மாநில கட்சிகளை ஒழிக்க முற்படும் பாஜக, ஆர்எஸ்எஸ் அமைப்பு: முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கருத்து

By செய்திப்பிரிவு

காரைக்குடி: தேசியக் கட்சியான காங்கிரஸை அழித்துவிட்டு, மாநிலக் கட்சிகளை ஒழித்துவிடலாம் என பாஜக, ஆர்எஸ்எஸ் கருதுவதாக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கூறினார்.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகேயுள்ள கல்லலில், இண்டியா கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில், அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன், காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரம், தமிழரசி எம்எல்ஏ உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் பேசியதாவது: மூன்றாவது முறையாக மோடி பிரதமரானால், இதுதான் கடைசிதேர்தலாக இருக்கும். இந்தியாவில் அடுத்து தேர்தல் நடக்கும் என்ற நம்பிக்கை இல்லை. அந்தஅளவுக்கு பாஜக அரசு சர்வாதிகாரப் பாதையில் செல்கிறது. திரைப்படக் கதாசிரியர், இயக்குநர் எல்லாம் கற்பனை செய்து பார்க்க முடியாது நிகழ்வுகள் தற்போது நடந்து கொண்டிருக்கின்றன. பெரும்பான்மை மக்களால் தேர்வு செய்யப்பட்ட மாநில முதல்வரை கைது செய்கின்றனர்.

திமுக உள்ளிட்ட மற்ற கட்சிகள் வலிமையாக இருந்தாலும், அவை மாநிலக் கட்சிகள்தான். தேசிய அளவில் பாஜகவை எதிர்ப்பது காங்கிரஸ் மட்டுமே. இதனால்தான் காங்கிரஸ் அல்லாத பாரதம் என்று பாஜக கூறிவருகிறது. அறக்கட்டளையைப் போன்று அரசியல் கட்சிக்கும் வருமான வரி விலக்கு உண்டு. இதனால் வரி கட்டியது கிடையாது.

ஆனால், காங்கிரஸின் வங்கிக் கணக்கை முடக்கியதுடன், வருமான வரி, அபராதம் என்று ரூ.1,821 கோடி செலுத்தக் கோரி நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். தற்போது இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கும் நோட்டீஸ் அனுப்பி உள்ளனர். அடுத்து மற்ற கட்சிகளுக்கும் நோட்டீஸ் வரும். இது அனைத்துக் கட்சிகள் மீதான தாக்குதலாகும்.

தேசியக் கட்சியான காங்கிரஸை அழித்து விட்டால், மாநிலக் கட்சிகளை ஒழித்துவிடலாம் என பாஜக, ஆர்எஸ்எஸ் ஆகியவை கருதுகின்றன. ஒரே நாடு; ஒரே தேர்தல்; ஒரே கட்சி, ஒரே தலைவர் என்பதே பாஜகவின் குறிக்கோள். அதுவும் மோடி மட்டும்தான். அவர்தான் வாழ்நாள் முழுவதும் தலைவராக இருக்க வேண்டும் என்பதே பாஜகவின் நோக்கம்.

ஒரே கட்சிக்கு வாக்களி, இல்லாவிட்டால் வீட்டிலேயே இரு என்றநிலை உருவாகும். எனவே, மத்தியில் மாற்று அரசு வந்தால்தான், இந்தக் கொடுமையில் இருந்து தப்ப முடியும். பேச்சுரிமை, எழுத்துரிமை உள்ளிட்டவற்றைப் பாதுகாக்க, அரசியல் சாசனத்தில் திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும். இதற்கு மோடி பிரதமர் பதவியில் இருந்து அகற்றப்பட வேண்டும். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் இந்தத் திருத்தங்களை மேற்கொள்வோம் என உறுதியளிக்கிறேன்.

அனைத்து மதத்தினரும் ஒற்றுமையாக வாழக் கூடிய இடம்தான் தமிழ்நாடு. பல மாநிலங்களில் இந்து, முஸ்லிம் பகை வளர்ந்து கொண்டிருக்கிறது. இவ்வாறு அவர் பேசினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE