சென்னை: எங்கள் கொள்கைக்கு நேர் எதிராக செயல்படும் கட்சி அதிமுக. அவர்களுடன் நாங்கள் கைகோத்து செயல்படுவதாக கூறுவது தவறான குற்றச்சாட்டு என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், ‘இந்து தமிழ் திசை’ நாளிதழுக்கு தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் அளித்த நேர்காணலில் கூறியதாவது:
சமூகநீதி கூட்டமைப்பு என தொடங்கி, இண்டியா கூட்டணியை உருவாக்க நீங்கள் எடுத்த முயற்சி முழு வெற்றி பெற்றுள்ளதாக கருதுகிறீர்களா?
ஆமாம்! எனது முயற்சி வெற்றிபெற்றதாகவே கருதுகிறேன். நாடு முழுவதும் மதச்சார்பற்ற கட்சிகள் பிரிந்து இருப்பதால்தான் பாஜகவெற்றி பெறுகிறது. தமிழ்நாட்டில் இதை ஒருமுகப்படுத்தியதைப்போல இந்தியா முழுமைக்கும் ஒருமுகப்படுத்த வேண்டும் என்று நினைத்தேன். பாஜகவை எதிர்க்கும் சில கட்சிகளுக்கு, காங்கிரஸுடன் சேர்வதில் நெருடல் இருந்தது. அதுகூட மாநில அளவிலான பிரச்சினைகள்தான். எனவே, அதை ஒதுக்கி வைத்துவிட்டு, தேசிய அளவில் ஒற்றை சிந்தனையுடன் ஓர் அணியை உருவாக்க வேண்டும் என்று ஒன்றரை ஆண்டுகளாக கூறிவந்தேன்.
3-வது அணி சாத்தியமில்லை, பாஜகவை வீழ்த்த காங்கிரஸையும் உள்ளடக்கிய அணியே சரியானது என்பதை வலியுறுத்தி வந்தேன். அதுதான், ‘இண்டியா’ கூட்டணியாக உருப்பெற்றுள்ளது. இந்தியாவை இந்த கூட்டணி கைப்பற்றி ஆட்சி அமைக்கும்போதும், அது கூட்டாட்சியாக செயல்படும்போதும் எனது முயற்சி முழு வெற்றியைப் பெறும்.
இண்டியா கூட்டணியில் இருந்த நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம், பாஜக பக்கம் சாய்ந்துவிட்டது. மம்தா பானர்ஜியின் திரிணமூல் காங்கிரஸ் தனித்து களம் காண்கிறது. ஆம் ஆத்மியும் சிக்கலில் உள்ளது. இந்த சூழலில் கூட்டணியின் வெற்றி மீது நம்பிக்கை உள்ளதா?
நிதிஷ்குமார் இல்லாமலேயே பிஹாரில் வலுவான அணி அமைந்துள்ளது. மம்தா பானர்ஜியை பொருத்தவரை, அவரது வெற்றி என்பது இண்டியா கூட்டணியின் வெற்றிதான். ஆம் ஆத்மியும், காங்கிரஸும் பஞ்சாப் தவிர மற்ற மாநிலங்களில் ஒன்றாகவே போட்டியிடுகின்றன. தனித்து நின்றாலும் அவர்கள் பாஜகவை எதிர்த்தே பிரச்சாரம் செய்வது இண்டியா கூட்டணிக்கு வலிமையைத்தான் தருகிறது.
எப்போதுமே தமிழகத்தைவிட தேசிய அளவில் தேர்தல் நிலவரம் வேறு மாதிரியாக இருக்கும். இதை எப்படி எதிர்கொள்ளப் போகிறீர்கள்?
அப்படி கூறமுடியாது. 2004 மக்களவை தேர்தலில் ‘இந்தியா ஒளிர்கிறது’ என்ற முழக்கத்துடன் மீண்டும் வாஜ்பாய் தலைமையிலான பாஜக ஆட்சிதான் அமையும் என்று கருத்துக் கணிப்புகள் வெளியாகின. ஆனால், திமுக பங்கேற்றிருந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணிதான் மகத்தான வெற்றி பெற்று, ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. அதுபோல இப்போதும் நடக்கலாம். மோடி எதிர்ப்பு சிந்தனை என்பது தென் மாநிலங்கள் போலவே இந்தியாவின் மற்ற மாநிலங்களிலும் விதைக்கப்பட்டு விட்டது.
கரோனா காலத்தில் மக்களை கைவிட்டது, பல கி.மீ. தூரம் பேருந்து இல்லாமல் மக்கள் நடந்துபோனது, பணமதிப்பிழப்பு நடவடிக்கையின்போது மக்கள் அடைந்த துன்பம், 2 ஆண்டுகளாக விவசாயிகள் போராடுவது, மணிப்பூர் கலவரங்கள், ஜம்மு காஷ்மீர் பிரச்சினை, உத்தரபிரதேசத்தில் பட்டியலின பழங்குடியினர் தாக்கப்படுவது, கேஜ்ரிவால் கைது ஆகிய நடவடிக்கைகள் வட மாநில மக்கள் மனதில் மோடி மீதான கோபத்தை அதிகப்படுத்தி வருகிறது. எனவே, இங்கு மாதிரியேதான் அங்கும் ரிசல்ட் இருக்கும்.
கடந்த தேர்தலில் திமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் நீட் தேர்வு, பெட்ரோல், டீசல் விலை குறைப்பு உள்ளிட்டவற்றை நீங்கள் இன்னும் நிறைவேற்றவில்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறாரே?
இவை எல்லாம் மத்தியில் ஆட்சியில் இருப்பவர்கள் செய்யவேண்டியது. மத்தியில் கடந்த 5 ஆண்டுகளாக நாங்களா ஆட்சியில் இருக்கிறோம். பழனிசாமியின் கூட்டணி ஆட்சிதானே இருந்தது. நீட் தேர்வை ரத்து செய்ய பாஜக ஆட்சி மூலமாக அவர் எதுவும் செய்யவில்லை. நீட் விலக்கு மசோதாவை மத்திய அரசு திருப்பி அனுப்பியதைக்கூட வெளியில் சொல்லாமல் மறைத்தார். நீட் விலக்கு மசோதாவுக்கு ஒப்புதல் தரவேண்டியது ஆளுநரும், மத்திய பாஜக அரசும்தான் என்பதாவது அவருக்கு தெரியுமா.
நாட்டின் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் தமிழகத்தில் திமுக ஆட்சியின் மிக முக்கியமான 3 சாதனைகள் என்று எதை பெருமையாக கூறுவீர்கள்?
பேருந்துகளில் மகளிருக்கான விடியல் பயணம் திட்டம், மாதம் ரூ.1,000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமை திட்டம், பள்ளி செல்லும் குழந்தைகளுக்கான முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் - இந்த மூன்றும் நாட்டின் பிற மாநிலங்களும் பின்பற்றுகின்ற திராவிட மாடல் அரசின் முத்தான மூன்று சாதனை திட்டங்கள். இதுதவிர, நான் முதல்வன், புதுமைப் பெண், தமிழ்ப்புதல்வன், மக்களைதேடி மருத்துவம், இல்லம் தேடிகல்வி, இன்னுயிர் காப்போம், முதல்வரின் முகவரி, முதலீட்டாளர்களின் முதல் முகவரி என அனைத்து மக்களின் வளர்ச்சியையும் உள்ளடக்கிய சாதனை திட்டங்கள் நிறைய உள்ளன.
திமுக மீது வாரிசு அரசியல் குற்றச்சாட்டு பிரதமர் மோடியால் வைக்கப்படுகிறது. அதற்கு தங்கள் பதில் என்ன?
கேட்டுக்கேட்டு புளித்துப்போன குற்றச்சாட்டு. நாங்கள் சேவை செய்யவே அரசியலுக்கு வந்துள்ளோம், ஊர் சுற்றுவதற்காக அல்ல என்று சொல்லி இருக்கிறேன். கோடிக்கணக்கான குடும்பங்களின் நலனுக்கான கட்சிதான் திமுக. பாஜகவிலும் நிறைய வாரிசுகள் அரசியலுக்கு வந்துள்ளார்கள். அவர்கள் யாரையாவது பிரதமர் மோடிக்கு பிடிக்கவில்லையா? அதைதான் மறைமுகமாக சொல்கிறாரா.
தமிழ்நாட்டில் இரண்டு திராவிடக் கட்சிகள் தவிர வேறுகட்சிகள் காலூன்றிவிடக் கூடாது என அதிமுகவின் பழனிசாமியுடன் நீங்கள் கைகோத்து செயல்படுவதாகக் குற்றச்சாட்டு எழுகிறதே?
பழனிசாமியின் கட்சியை நாங்கள் திராவிடக் கட்சியாக நினைப்பது இல்லை. அவர்களுக்கும் திராவிடக் கொள்கைக்கும் தொடர்பு இல்லை. அண்ணாவுக்கும் அவர்களுக்கும் கூட எந்த தொடர்பும் இல்லை. இந்த கொள்கைக்கு எதிராக கட்சி நடத்துவதுதான் அந்த கூட்டம். எனவே, அவர்களோடு கைகோத்துள்ளோம் என்பது மிகத் தவறான குற்றச்சாட்டு. தமிழ்நாடு என்பது பெரியார் மண். சமூகநீதி மண். தமிழன் என்ற இன உணர்வோடு மக்கள் ஒற்றுமையாக வாழும் மண்.
இங்கு மக்களை பிளவுபடுத்தும் மதவாதம் ஒருபோதும் முளைக்காது. இதை பாஜக முதலில் உணர வேண்டும். என்ன செய்தாலும் தமிழ்நாட்டில் வேரூன்ற முடியவில்லையே என்ற வேதனையோடு இந்த அவதூறு கிளப்பப்படுகிறது. பருத்தி விளையும் மண்ணில் பேரிக்காய் விளையாது என்பதை பாஜக முதலில் உணர வேண்டும்.
தமிழ்நாட்டில் திமுக vs பாஜக என்பது போன்ற தோற்றம் தற்போதைய தேர்தல் களத்தில் தெரிகிறது. இதனால் பாஜக இங்கு மேலும் வளரத்தானே செய்யும்?
இது உண்மையல்ல, ஊடகங்கள் மூலமாக ஊதிப் பெருக்கப்படுகிறது. பிரதமர் அடிக்கடி வருவதால் அப்படித் தெரிகிறது.
பாஜக மட்டுமே இம்முறை 370 இடங்களுக்கு மேல் கைப்பற்றும் என்று பிரதமர் மோடி பேசி வரும் நிலையில், இண்டியா கூட்டணி கட்சிகளுக்கு நாடு முழுவதும் குறைந்தபட்சம் இத்தனை இடங்களில் நிச்சயமாக வெற்றி கிடைக்கும் என்று உங்களால் உறுதியாக கூற முடியுமா?
பிரதமர் சொல்லும் அளவுக்கு அவர்களுக்கு இடங்கள் கிடைக்காது என்பதும், இந்திய ஒன்றியத்தை இண்டியா கூட்டணி ஆள்கின்ற அளவுக்கு வலிமையான வெற்றி கிடைக்கும் என்பதுமே உண்மை.
தமிழ்நாட்டில் பிரச்சாரம் மேற்கொண்ட பிரதமர் மோடி, நாங்கள் ஜெயித்து வந்தால் திமுகவே இருக்காது என்று கூறியுள்ளாரே. 3-வது முறை பாஜக ஆட்சி அமைந்தால் என்ன மாதிரியான நடவடிக்கைகள் இருக்கும்?
மீண்டும் மோடி தலைமையிலான பாஜக ஆட்சி அமைந்தால் இந்தியாவில் ஜனநாயகம் இருக்காது. ஆனால், நிச்சயமாக அப்படி ஒரு நிலைமை இருக்காது. அதை தேர்தல் முடிவுகள் காட்டும்.
இவ்வாறு முதல்வர் கூறினார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago