“எனக்கு சீட் கிட்டாமல் போக முயன்றவர்களுக்கு நன்றி” - காங். எம்.பி. திருநாவுக்கரசர்

By செய்திப்பிரிவு

சென்னை: "இத்தேர்தலில் நான் மீண்டும் போட்டியிட விரும்பியவர்கள், என் வாய்ப்புக்காக உதவிட முயன்றவர்கள், நாடாளுமன்ற உறுப்பினராக நான் தொடரக் கூடாதென இத்தேர்தலில் போட்டியிட வாய்ப்புக் கிட்டாமல் போக முயன்றவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றி", என்று காங்கிரஸ் எம்.பி. திருநாவுக்கரசர் கூறியுள்ளாா்.

2024 மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி தமிழகத்தில் 9 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இந்நிலையில், கடந்தமுறை திருச்சி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற திருநாவுக்கரசருக்கு இம்முறை வாய்ப்பு வழங்கப்படவில்லை. இந்நிலையில், திருநாவுக்கரசர் திருச்சி மக்களவைத் தொகுதி வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். 6 பக்கங்களைக் கொண்ட அந்த அறிக்கையில் அவர் குறிப்பிட்டுள்ள சில முக்கிய விபரங்கள்; > 2019 மக்களவைத் தேர்தலில், இந்தியாவிலேயே காங்கிரஸ் வேட்பாளர்களிலேயே அதிக வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்த திருச்சி மக்களவைத் தொகுதி வாக்காளர்களுக்கு என் நன்றியை மீண்டும் காணிக்கையாக்குகிறேன்.

> கடந்த 5 ஆண்டுகளில், கரோனா தொற்றால் பாதிப்புக்கு உண்டான ஒன்றரை ஆண்டுகள் நீங்கலாக எனது நாடாளுமன்ற தொகுதி வளர்ச்சி நிதியில் இருந்து சுமார் 17 கோடி ரூபாய் மக்களின் நலனுக்காகவும் மக்கள் நலப் பணிகளுக்காகவும் இத்தொகுதியில் செலவிடப்பட்டுள்ளது.

> 288 பணிகள் 6 சட்டமன்ற தொகுதியிலும் என்னால் செய்து முடிக்கப்பட்டுள்ளது. எந்த லஞ்ச, ஊழல் புகார்களுக்கும் ஆட்படாமல் நேர்மையாகவும் நாணயமாகவும் மக்கள் பணியாற்றியுள்ளேன்.

> என்னுடைய திருச்சி, சென்னை மற்றும் டெல்லி அலுவலகங்கள், மற்றும் சுற்றுப்பயணங்களின்போது வந்ததும் அனுப்பிய வகையிலும் பெறப்பட்ட சுமார் 10,000 மனுக்களை மத்திய-மாநில அமைச்சர்களுக்கும், உரிய அரசு துறைகளுக்கும் அனுப்பி பல்வேறு விதமான நலப்பணிகளை செய்துள்ளேன்.

> தேர்தல் வாக்குறுதியான, சுமார் 10 ஆண்டு காலம் முடிவு பெறாமல் "தொங்கு பாலம்" என்று சொல்லப்பட்டு வந்த திருச்சி ஜங்ஷன் மேம்பாலத்துக்கு ராணுவ இடம் பெறப்பட்டு கட்டி முடிக்கப்பட்டது.

> தொல்லியல் துறையை தமிழகத்தில் இரண்டாகப் பிரித்து திருச்சியை மையமாக கொண்டு 20 மாவட்டங்கள் உள்ளடக்கிய மண்டல அலுவலகத்தைக் கொண்டு வந்துள்ளேன்.

> 87 மாற்றுத் திறானாளிகளுக்கு சுமார் 53.4 லட்சம் மதிப்பிலான 87 நான்கு சக்கர பெட்ரோல் ஸ்கூட்டர்களை வழங்கி, இந்தியாவிலேயே எங்கும் எந்த நாடாளுமன்ற உறுப்பினரும் செய்யாததை செய்துள்ளேன்.

> நாடாளுமன்றத்தில் 70% வருகைப்பதிவேடு, 37 விவாதங்களில் பங்கேற்றுள்ளேன். ஜீரோ அவர், விதி எண் 377 மற்றும் 358 வினாக்கள் 4 தனிநபர் மசோதாக்கள் கொண்டு வந்து நாடாளுமன்றத்தில் உரையாற்றியுள்ளேன்.

> திருச்சி தொகுதியில் தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினராக பணியாற்றிட வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும், இத் தொகுதி மக்களுக்காக எனதுபணி எப்போதும் தொடரும்.

> தமிழகத்தின் மையப்பகுதியான திருச்சியை மையமாகக் கொண்டு எனது அரசியல் செயல்பாடுகள் தொடர்ந்து இருக்கும். மக்கள் என்னை எப்போதும் போல என்னை சந்திக்கலாம். தொலைபேசியிலும் தொடர்பு கொள்ளலாம்.

> என் வாழ்நாளில் எனது இல்லத்தில் நான் இருந்த நாட்களைக் காட்டிலும் மக்களோடு நான் இருந்த நாட்களே அதிகம். எனது மக்கள் பணி தொடரும்.

> நான் நாடாளுமன்ற உறுப்பினராக செயல்பட்டபோது உதவிய, துணைநின்ற மத்திய மாநில அரசு அலுவலர், காங்கிரஸ், திமுக உள்ளிட்ட தோழமைக் கட்சிகளின் தலைவர்கள், மக்கள் பிரதிநிதிகள், பொதுமக்கள் அனைவருக்கும் எனது கோடான கோடி நன்றி.

> இத்தேர்தலில் நான் மீண்டும் போட்டியிட விரும்பியவர்கள், என் வாய்ப்புக்காக உதவிட முயன்றவர்கள், நாடாளுமன்ற உறுப்பினராக நான் தொடரக் கூடாதென இத்தேர்தலில் போட்டியிட வாய்ப்புக் கிட்டாமல் போக முயன்றவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றி.

> "தர்மத்தின் வாழ்வுதைனை சூது கவ்வும் தர்மம் மறுபடியும் வெல்லும்", என்று அவர் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE