ஓபிஎஸ்ஸுக்கு பலாப்பழம் சின்னம் - குலுக்கல் முறையில் ஒதுக்கீடு

By கி.தனபாலன்


சென்னை: பாஜக கூட்டணியில் ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிடும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தனக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கக் கோரி டெல்லி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தும் சின்னம் கிடைக்கவில்லை. பின்னர் பலாப்பழம், திராட்சைப் பழம், வாளி ஆகிய சின்னங்களில் ஒன்றை ஒதுக்குமாறு ராமநாதபுரம் தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் கோரியிருந்தார்.

குலுக்கல் முறை: அதேநேரம் ராமநாதபுரத்தில் ஓ.பன்னீர்செல்வம் பெயரில் 5 பேர் சுயேச்சையாக போட்டியிடுகின்றனர். இவர்களில் 2 பேர், ஓபிஎஸ் கேட்ட 3 சின்னங்களை தங்களுக்கும் ஒதுக்கக் கோரி இருந்தனர்.

இதையடுத்து தேர்தல் நடத்தும் அலுவலர் பா.விஷ்ணு சந்திரன் குலுக்கல் முறையில் சின்னத்தை ஒதுக்கினார். அதனடிப்படையில் ஓபிஎஸ்ஸுக்கு பலாப்பழம் சின்னமும், ஒச்சாத்தேவர் மகன் பன்னீர்செல்வத்துக்கு வாளி சின்னமும், ஒய்யாத்தேவர் மகன் பன்னீர்செல்வத்துக்கு திராட்சை சின்னமும் ஒதுக்கப்பட்டன.

சிதம்பரம், விழுப்புரம்: சிதம்பரம் (தனி) தொகுதியில் போட்டியிடும் விசிக தலைவர் திருமாவளவன் தனக்கு பானை சின்னம் ஒதுக்குமாறு, தேர்தல் நடத்தும் அலுவலர் ஜா.ஆனிமேரி ஸ்வர்ணாவிடம் கோரி இருந்தார். அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று சின்னம் ஒதுக்கும் பணி நடந்தது.

அப்போது, பானை சின்னத்தை வேறு எந்த வேட்பாளரும் கேட்காததால் விசிகவுக்கு அவர்கள் கோரிய சின்னமே ஒதுக்கப்பட்டது. இதேபோன்று விழுப்புரம் (தனி) தொகுதியில் போட்டியிடும் விசிக வேட்பாளர் ரவிக்குமாருக்கும் பானை சின்னம் ஒதுக்கப்பட்டது.

துரை வைகோவுக்கு தீப்பெட்டி: திருச்சி தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் மதிமுக வேட்பாளர் துரை வைகோ, தேர்தல் ஆணையத்தில் தங்களுக்கு பம்பரம் சின்னத்தை ஒதுக்கக் கோரி இருந்தார். தேர்தல் ஆணையம் மறுத்ததால் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

குறைந்தபட்சம் 2 தொகுதிகளில் போட்டியிட்டால் தான் பொதுச் சின்னம் ஒதுக்க முடியும் என தேர்தல் ஆணையம் தெரிவித்ததால் தீப்பெட்டி அல்லது காஸ் சிலிண்டர் சின்னங்களில் ஒன்றை ஒதுக்குமாறு துரை வைகோ கோரியிருந்தார். அதன்படி நேற்று துரை வைகோவுக்கு தீப்பெட்டி சின்னத்தை, தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் மா.பிரதீப்குமார் ஒதுக்கினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE