புதுச்சேரி தொகுதியில் பாஜக, காங், அதிமுக உட்பட 26 வேட்பாளர்கள் போட்டி

By செ.ஞானபிரகாஷ்

புதுச்சேரி: புதுச்சேரி மக்களவைத் தொகுதியில் பாஜக, காங்கிரஸ், அதிமுக உட்பட 26 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இதில் 3 பேர் பெண்கள்.

புதுவை மக்களவைத் தொகுதி தேர்தல் வாக்குப்பதிவு ஏப்ரல் 19-ம் தேதி நடக்கிறது. தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 20-ம் தேதி தொடங்கி 27-ம் தேதி வரை நடந்தது. 28-ம் தேதி வேட்புமனுக்கள் பரிசீலிக்கப்பட்டன. இறுதியாக அரசியல் கட்சி வேட்பாளர்கள் உட்பட 27 பேர் சமர்பித்த 36 மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளது. இன்று பிரவீணா மனுவை திரும்ப பெற்றதால் புதுச்சேரியில் 26 பேர் போட்டியிடுவது உறுதியானது.

அதையடுத்து தேர்தல் நடத்தும் அதிகாரி குலோத்துங்கன் இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: புதுச்சேரியில் மக்களவைத் தொகுதியில் 26 பேர் போட்டியிடுகின்றனர். இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டு சின்னங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன.

தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுக்கு முதலில் சின்னங்கள் ஒதுக்கப்பட்டன. அதன்படி பாஜகவில் போட்டியிடும் நமச்சிவாயத்துக்கு தாமரையும், காங்கிரஸில் போட்டியிடும் வைத்திலிங்கத்துக்கு கை சின்னமும், அதிமுகவில் போட்டியிடும் தமிழ்வேந்தனுக்கு இரட்டை இலை சின்னமும், பகுஜன் சமாஜ் கட்சியில் போட்டியிடும் அலங்காரவேலுவுக்கு யானை சின்னமும் ஒதுக்கப்பட்டது.

பதிவு செய்த அரசியல் கட்சிகளுக்கு சின்னங்கள் ஒதுக்கப்பட்டன. அதன்படி நாம் தமிழர் கட்சி மேனகாவுக்கு ஒலிவாங்கியும், சோசியலிஸ்ட் யுனிட்டி சென்டர் ஆப் இந்தியா (கம்யூனிஸ்ட்) கட்சி சங்கரனுக்கு பானை சின்னமும், ஒருங்கிணைந்த இந்திய குடியரசு கட்சி பிரபுதேவனுக்கு காஸ் சிலிண்டரும் ஒதுக்கப்பட்டது. அதையடுத்து 19 சுயேச்சைகளுக்கும் சின்னங்கள் ஒதுக்கப்பட்டன. வேட்பாளர் இறுதி பட்டியல் வெளியிடப்பட்டது என்று குறிப்பிட்டுள்ளார்.

வாக்குச்சீட்டு அச்சிடும் பணி துவங்குகிறது: வேட்பாளர் இறுதி பட்டியல் வெளியான நிலையில் வாக்கு சீட்டுகள், தபால் வாக்குகள், 85 வயதுக்கு மேற்பட்டோர், மாற்றுத்திறனாளிகளின் வாக்கு பதிவுக்கு வாக்குச்சீட்டுகள் அச்சடிக்கும் பணி தொடங்கப்படும் என்று தேர்தல் துறையினர் குறிப்பிட்டனர்.

மூவர் பெண்கள்: வேட்பாளர்களில் நாம் தமிழர் கட்சி மற்றும் 2 சுயேச்சைகள் உட்பட 3 பெண்கள் வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE