அரசு அறிவிப்பை மதிக்காத திரையரங்குகள்: மும்மடங்கு பார்க்கிங் கட்டணத்தால் மக்கள் அதிருப்தி

By க.சக்திவேல்

தமிழகத்தில் உள்ள திரையரங்குகளில் அரசு நிர்ணயித்த கட்டணத்தை மீறி பார்க்கிங் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இதனால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

பொதுமக்கள் திரையரங்கு களுக்கு செல்லும்போது டிக்கெட் விலையோடு சேர்ந்து பாப்கார்ன் விலையும் பார்க்கிங் கட்டணமும் அவர்களின் பர்சை பதம் பார்க்கின்றன. இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் திரையரங்க டிக்கெட் கட்டணம் திடீரென உயர்த்தப்பட்டது. இதனால் குடும்பத்துடன் திரையரங்குக்கு செல்வோர் கடுமையாக பாதிக்கப்பட்டனர். அவர்களுக்கு சற்று ஆறுதல் அளிக்கும் வகையில் திரையரங்குகளுக்கான பார்க் கிங் கட்டணத்தை நிர்ணயம் செய்து தமிழக அரசு கடந்த ஆண்டு அறிவித்தது. அந்த அறிவிப்பு 2017 டிசம்பர் 1-ம் தேதி முதல் அமலுக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதன்படி மாநகராட்சிக்கு உட்பட்ட திரையரங்குகளில் கார், மூன்று சக்கர வாகனங்களுக்கு ரூ.20, இரு சக்கர வாகனங்களுக்கு ரூ.10, நகராட்சிக்கு உட்பட்ட திரையரங்குகளில் கார், மூன்று சக்கர வாகனங்களுக்கு ரூ.15, இரு சக்கர வாகனங்களுக்கு ரூ.7, பஞ்சாயத்துக்கு உட்பட்ட திரையரங்குகளில் கார்,மூன்று சக்கர வாகனங்களுக்கு ரூ.5, இரு சக்கர வாகனங்களுக்கு ரூ.3 என்று கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது. இதில் சைக்கிள்களுக்கு கட்டணம் விதிக்கப்படவில்லை.

இந்த அறிவிப்பு வெளியாகி 2 மாதங்களாகியும் சென்னை, கோவை போன்ற பகுதிகளில் உள்ள பல திரையரங்குகளில் இரு சக்கர வாகனங்களுக்கு பார்க்கிங் கட்டணமாக ரூ.30 வசூலிக்கப்படுகிறது. கார்களுக்கு ரூ.50 வரை வசூலிக்கின்றனர். அதேபோன்று, மால்களில் கார்களுக்கு ஒரு மணி நேரத்துக்கு ரூ.50-ம், இருசக்கர வாகனங்களுக்கு ரூ.30-ம் பார்க்கிங் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. சில திரையரங்குகளில் மட்டுமே அரசு நிர்ணயித்த கட்டணம் வசூலிக்கப்படு கிறது.

இழப்பீடு கோரலாம்

திரையரங்க பார்க்கிங் கட்டணத்தை எதிர்த்து பல ஆண்டுகளாக சட்டப் போராட்டம் நடத்திய கோயம்புத்தூர் கன்ஸ்யூமர் காஸ் செயலர் கே.கதிர்மதியோனிடம் இதுபற்றி கேட்டபோது, “அரசு நிர்ணயித்துள்ள கட்டணம் அனைத்து திரையரங்குகள், மல்டிபிளக்ஸ்களுக்கும் பொருந்தும். ஆனால், பல இடங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்கின்றனர். அரசின் உத்தரவை மீறுவோர் மீது சென்னையை பொறுத்தவரை மாநகர காவல் ஆணையரும், மற்ற மாவட்டங்களில் அந்தந்த மாவட்ட ஆட்சியரும் நடவடிக்கை எடுக்க முடியும். ஆனால், திரையரங்க உரிமையாளர்களின் பிரச்சினைகளை உடனடியாக கவனத்தில்கொள்ளும் அரசு, பொதுமக்களின் பிரச்சினைகளைக் கண்டுகொள்வதில்லை. கூடுதல் கட்ட ணம் வசூலிக்கும் திரையரங்குகளுக்கு பொதுமக்களே நோட்டீஸ் அனுப்பலாம். உரிய பதில் இல்லையெனில் நுகர்வோர் நீதிமன்றங்களில் வழக்கு தொடர்ந்து இழப்பீடு கோரலாம்” என்றார்.

மக்கள் கேட்க வேண்டும்

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் பொருளாளர் எஸ்.ஆர்.பிரபு கூறும்போது, “அரசு அறிவித்த பார்க்கிங் கட்டணத்தை திரையரங்குகள் தாங்களாக அமல்படுத்த வேண்டும் அல்லது அரசே கண்காணிக்க வேண்டும். இல்லையெனில், பொதுமக்கள்தான் கேள்வி கேட்க வேண்டும்.

திரையரங்குகளுக்கு ரசிகர்கள் வருவதில்லை என்று வருத்தப்படுகிறார்கள். கட்டணம் அதிகமாக இருப்பதால் குடும்பத்துடன் படம் பார்க்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. நல்ல படங்களைப் பார்க்கும் போது மக்கள் செலவைப் பற்றி கவலைப்படுவதில்லை.

எல்லா நேரத்திலும் சூப்பர் ஹிட் படங்கள் வெளியாகாது. ஆனால், சுமாரான படம் முடிந்து வெளியே வருவோர், ‘இந்த படத்துக்கா இவ்வளவு செலவு’ என்று வருத்தப்படுகின்றனர். இதனைத் திரையரங்க உரிமையாளர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்” என்றார்.

தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அபிராமி ராமநாதனிடம் கேட்டபோது, “ திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் என்பது சங்க உறுப்பினர்களின் நலனுக்கானது மட்டும்தான். அவர்களின் தனிப்பட்ட வியாபாரத்தில் நாங்கள் தலையிட முடியாது” என்றார்.

மெட்ரோ நிலையத்தை நாடும் மக்கள்

சென்னையை பொறுத்தவரை மெட்ரோ ரயில் நிலைய பார்க்கிங்கில் வாகனத்தை நிறுத்தினால் 6 மணி நேரத்துக்கு ரூ.20 மட்டுமே வசூலிக்கின்றனர். இதனால், வடபழனி, வேளச்சேரி போன்ற இடங்களில் உள்ள திரையரங்குகளுக்கு செல்லும் பலர் அங்குள்ள மெட்ரோ ரயில் நிலைய பார்க்கிங்கில் வாகனத்தை நிறுத்துவிட்டு செல்கின்றனர்.

மற்ற இடங்களில் மக்கள் வேறு வழியில்லாமல் கூடுதல் கட்டணம் செலுத்தி திரையரங்குகளில் வாகனத்தை நிறுத்தும் நிலைக்கு ஆளாகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

மேலும்