள்ளப்படும். அண்ணாமலை வெளியிடும் சீரியல்கள் எல்லாம் வெத்து பட்டாசுதான். அவரை கோவையில் முதலில் டெபாசிட் வாங்க முயற்சி செய்ய சொல்லுங் கள். இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE