புதுச்சேரி: புதுச்சேரியில் துணைநிலை ஆளுநருக்கே அதிக அதிகாரம் உள்ளது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசு, கைகட்டி வேடிக்கைப் பார்க்கிறது என்று அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி கூறினார்.
புதுச்சேரி மக்களவைத் தொகுதிஅதிமுக வேட்பாளர் தமிழ்வேந்தனுக்கு ஆதரவாக உப்பளம் புதிய துறைமுக வளாகத்தில் நேற்று மாலை நடைபெற்ற தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்துக்கு, அதிமுக புதுச்சேரி மாநிலச் செயலாளர் அன்பழகன் தலைமை வகித்தார். இதில், பொதுச் செயலாளர் பழனிசாமி பேசியதாவது:
புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் அதிக அதிகாரம் துணைநிலை ஆளுநருக்குத்தான் இருக்கிறது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு, கைகட்டி வேடிக்கைப் பார்க்கும் அவலநிலை தொடர்கிறது. புதுச்சேரி தனி மாநில அந்தஸ்து பெற வேண்டுமெனில், அதிமுக வேட்பாளர் வெற்றிபெற வேண்டும். புதுச்சேரி-தமிழகத்தில் உள்ளஅதிமுக கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி பெற்று, புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்துக்கு நாடாளுமன்றத்தில் குரல் கொடுப்பார்கள்.
புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கிடைத்தால்தான் உரிய நிதிப் பகிர்வு கிடைக்கும். மாநில அந்தஸ்து இல்லாததால், போதுமான நிதி கிடைப்பதில்லை.
ஏறத்தாழ 43 ஆண்டுகாலமாக காங்கிரஸ், திமுக, என்.ஆர்.காங்கிரஸ் கட்சிகள் மாறி மாறி ஆட்சிபுரிந்தும், மாநில உரிமையை மீட்கமுடியவில்லை. அதிமுக வேட்பாளரால்தான் இதை சாதிக்க முடியும்.
புதிய சட்டப்பேரவை கட்டுவதற்காக 3 ஆண்டுகளுக்கு முன்பே கோப்பு அனுப்பப்பட்டும், துணைநிலை ஆளுநர் நிறுத்திவைத்துள்ளார். அந்த திட்டத்தை டெல்லிக்குகூட இதுவரை அனுப்பவில்லை.
தமிழகத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கும், முதல்வருக்கும் முழு அதிகாரம் உள்ளது.அதேநிலை, புதுச்சேரிக்கும் அவசியம். கடந்த10 ஆண்டுகளாக இங்குஉள்ளாட்சித் தேர்தல் நடத்தவில்லை. இந்த சூழல்நிலையில், மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் எப்படி கிடைக்கும்?மக்களுக்கு அடிப்படைத் தேவைகள் கிடைக்க வேண்டுமெனில், உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.
சர்வதேச அளவில் சுற்றுலாத் தொழிலுக்குப் பிரசித்தி பெற்றது புதுச்சேரி. ஆனால், மாநில அந்தஸ்து இல்லாததால், போதுமான அளவுக்கு வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ள முடியவில்லை. காங்கிரஸ், பாஜக என மாறி மாறி ஆட்சி அமைந்தாலும், புதுச்சேரி யூனியன் பிரதேசத்துக்குத் தேவையான நிதியை வழங்குவது இல்லை.அதிமுக வேட்பாளர் வெற்றி பெற்றால், சிங்கப்பூர்போல புதுச்சேரி மாற்றியமைக்கப்படும்.
தமிழகத்தைப் போலவே புதுச்சேரியிலும் போதைப் பொருள் கடத்தல் பரவியுள்ளது. அதிக அளவிலான இளைஞர்கள், மாணவர்கள் போதைக்கு அடிமையாகி, வாழ்க்கையை சீரழித்துக் கொள்கின்றனர். இதை தடுத்து நிறுத்துவது அவசியம்.
கடந்த 43 ஆண்டுகளாக, புதுச்சேரியில் அதிமுகவைத் தவிர மற்றகட்சிகளால் வளர்ச்சி ஏற்படவில்லை. அதிமுக ஆட்சியில் தமிழகம் எப்படி வளர்ச்சி அடைந்ததோ, அதேபோல புதுச்சேரியும் வளர்ச்சியடைய வேண்டும். அதற்கு, தமிழ்வேந்தன் மற்றும் தமிழகத்தில் போட்டியிடும் அதிமுக கூட்டணி வேட்பாளர்கள் அனைவரும் வெற்றிபெற வேண்டும்.
அண்மையில் புதுச்சேரியில் போதைக்கு அடிமையானவர்கள், 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து, கொலை செய்துள்ளனர். இது மிகுந்த வேதனையளிக்கும் சம்பவம். இதற்குகாரணம் புதுச்சேரி மாநிலத்தில்சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்து இருப்பதும், அதிக அளவில் போதைப் பொருள் விற்கப்படுவதும்தான். இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.
திமுகவைச் சேர்ந்த ஜாபர் சாதிக் போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டதாக அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவருக்கும், புதுச்சேரியைச் சேர்ந்த சிலருக்கும் தொடர்பு இருப்பதாகவும் செய்திகள் வந்துள்ளது. இது உண்மையான தகவல் என்றால், கடும் கண்டனத்துக்குரியது.
தமிகத்தில் அதிமுக ஆட்சியில் அனைத்துப் பகுதிகளிலும் ரேஷன் கடைகளைத் திறந்தோம். ஆனால், புதுச்சேரியில் 10 ஆண்டுகளாக ரேஷன் கடைகளை முடக்கி வைத்துள்ளனர். அனைத்து ரேஷன் கடைகளும் திறக்கப்பட்டு, போதுமான அளவுக்கு அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்க வேண்டுமெனில், புதுச்சேரியில் அதிமுக ஆட்சி மலர வேண்டும். இவ்வாறு பழனிசாமி பேசினார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago