ஈரோடு: "பிரதமர் மோடி, தேர்தல் நெருங்க நெருங்க, தோல்வி பயத்தில் செய்யக் கூடாததை எல்லாம் செய்கிறார். ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன், டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலை கைது செய்திருக்கிறார்கள். இவர்கள் எல்லாம் வெளியிலிருந்து வலிமையாகத் தேர்தல் பணியாற்றுவார்கள் என்று பயந்து நடுங்கிக் கைது செய்திருக்கிறார்கள். இங்கு தமிழகத்திலும் மேற்கு மண்டலத்தின் வலிமையான செயல்வீரர் செந்தில் பாலாஜியையும் இதே மாதிரிதான் சிறையில் அடைத்து வைத்திருக்கிறார்கள். ஜாமீன் கூட கொடுக்காமல் பல மாதங்களாக அவரை சிறையில் வைத்திருக்கிறார்கள்" என்று ஈரோட்டில் நடந்த பிரச்சாரப் பொதுக் கூட்டத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், இன்று (மார்ச் 31) ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சியை அடுத்த சின்னியம்பாளையத்தில் நடைபெற்ற இண்டியா கூட்டணியின் மக்களவைத் தேர்தல் பிரச்சாரப் பொதுக் கூட்டத்தில் நாமக்கல் தொகுதி வேட்பாளர் மாதேஸ்வரன், ஈரோடு தொகுதி வேட்பாளர் பிரகாஷ் , கரூர் தொகுதி வேட்பாளர் ஜோதிமணி ஆகியோரை அறிமுகப்படுத்தி, இண்டியா கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்களிக்குமாறு பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் உரையாற்றினார்.
அப்போது அவர் பேசுகையில்,"கடந்த 2021-ம் ஆண்டு அதிமுக எனும் இருண்டகால ஆட்சியைச் சட்டம் ஒழுங்கைச் சீர்குலைத்த ஆட்சியை, தொழில் வளர்ச்சியைப் பாழ்படுத்திய ஆட்சியை, தமிழகத்தின் முன்னேற்றத்தைப் பின்னுக்குத் தள்ளிய ஆட்சியை அகற்றி, என் மேல் நம்பிக்கை வைத்து, என்னிடம் கொடுத்தீர்கள். ஆட்சிப் பொறுப்பேற்ற நம்முடைய திராவிட மாடல் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றி, இந்தியாவில் இருக்கும் மாநிலங்களுக்கெல்லாம் முன்னோடியாக இருக்கிறது. வாக்களித்தவர்கள், வாக்களிக்காதவர்கள், என்ற பாரபட்சம் பார்க்காமல் அனைவருக்கும், பொதுவான அரசாக ஆட்சி நடத்தி வருகிறோம்.
தமிழகத்தில் தொழில்வளர்ச்சியைப் பெருக்கவேண்டும். இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் என்று முழு முயற்சியோடு செயல்பட்டு வருகிறது திராவிட மாடல் அரசு. ஒவ்வொரு மாவட்டத்திலும் தொழிற்சாலைகள் அமைய வேண்டும். வளர்ச்சி என்பது சீரானதாக அனைத்து மாவட்டங்களுக்கும் இருக்க வேண்டும் என்பதுதான் திமுக அரசின் நோக்கம். நமக்கு மிகப்பெரிய இலக்கு இருக்கிறது.
» DC vs CSK | வார்னர், பிரித்வி ஷா, பந்த் அதிரடி: டெல்லி 191 ரன்கள் குவிப்பு
» “பாஜகவை வீட்டுக்கு அனுப்பும் வரை தூங்க மாட்டோம்” - அமைச்சர் உதயநிதி @ புதுச்சேரி
ஒரு ட்ரில்லியன் டாலர் பொருளாதாரத்தை தமிழகம் எட்ட வேண்டும் என்பது நிர்ணயிக்கப்பட்ட இலக்கு. அந்த இலக்கை அடைய, முதலீடுகளைப் பெற, புதிய தொழிற்சாலைகளை அமைக்க புரிந்துணர்வு ஒப்பந்தங்களைப் போட்டிருக்கிறோம். உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்தி, 6 லட்சம் கோடி ரூபாய்க்கும் மேலான முதலீடுகளைப் பெற்று 14 லட்சத்து 54 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் 631 புரிந்துணர்வு ஒப்பந்தங்களைப் போட்டிருக்கிறோம்.
தமிழகம் முன்னேற்றப் பாதையில் செல்ல ஒவ்வொரு திட்டமாக வடிவமைத்துச் செயல்படுத்தி வருகிறோம். இதைப் பொறுத்துக் கொள்ள முடியாத அதிமுகவும் - பாஜகவும் மக்கள் நலத்திட்டங்களைத் தமிழகத்துக்கான திட்டங்களைக் குறை சொல்கிறார்கள். அது குறைகளாக இருந்தால் நிச்சயம் சரிசெய்யலாம். ஆனால், தமிழக மக்களுக்கு நல்லது நடக்கிறது என்ற வயிற்றெரிச்சலில் அவதூறு செய்கிறார்கள். திமுக திட்டங்களைக் குறை சொல்வதாக நினைத்துக் கொண்டு பயனடையும் தமிழக மக்களையே குறை சொல்கிறார் பாதம்தாங்கி பழனிசாமி.
அவர் மட்டுமா, பாஜக என்ன சொல்கிறார்கள்? மகளிருக்குக் கிடைக்கும் உரிமைத் தொகையையும் – வெள்ள நிவாரணத் தொகையையும் ‘பிச்சை’ என்று கேவலப்படுத்தியும் தமிழகத் திட்டங்களுக்கு நிதி தராமலும் முட்டுக்கட்டை போடும் கட்சி பாஜக. திமுக அரசின் சாதனைகளைக் குறை சொல்லும் இந்த அதிமுக – பாஜக கள்ளக்கூட்டணியால், அவர்கள் ஆட்சியில் செய்த சாதனை என்றோ, மக்களுக்காக நிறைவேற்றிய சிறப்பு திட்டம் என்றோ, எதையும் சொல்வதற்குத் தகுதி இல்லாமல், அவதூறு குதிரையில் அரசியல் பயணம் செய்கிறார்கள். ஆனால், திமுகவைப் பொறுத்தவரைக்கும், சட்டமன்றத் தேர்தலாக இருந்தாலும், நாடாளுமன்றத் தேர்தலாக இருந்தாலும், தேர்தல் அறிக்கையில் சொல்வதைச் செய்யும் கட்சி.
திமுக எப்போதெல்லாம் ஆட்சிக்கு வருகிறதோ அப்போதெல்லாம் சமூகநீதியை நிலைநாட்டும் அரசாகச் செயல்படுகிறது. பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீட்டை அதிகரித்தது, திமு. அரசுதான். மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு 20 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கியது, திமு.க. அரசுதான். பட்டியலின மக்களுக்கான இட ஒதுக்கீட்டை உயர்த்தியவர், மறைந்த முதல்வர் கருணாநிதி. பழங்குடியினருக்கு இடஒதுக்கீடு, சிறுபான்மையினருக்கு உள் ஒதுக்கீடு வழங்கியதும், அவர்தான். அருந்ததியின மக்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்கியவரும் அவரே. அந்த சட்டமுன்வடிவுக்கான அவரது உரையைச் சட்டப் பேரவையில் படித்தது, இந்த அடியேன் ஸ்டாலின்தான்.
இன்றைக்குத் தமிழகத்தில் 69 விழுக்காடு இடஒதுக்கீடு இருக்கிறது என்றால், அதை வழங்கியது திமுக அரசுதான். ஆனால், அதிமுக – பாஜக பாணி என்ன? ”எதுவும் செய்யவும் மாட்டோம்; யாரு செய்தாலும் தடுப்போம்” இதனால்தான், ஸ்டாலின் கொடுத்த வாக்குறுதிகளில் 10 விழுக்காட்டைக்கூட நிறைவேற்றவில்லை என்று ’பச்சைப் பொய்’ பழனிசாமி பொய்ப் பிரச்சாரம் செய்கிறார். ஒவ்வொரு முறை மக்களைச் சந்திக்கும்போதும், திமுக நிறைவேற்றிய தேர்தல் வாக்குறுதிகளைப் புள்ளிவிவரங்களோடு சொல்கிறேன். ஆனால், பழனிசாமியோ இந்தச் செய்திகளையும் பார்ப்பது இல்லை. சட்டமன்றத்தில் சொல்லும்போதும் கேட்பதில்லை. மீண்டும் மீண்டும் பொய் பேசுவதை மட்டுமே வழக்கமாக வைத்துக் கொண்டு இருக்கிறார். இவர் என்ன நினைக்கிறார் என்றால், இப்படி பொய் பேசினால் அவர் ஏமாற்றியதை மக்கள் மறந்துவிடுவார்கள் என்று நினைக்கிறார்.
அதிமுக தேர்தல் அறிக்கையில், இலவச செல்போன் தருவோம் என்றார்கள், தந்தார்களா? அனைத்து மகளிருக்கும் ஸ்கூட்டி தருவோம் என்றார்களே, தந்தார்களா? அம்மா வங்கி அட்டை தரப்படும் என்று சொன்னார்களே, யாருக்காவது கொடுத்தார்களா? பட்டு ஜவுளிப் பூங்காவை உருவாக்குவோம் என்று சொன்னார்களே, உருவாக்கினார்களா? இதெல்லாம் ட்ரெய்லர்தான். மொத்தமாகச் சொல்ல நேரம் பத்தாது.
இதேபோன்று, பாஜக சொன்னதும் செய்தார்களா? கருப்புப் பணத்தை மீட்கவில்லை. யாருக்கும் 15 லட்சம் பணம் கொடுக்கவில்லை. ஆண்டுக்கு இரண்டு கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கொடுக்கவில்லை. மொத்தத்தில் ஊழலற்ற ஆட்சியையும் மத்தியில் கொடுக்கவில்லை. அதற்கு, இமாலய எடுத்துக்காட்டுதான், உலக அளவில் இந்திய ஜனநாயகத்துக்கே அழிக்க முடியாத அவமானத்தை ஏற்படுத்தியிருக்கும் ”தேர்தல் பத்திர ஊழல்!” அதுமட்டுமா, சிஏஜி அறிக்கையில் வந்ததே. 7 லட்சம் கோடி ரூபாய்க்கு முறைகேடு நடந்திருப்பதாக, சிஏஜி அறிக்கை வெளியிட்டது.
அதைப் பற்றி மத்திய அரசு, வாயே திறக்கவில்லையே. தேர்தல் பத்திரம் போன்றே மற்றொரு நிதியும் வசூல் செய்திருக்கிறார். அதுவும் ‘பி.எம். கேர்ஸ் ஃபண்ட்’ என்ற பெயர் வைத்து வசூல் செய்திருக்கிறார். அது பற்றிய அத்தனை ரகசியங்களும் ஜூன் மாதம் இண்டியா கூட்டணி ஆட்சிக்கு வந்ததும், அம்பலமாகும். அப்போது மாட்டுவார்கள். யார் யார் கம்பி எண்ணுகிறார்கள் எனப் பார்ப்போம்.
இப்படி ஒட்டுமொத்த இந்திய மக்களுக்கும் எதுவுமே செய்யாத பிரதமர் மோடியும், மத்திய ய பாஜக அரசும் இந்த மேற்கு மண்டலத்துக்குத் தாங்கள் ஏதோ சாதனைகளைச் செய்துவிட்டதாக நினைத்து பேசிக் கொண்டு இருக்கிறார்கள். உண்மையில், தொழில்வளம் மிகுந்த இந்த மேற்கு மண்டலம்தான், பாஜகவின் இன்னல்களுக்கு அதிகமாக ஆளாகியிருக்கிறது. ஜனநாயகம், நாடாளுமன்றம், மாநில அரசுகள், இடஒதுக்கீடு என்று அனைத்தையும் ஒழிக்க நினைக்கும் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தில் தொழில் துறையையே மொத்தமாக இழுத்து மூடிவிடுவார்கள். தொழில் வர்த்தகக் கட்டமைப்பையே சிதைத்துவிடுவார்கள். அவருக்கு நெருக்கமான சிலர் மட்டுமே, தொழில் வர்த்தகம் செய்ய முடியும் என்ற நிலையை உருவாக்கிவிடுவார்கள். எளிய மக்களின் உழைப்பில் வளர்ந்த சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் எல்லாத்தையும் அழித்துவிடுவார்கள்.
கடந்த ஆட்சியில் என்ன செய்தார் மோடி? திடீர் என்று ஒரு இரவில் தொலைக்காட்சியில் தோன்றி, கருப்புப் பணத்தை ஒழிக்க, ஐந்நூறு ரூபாய் மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுகளைத் தடை செய்கிறேன் என்று அறிவித்தார். கருப்புப் பணம் ஒழிந்துவிட்டதா? சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள்தானே ஒழிந்தது. நேற்றுகூட ஒரு விழாவில் உச்சநீதிமன்ற நீதிபதி ஒருவர் பேசியிருக்கிறார், “பணமதிப்பிழப்பைத் திட்டமிடாமல் செயல்படுத்தியிருக்கிறார்கள். நாட்டில் இருந்த ரூபாயில் 86 விழுக்காடாக இருந்த ஐந்நூறு, ஆயிரம் ரூபாய்கள், பணமதிப்பிழப்புக்குப் பிறகு, 98 விழுக்காடு ரிசர்வ் வங்கிக்கே மீண்டும் வந்துவிட்டதே, அப்படி என்றால், கருப்பு பணம் ஒழிந்ததா? கருப்பு பணத்தை வெள்ளையாக்கத்தான், பணமதிப்பிழப்பு பயன்பட்டிருக்கிறது” என்று சொல்லியிருக்கிறார்.
இப்படி ஒன்றை முடித்து, அடுத்து உடனே, ஜிஎஸ்டி என்ற பெயரில் எல்லா பொருள்கள் மேலும் மிகக் கொடூரமான வரிகளைப் போட்டார்கள். ‘சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் மட்டும் இல்லாமல் எல்லா தொழில்களும் பாதிக்கப்பட்டது. இப்படி பெரிய இரண்டு செயற்கைப் பேரிடரை சந்தித்த தொழிற்துறைக்கு, இயற்கை இடராகக் கரோனா வந்தது. இரண்டு ஆண்டுகாலம் அனைத்துத் தொழிலும், மக்களின் வாழ்வாதாரமும் மிக மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டது.
இதற்குப் பிறகும் விடாமல், பெட்ரோல் - டீசல் விலை உயர்வு, மூலப்பொருட்கள் விலை உயர்வு, இடுபொருட்கள் விலை உயர்வு, சுங்கச்சாவடி கட்டணச் சுரண்டல் என்று இந்தப் பகுதியில் இருக்கும் MSME நிறுவனங்கள், ஜவுளித்தொழில், பேருந்து கூண்டு கட்டும் தொழில், கொசுவலை உற்பத்தித் தொழில் வரை அனைத்துமே பாதித்திருக்கிறது. ஏராளமான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கொடுத்த இந்த நிறுவனங்கள் நலிவடைந்ததால், வேலையில்லாத் திண்டாட்டமும் அதிகமாகிவிட்டது. உற்பத்தி நடவடிக்கைகள் இந்திய அளவில் குறைந்திருப்பதாக, புள்ளிவிவரங்கள் சொல்கிறது. ஆர்டர்கள் கிடைக்காமல் மில்களை மூடும் நிலையும் ஏற்பட்டிருக்கிறது.
விசைத்தறிகளுக்கு சோலார் மின்தகடு அமைக்க மானியம் கிடைப்பதில்லை. விசைத்தறிகளைத் தரம் உயர்த்தவும் மானியம் கிடைப்பதில்லை. MSME-களுக்கு முன்போன்று, கடனும் மானியமும் எளிதாகக் கிடைக்கிறதா? சிறு - குறு, தனிநபர் நிறுவனங்கள் மற்றும் கூட்டாண்மை நிறுவனங்களுக்கு 30 விழுக்காடு வருமான வரி விதிக்கப்படுகிறது. ஈரோட்டு மஞ்சள் பலருக்கும் வாழ்வாதாரமாக இருக்கிறது. மஞ்சளை உணவுப் பொருளாக மாற்றிவிட்டால் ஜிஎஸ்டி போட முடியாது என்று விவசாயிகளின் கோரிக்கையை பாஜக அரசு புறக்கணிக்கிறது.
இரண்டு நாளைக்கு முன்பு ஒரு செய்தி வந்திருக்கிறது. என்ன தெரியுமா? இப்போது இருக்கும் சுங்கச்சாவடி முறையை மாற்றி, செயற்கைக்கோள் வழியாகக் கண்காணித்து நேரடியாக நம்முடைய வங்கிக் கணக்கில் இருந்தே பணம் எடுத்துக் கொள்வது போன்று முறையைக் கொண்டு வரப்போவதாக மத்திய அமைச்சர் சொல்லியிருக்கிறார். என்ன கொடுமை இது? நாங்கள், தேர்தல் அறிக்கையில் தேசிய நெடுஞ்சாலைகளில் இருக்கும் சுங்கச்சாவடிகளை முற்றிலுமாக அகற்றுவோம் என்று சொன்னால், இவர்கள் நேராக வங்கியில் இருந்தே பணம் எடுத்துக் கொள்கிறோம் என்று சொல்கிறார்கள். இதுதான் நமக்கும் அவர்களுக்கும் இருக்கும் வேறுபாடு.
இப்படிப்பட்ட ஊழல் ஆட்சியை நடத்தி கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாத பிரதமர் மோடி ஊருக்கு உபதேசம் செய்யலாமா? பாஜக டைரக்ஷனில் நடக்கும் அதிமுக – பாஜக கள்ளக்கூட்டணிக்கு, பாதம்தாங்கி பழனிசாமி புதியதாக ஒரு கதை சொல்லியிருக்கிறார். டயலாக் என்ன தெரியுமா? பாஜகவின் கூட்டணியில் இருந்ததால், விமர்சிக்க மாட்டாராம், என்ன ஒரு பதில். உண்மை அது இல்லை. அவரால் ஒருபோதும் பிரதமர் மோடியையோ, அமித்ஷாவையோ, ஆளுநரையோ ஏன், பாஜகவில் இருக்கும் யாரையும் விமர்சிக்க முடியாது. ஏன், என்றால் எஜமான விஸ்வாசம். பதவி சுகத்துக்காகவும், ஊழல் வழக்குகளில் இருந்து தப்பிக்கவும், பாஜகவின் அத்தனை மக்கள் விரோதத் திட்டங்களையும் ஆதரித்தவர் பழனிசாமி.
ஆட்சியில் இருக்கும்போது வைத்த கூட்டணியை இப்போதும் ரகசியமாகத் தொடர்ந்துகொண்டு இருக்கிறார். இதற்குச் சுற்றிவளைத்து அவர் கண்டுபிடித்த காரணம்தான் கூட்டணி தர்மம். காலில் தவழ்ந்து சென்று முதல்வர் பதவியை வாங்கிய அவர், சசிகலாவைப் பற்றி பேசாத பேச்சா? இது என்ன மாதிரியான தர்மம்? கூடவே இருந்த தர்மயுத்தம் ஓபிஎஸ்-க்குப் பொதுக்குழுவில் வாட்டர் பாட்டில் மரியாதை செய்தீர்களே, அது என்ன தர்மம்? இப்போது சமீபத்தில்கூட, உங்கள் கூட்டணியில் இருந்து சென்ற ராமதாசை நீங்கள் விமர்சிக்கவில்லையா? இது என்ன கூட்டணி தர்மத்தில் வராதா?
பழனிசாமியால், ஒருபோதும் பாஜகவை விமர்சிக்க, எதிர்க்க முடியாது. அதற்குத் துணிவு வேண்டும். முதுகெலும்பு வேண்டும். ஏன் என்றால், பழனிசாமியின் குடுமி பாஜக கையில் இருக்கிறது. என்ன குடுமி? ஊழல் குடுமி. அதிமுகவின் ஊழல்கள் என்பது, கன்னித்தீவு கதை மாதிரி. அதில் பழனிசாமியின் அத்தியாயத்தை மட்டும் சொல்ல வேண்டும் என்றால், சம்பந்திக்கும் – சம்பந்தியின் உறவினருக்கும் காண்ட்ராக்ட் கொடுத்துச் சாதனை செய்தவர். சம்பந்திக்கு டெண்டர் கொடுப்பதில் என்ன தவறு என்று சொன்னவர்தான் பழனிசாமி.
“யார் மேல்தான் ஊழல் புகார் இல்லை” என்ற எகத்தாளமாக டெல்லியில் பேட்டி கொடுத்தவர். குட்கா வியாபாரிகளிடம் மாமூல் வாங்கும் அமைச்சரை வைத்து, ஆட்சி நடத்தியதும் பழனிசாமிதான். இன்றைக்கும் சிபிஐ நீதிமன்றத்தில் அந்த வழக்கு நடந்து கொண்டிருக்கிறது. இப்படி வாய்கிழிய ஊழலுக்கு வக்காலத்து வாங்கும் பழனிசாமிக்கு, திமுகவைப் பற்றிப் பேச என்ன யோக்கியதை இருக்கிறது!
12 ஆண்டு காலம் குஜராத் முதல்வராக இருந்து, மாநில உரிமைகளைப் பேசிய மோடி, டெல்லிக்கு சென்று பிரதமரானதும், மாநிலங்களை அழிக்கத் துடியாக துடிக்கிறார். மாநிலங்களுக்கு என்று எந்த அதிகாரங்களும் இருக்கக் கூடாது; மொத்த அதிகாரமும் தன்னுடைய பாக்கெட்டில் வைத்துக் கொள்ள வேண்டும் என்று சர்வாதிகாரியைப்போல் நினைக்கிறார் பிரதமர் மோடி. நீங்கள் எப்படிப்பட்ட தோல்வி பயத்தில் இருக்கிறீர்கள் என்று, சிலிண்டர் விலையைக் குறைத்ததிலேயே தெரிந்துவிட்டதே. சிலிண்டர் விலையை ஏற்றியது யார்?
இப்போது குறைப்பதாக நாடகம் நடத்தும் அதே மோடிதான். தேர்தல் வந்ததால் பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்கிறார். பெட்ரோல், டீசல் விலையை அதிகரித்தது யார்? அதுவும், இப்போது குறைப்பதாக நாடகம் நடத்தும் அதே மோடிதான். இந்த விலைக் குறைப்பு நாடகம் எல்லாம், தங்களின் ஆட்சியில் நாடு எப்படி சீரழிந்தது என்பதை மறைக்க மக்களை மறக்க வைக்க பாஜக போடும் திட்டம்.
கடந்த 5 ஆண்டுகளில், ED,IT,CBI இப்படிப்பட்ட மத்திய அரசின் அமைப்புகளை பாஜகவின் கைப்பாவையாக மாற்றி, அவர்களை ரெய்டுக்கு அனுப்புவது, பிறகு பாஜகவுக்கு நிதியாகத் தேர்தல் பத்திரங்களை வாங்குவது என்று, 8 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்திருக்கிறார்கள். வரலாற்றிலேயே இப்படி ஒரு வசூல் நடந்ததில்லை. இந்த ஊழல் வெளி வந்ததால், பிரதமர் மோடியின் முகத்தில் தோல்வி பயம் அப்பட்டமாகத் தெரிகிறது. தேர்தல் நெருங்க நெருங்க, தோல்வி பயத்தில் செய்யக் கூடாததை எல்லாம் செய்கிறார்.
ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனை கைது செய்தார்கள். டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலை கைது செய்திருக்கிறார்கள். இவர்கள் எல்லாம் வெளியிலிருந்து வலிமையாகத் தேர்தல் பணியாற்றுவார்கள் என்று பயந்து நடுங்கிக் கைது செய்திருக்கிறார்கள். இங்கு தமிழகத்திலும் மேற்கு மண்டலத்தின் வலிமையான செயல்வீரர் செந்தில் பாலாஜியையும் இதே மாதிரிதான் சிறையில் அடைத்து வைத்திருக்கிறார்கள். ஜாமீன்கூட கொடுக்காமல் பல மாதங்களாக அவரை சிறையில் வைத்திருக்கிறார்கள். மேற்கு மண்டலத்தில் அவரின் பணிகளை முடக்க வேண்டும் என்று இந்த சதிச் செயலைச் செய்தார்கள். பாஜகவின் அத்தனை சதிச்செயல்களையும் கடந்து, செந்தில் பாலாஜியால் உருவாக்கப்பட்ட செயல்வீரர்கள் களத்தில் வேகமாக பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.
சுதந்திரமான புலனாய்வு அமைப்புகளைக் கூட்டணிக் கட்சிகள் போன்று மாற்றி எதிர்க்கட்சிகள் மேல் ஏவி விட்டிருக்கும் பாஜகவுக்கு நான் சொல்லிக் கொள்ள விரும்புவது, இது இரண்டு பக்கமும் கூரான முனைகளைக் கொண்ட கத்தி என்பதை மறக்க வேண்டாம் என்று எச்சரிக்கிறேன். அரவிந்த் கேஜ்ரிவால் சிறையில் இருந்தபடியே கட்சியையும், ஆட்சியையும் நடத்தி வருவது மட்டுமல்ல, தேர்தல் பணிகளையும் கவனித்துக் கொண்டு வருகிறார். அவர் மீதான அடக்குமுறை இண்டியா கூட்டணியின் வலிமையை அதிகரித்திருக்கிறது. செல்வாக்கை அதிகரித்திருக்கிறது.
இன்று தலைநகர் டெல்லியில் இண்டியா கூட்டணிக் கட்சித் தலைவர்கள் கலந்துகொண்ட கண்டன ஆர்ப்பாட்டத்தில், என்னுடைய சார்பில் திமுக மாநிலங்களவைக் குழுத் தலைவரும் கொள்கை பரப்புச் செயலாளருமான திருச்சி சிவா கலந்துகொண்டு என்னுடைய உரையை வாசித்திருக்கிறார். “அடக்குமுறை எப்போதும் வெல்லாது” என்பதை இந்தத் தேர்தல் மூலம், இந்திய நாட்டு மக்கள் பாஜகவுக்குப் புரிய வைப்பார்கள். பாஜக எனும் மக்கள் விரோத, ஜனநாயக விரோதக் கட்சி வேரோடும் வேரடி மண்ணோடும் வீழ்த்தப்படவுள்ள நாளான ஜூன் 4 இந்தியாவின் இரண்டாவது விடுதலை நாளாக வரலாற்றில் பதியட்டும்" என்று முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
2 mins ago
தமிழகம்
3 mins ago
தமிழகம்
22 mins ago
தமிழகம்
25 mins ago
தமிழகம்
31 mins ago
தமிழகம்
51 mins ago
தமிழகம்
52 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago