தமிழகத்தில் 950 பேர் போட்டி: மக்களவைத் தேர்தலுக்கான இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு

By செய்திப்பிரிவு

சென்னை: தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளுக்கான வேட்பாளர் இறுதி பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. அதன்படி, மாநிலம் முழுவதும் 950 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில், முதற்கட்ட தேர்தல் தமிழகத்தில் ஒரேகட்டமாக நடைபெறுகிறது. வரும் ஏப்.19-ம் வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில் தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும் கடந்த மார்ச் 20-ம் தேதி வேட்புமனுத் தாக்கல் தொடங்கியது. மார்ச் 27-ம் தேதி நிறைவடைந்தது. மொத்தம் 1,403 வேட்பாளர்கள் சார்பில் 1,749 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

கடந்த மார்ச் 28-ம் தேதி காலை 11 மணி முதல் 39 தொகுதிகளிலும் அந்தந்த தேர்தல் நடத்தும் அலுவலர்கள் தலைமையில், தேர்தல் பொது பார்வையாளர்கள் முன்னிலையில் வேட்பு மனுக்கள் பரிசீலனை நடைபெற்றது. கோவை, வடசென்னை, சேலம் உள்ளிட்ட சில தொகுதிகளில் பிரதான கட்சி வேட்பாளர்கள் தாக்கல் செய்த வேட்புமனுக்கள் மீது ஆட்சேபங்கள் தெரிவிக்கப்பட்டு பரிசீலனை சில மணி நேரம் நிறுத்தி வைக்கப்பட்டது. பின்னர் அனைத்து வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டன.

இதனிடையே வேட்புமனுக்களை திரும்பப் பெற நேற்று மாலை 3 மணி வரை அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. இதன்படி நிறைவாக 1,085 பேரின் மனுக்கள் ஏற்கப்பட்டன. 664 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. 135 பேர் வேட்புமனுக்களை திரும்பப் பெற்றனர்.

பின்னர் அந்தந்த தொகுதி வாரியாக இறுதி வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டது. இதன்படி தமிழகத்தில் மொத்தமுள்ள 39 மக்களவை தொகுதிகளில் 950 பேர் போட்டியிடுவது உறுதியாகியுள்ளது. இதில் 874 பேர் ஆண்கள், 76 பேர் பெண்கள்.

அதிகபட்சமாக கரூர் தொகுதியில் 54 வேட்பாளர்களும், குறைந்தபட்சமாக நாகப்பட்டினத்தில் 9 வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர். ஈரோடு தொகுதியில் அதிகபட்சமாக 16 பேர் வேட்புமனுக்களை திரும்பப் பெற்றுள்ளனர். தென் சென்னை தொகுதியில் அதிகபட்சமாக 5 பெண்கள் போட்டியிடுகின்றனர். 6 தொகுதிகளில் பெண்கள் யாரும் போட்டியிடவில்லை.

பின்னர் சுயேச்சை வேட்பாளர்களுக்கு அவர்கள் கோரிய சின்னங்கள் ஒதுக்கப்பட்டன. ஒரே சின்னத்தை பலர் கேட்ட பகுதிகளில் குலுக்கல் முறையில் சின்னங்கள் ஒதுக்கப்பட்டன.

சிதம்பரம், விழுப்புரம்: சிதம்பரம் (தனி) தொகுதியில் போட்டியிடும் விசிக தலைவர் திருமாவளவன் தனக்கு பானை சின்னம் ஒதுக்குமாறு, தேர்தல் நடத்தும் அலுவலர் ஜா.ஆனிமேரி ஸ்வர்ணாவிடம் கோரி இருந்தார். அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று சின்னம் ஒதுக்கும் பணி நடந்தது. அப்போது, பானை சின்னத்தை வேறு எந்த வேட்பாளரும் கேட்காததால் விசிகவுக்கு அவர்கள் கோரிய சின்னமே ஒதுக்கப்பட்டது. இதேபோன்று விழுப்புரம் (தனி) தொகுதியில் போட்டியிடும் விசிக வேட்பாளர் ரவிக்குமாருக்கும் பானை சின்னம் ஒதுக்கப்பட்டது.

துரை வைகோவுக்கு தீப்பெட்டி: திருச்சி தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் மதிமுக வேட்பாளர் துரை வைகோ, தேர்தல் ஆணையத்தில் தங்களுக்கு பம்பரம் சின்னத்தை ஒதுக்கக் கோரி இருந்தார். தேர்தல் ஆணையம் மறுத்ததால் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

குறைந்தபட்சம் 2 தொகுதிகளில் போட்டியிட்டால் தான் பொதுச் சின்னம் ஒதுக்க முடியும் என தேர்தல் ஆணையம் தெரிவித்ததால் தீப்பெட்டி அல்லது காஸ் சிலிண்டர் சின்னங்களில் ஒன்றை ஒதுக்குமாறு துரை வைகோ கோரியிருந்தார். அதன்படி நேற்று துரை வைகோவுக்கு தீப்பெட்டி சின்னத்தை, தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் மா.பிரதீப்குமார் ஒதுக்கினார்.

பாஜக கூட்டணியில் ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிடும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தனக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கக் கோரி டெல்லி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தும் சின்னம் கிடைக்கவில்லை. பின்னர் பலாப்பழம், திராட்சைப் பழம், வாளி ஆகிய சின்னங்களில் ஒன்றை ஒதுக்குமாறு ராமநாதபுரம் தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் கோரியிருந்தார்.

குலுக்கல் முறை: அதேநேரம் ராமநாதபுரத்தில் ஓ.பன்னீர்செல்வம் பெயரில் 5 பேர் சுயேச்சையாக போட்டியிடுகின்றனர். இவர்களில் 2 பேர், ஓபிஎஸ் கேட்ட 3 சின்னங்களை தங்களுக்கும் ஒதுக்கக் கோரி இருந்தனர். இதையடுத்து தேர்தல் நடத்தும் அலுவலர் பா.விஷ்ணு சந்திரன் குலுக்கல் முறையில் சின்னத்தை ஒதுக்கினார். அதனடிப்படையில் ஓபிஎஸ்ஸுக்கு பலாப்பழம் சின்னமும், ஒச்சாத்தேவர் மகன் பன்னீர் செல்வத்துக்கு வாளி சின்னமும், ஒய்யாத்தேவர் மகன் பன்னீர்செல்வத்துக்கு திராட்சை சின்னமும் ஒதுக்கப்பட்டன.

விளவங்கோடு: மக்களவைத் தேர்தலோடு காலியாகவுள்ள விளவங்கோடு சட்டப்பேரவை தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடக்கிறது. இங்கு போட்டியிட 18 வேட்பாளர்கள் 22 மனுக்களை தாக்கல் செய்திருந்தனர். இதில் வேட்புமனுக்கள் பரிசீலனைக்குப் பிறகு 10 மனுக்கள் ஏற்கப்பட்டன. இறுதி வேட்பாளர் பட்டியல்படி இங்கு 10 பேர் களத்தில் உள்ளனர்.

இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்ட நிலையில், அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் அனைவருக்கும் சின்னங்களும் ஒதுக்கப்பட்டுவிட்டன. இதனால் வேட்பாளர்களின் பிரச்சாரமும் தீவிரமடைவதால், தமிழகத்தில் தேர்தல் களம் இன்றுமுதல் அனல் பறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தேர்தல் அதிகாரிகளும் பறக்கும் படைகள், நிலைப் படைகள், வீடியோ கண்காணிப்பு குழுக்கள் ஆகியவற்றின் மூலம் கண்காணிப்பை தீவிரப்படுத்தி, பணப்பட்டுவாடா, பரிசு பொருட்கள் விநியோகத்தை தடுக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

புதுச்சேரியில் 26 பேர்: புதுச்சேரி மக்களவைத் தொகுதியில் 27 பேர் சமர்ப்பித்த 36 மனுக்கள் பரிசீனைக்குப் பிறகு ஏற்கப்பட்டிருந்தன. இந்நிலையில் நேற்று சுயேச்சை வேட்பாளர் ஒருவர் வேட்புமனுவை வாபஸ் பெற்றார். இதையடுத்து காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கம், பாஜக வேட்பாளர் நமச்சிவாயம், அதிமுக தமிழ்வேந்தன், 19 சுயேச்சைகள் உட்பட 26 பேர் புதுச்சேரி தேர்தல் களத்தில் உள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 mins ago

தமிழகம்

40 mins ago

தமிழகம்

46 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

5 hours ago

மேலும்