உச்ச நீதிமன்றமே அனுமதி வழங்கியும் கூட வன்னியர்களுக்கு வழங்க வேண்டிய இட ஒதுக்கீட்டை வழங்க மறுக்கும் நீங்கள் சமூக நீதி பற்றி பேசலாமா? அவ்வாறு பேசுவது சமூகநீதிக்கே இழுக்கு அல்லவா? என்று முதல்வர் ஸ்டாலினுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக இன்று (ஞாயிற்றுக்கிழமை) அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு வழங்கப்படும் 20% இட ஒதுக்கீட்டில் வன்னியர்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்க எந்தத் தடையும் இல்லை, உரிய தரவுகளைத் திரட்டி இட ஒதுக்கீடு வழங்கலாம் என்று நீதிபதிகள் நாகேஸ்வரராவ், பி.ஆர்.கவாய் அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு 2022-ஆம் ஆண்டு இதே நாளில் தான் தீர்ப்பு வழங்கியது. அதன்பின் இரு ஆண்டுகள் நிறைவடைந்து விட்ட நிலையில் இன்று வரை வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்படவில்லை.
உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று 08.04.2022 அன்று மருத்துவர் அன்புமணி இராமதாஸ் தலைமையிலான 7 பேர் குழு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை சந்தித்து, அவருக்கு நான் எழுதிய கோரிக்கைக் கடிதத்தைக் கொடுத்து வலியுறுத்தியது. 2022&-23ஆம் கல்வியாண்டு தொடங்குவதற்கு முன்பாக வன்னியர் இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்று பாமக குழு வலியுறுத்தியதற்கு பதிலளித்த தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ’’கண்டிப்பாக வன்னியகளுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்படும். தேவைப்பட்டால் வன்னியர் இட ஒதுக்கீட்டுச் சட்டத்தை நிறைவேற்ற சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டத்தைக் கூட்டுவேன்” என்று உத்தரவாதம் அளித்தார்.
அதன்பின் பல முறை சட்டப்பேரவையிலும் இது தொடர்பாக வாக்குறுதிகள் அளித்தார். மு.க.ஸ்டாலின் அவர்களே.... அந்த வாக்குறுதிகள் எல்லாம் என்னவாயின?
» ஈரோடு உழவர் சந்தையில் முதல்வர் ஸ்டாலின் வாக்கு சேகரிப்பு
» வீட்டுக் கடன், பழைய ஸ்கூட்டர்... - நிர்மலா சீதாராமனின் சொத்து மதிப்பு விவரம்
உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்து 10 மாதங்களுக்குப் பிறகு, 12.01.2023-ஆம் நாள் தான் வன்னியர் உள் இட ஒதுக்கீடு குறித்து பரிந்துரைப்பதற்காக தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு ஆணை பிறப்பிக்கப்பட்டது. அதன்படி ஆணையம் 3 மாதங்களுக்குள் பரிந்துரை செய்திருக்க வேண்டும். ஆனால், அதன்பின் இரு முறை காலக்கெடு நீட்டிக்கப்பட்டிருக்கிறது; நீட்டிக்கப்பட்ட காலக்கெடுவும் இன்னும் 10 நாட்களில் நிறைவடையவுள்ளது. ஒட்டுமொத்தமாக 15 மாதங்களாகியும் ஆணையம் எதையும் செய்யவில்லை; ஆணையம் கேட்ட தரவுகளையே தமிழக அரசு தரவில்லை.
வன்னியர் உள் இட ஒதுக்கீடு குறித்த ஆய்வுகள் எந்த நிலையில் உள்ளன? எப்போது பரிந்துரை அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்று தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தை பத்துக்கும் கூடுதலான முறை அணுகி விசாரித்தோம். ஆனால், வன்னியர் உள் இட ஒதுக்கீடு தொடர்பான எந்த தரவும் இதுவரை எங்களுக்கு வரவில்லை என்பது தான் ஆணையத்தின் பதிலாக உள்ளது. வன்னியர் இட ஒதுக்கீட்டு விவகாரத்தில் திமுக அரசு காட்டும் அக்கறை இந்த அளவுக்குத் தான் உள்ளது.
எந்த அடித்தளமும் இல்லாத சூழலில், தேசிய அளவில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினரை அடையாளம் கண்டு, அவர்களுக்கான இட ஒதுக்கீடு குறித்து பரிந்துரைப்பதற்காக அமைக்கப்பட்ட முதலாவது தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் (காகா கலேல்கர்) ஆணையம் அதன் அறிக்கையை தாக்கல் செய்ய எடுத்துக் கொண்ட காலக் கெடு 26 மாதங்கள் ( பிப்ரவரி 1953 &- மார்ச் 1955).
கலேல்கர் ஆணைய அறிக்கை நிராகரிக்கப்பட்ட பிறகு அதே காரணத்திற்காக அமைக்கப்பட்ட மண்டல் ஆணையம் இந்தியா முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, லட்ச்சக்கணக்கானோரை சந்தித்து, அதனடிப்படையில் அறிக்கை தாக்கல் செய்ய எடுத்துக் கொண்ட காலக்கெடு சரியாக இரு ஆண்டுகள் ( ஜனவரி 1979 -& திசம்பர் 1980)
தமிழ்நாட்டில் இட ஒதுக்கீட்டு விகிதங்களை மாற்றியமைப்பது குறித்து பரிந்துரைக்க அமைக்கப்பட்ட முதலாவது மாநில பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் ( சட்டநாதன் ஆணையம்) அதன் அறிக்கையை தாக்கல் செய்ய தேவைப்பட்ட காலக்கெடு ஓராண்டு (1969 நவம்பர் & -1970 நவம்பர்).
ஆனால், இந்த ஆணையங்களின் பணிகளில் பத்தில் ஒரு பங்கு கூட பணிச்சுமை இல்லாத, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 20% இட ஒதுக்கீட்டில் வன்னியர்களுக்கு கிடைத்த பிரதிநிதித்துவம் எவ்வளவு? என்பதை மட்டும் கண்டறிவதற்காக, தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் இதுவரை எடுத்துக் கொண்ட காலக்கெடு 15 மாதங்கள்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களே, இது தான் வன்னியர்களுக்கு விரைந்து சமூகநீதி வழங்கும் அழகா?வன்னியர்களுக்கு சமூகநீதி வழங்குவதில் மட்டும் ஏன் இவ்வளவு வன்மம்? வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்ற உத்தரவாதத்தை எப்போது நிறைவேற்றுவீர்கள்? உச்ச நீதிமன்றமே அனுமதி வழங்கியும் கூட வன்னியர்களுக்கு வழங்க வேண்டிய இட ஒதுக்கீட்டை வழங்க மறுக்கும் நீங்கள் சமூக நீதி பற்றி பேசலாமா? அவ்வாறு பேசுவது சமூகநீதிக்கே இழுக்கு அல்லவா?” என வினவியுள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
14 mins ago
தமிழகம்
21 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago