தமிழகத்தில் பறக்கும் படையினரால் இதுவரை ரூ.109 கோடி மதிப்பிலான பணம், பொருட்கள் பறிமுதல்

By செய்திப்பிரிவு

சென்னை: மக்களவைத் தேர்தலையொட்டி, பறக்கும் படையினர் நடத்திய சோதனைகளில் இதுவரை ரூ.109.76 கோடி மதிப்பிலான பணம் மற்றும் பல்வேறு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு கூறியுள்ளார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு திங்கள்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: “தமிழகத்துக்கு மாநில அளவிலான செலவின பார்வையாளராக நியமிக்கப்பட்டுள்ள பாலகிருஷ்ணன் இன்று தமிழகம் வந்துள்ளார். மாநில முழுவதும் இவர் பயணம் செய்து செலவினங்களை கண்காணிக்கப்பார். செவ்வாய்க்கிழமை பல்வேறு அமலாக்க அமைப்புகள் உடன் இவர் ஆலோசனை நடத்துகிறார்.

ஏப்ரல் 3-ம் தேதி மாலை தலைமை தேர்தல் ஆணையர் அனைத்து மாநில தலைமை தேர்தல் அதிகாரியுடன் ஆலோசனை நடத்த உள்ளார். அதில் நான், தலைமைச் செயலாளர், காவல்துறை டிஜிபி ஆகியோர் பங்கேற்க உள்ளோம். மேலும், ஏப்ரல் 4-ம் தேதி மாலை, தலைமை தேர்தல் அதிகாரி மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் காணொலி வாயிலாக ஆலோசனை நடத்த உள்ளார்.பூத் சீலிப் வழங்கும் பணி திங்கள்கிழமை முதல் தொடங்கி உள்ளது.

தமிழகத்தில் பறக்கும் படையினரால், இதுவரை ரூ.109.76 கோடி மதிப்பிலான பணம் மற்றும் பல்வேறு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தமிழகம் முழுவதும் இருந்து சி-விஜில் மூலம் 1,822 புகார் வந்தன. அதில் 1803 புகார்கள் முடித்து வைக்கப்பட்டுள்ளது. 19 புகார்களுக்கு மட்டுமே இன்னும் தீர்வு காணவேண்டி உள்ளது.

மேலும், சென்னை மெரினா கடற்கரையில் அமைக்கப்பட்டுள்ள மறைந்த முதல்வர் கருணாநிதி நினைவிடத்தில் உள்ள அவரது அருங்காட்சியகத்தில் ஒளிபரப்பபடும் ஒளி ஒலி காட்சிகளை உடனடியாக நிறுத்த வேண்டும் என அதிமுக கொடுத்த புகாரின் அடிப்படையில் செய்தி மற்றும் மக்கள் தொடர்பு துறை மற்றும் பொதுப்பணித் துறையிடம் விளக்கம் கேட்டு இருக்கிறோம். உடனடியாக நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

தேர்தல் பணியில் உள்ள தேர்தல் பணியாளர்கள் அனைவருக்கும் ஏதேனும் தீவிரவாதிகள், ரவுடிகள் மூலம் பிரச்சினை ஏற்பட்டு அவர்கள் மரணம் அடைந்தால் 30 லட்சம் ரூபாயும், மிக பெரிய காயம் அடையும் நிலை ஏற்பட்டார் 7.5 லட்சம் ரூபாயும், சிறிய காயம் என்றால் 40 ஆயிரம் ரூபாய் தேர்தல் ஆணையம் வழங்கும்” என்று அவர் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE