சாதிவாரி கணக்கெடுப்புக்கு அழுத்தம் கொடுக்காதது ஏன்? - ராமதாஸுக்கு ஸ்டாலின் கேள்வி

By செய்திப்பிரிவு

சேலம்: “கடந்த 3 தேர்தலாக தேசிய ஜனநாயக கூட்டணியில் இருக்கும் பாமக ஏன் சாதிவாரி கணக்கெடுப்புக்கு அழுத்தம் கொடுக்கவில்லை” என்று பாமக நிறுவனர் ராமதாஸுக்கு முதல்வர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

சேலம் மாவட்டம், பெத்தநாயக்கன்பாளையத்தில் நடைபெற்ற இண்டியா கூட்டணியின் மக்களவைத் தேர்தல் பரப்புரைப் பொதுக்கூட்டத்தில் சேலம் வேட்பாளர் செல்வகணபதி, கள்ளக்குறிச்சி வேட்பாளர் மலையரசன் ஆகியோரை அறிமுகப்படுத்தி முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், “பாஜக எனும் மதவெறிக் கூட்டத்தோடு சேர்ந்திருப்பது யார்? நான் பெரிதும் மதிக்கும் சமூகநீதி பேசும் டாக்டர் ராமதாஸ் சேர்ந்திருக்கிறார். ஏன் சேர்ந்தார்? எதற்காக சேர்ந்தார் என்று உங்களுக்கும் தெரியும். அவர்கள் கட்சிக்காரர்களுக்கும் நன்றாகத் தெரியும்.

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்த ராமதாஸ், அந்தக் கணக்கெடுப்பை நடத்த வேண்டாம் என்று சொல்லும் சமூக நீதிக்கு எதிரான பா.ஜ.க.விடம் சரண்டர் ஆகியிருக்கிறார். இதைப்பற்றி நேற்று தருமபுரி கூட்டத்தில் நான் மிகத் தெளிவாகப் பேசியிருக்கிறேன். | அதன் விவரம்: “சமூக நீதிக்கு எதிரான பாஜகவுடன் ராமதாஸ் கைகோத்த மர்மம் என்ன?” - ஸ்டாலின் சரமாரி தாக்கு

அதற்கு விளக்கம் கொடுப்பதாக நினைத்து, ராமதாஸ் இன்றைக்கு என்ன சொல்லியிருக்கிறார் “பாஜக கூட்டணியில் பா.ம.க. வலிமையான கட்சியாக இருக்கிறது. அதனால், பாஜகவுக்கு அழுத்தம் தந்து சாதிவாரி கணக்கெடுப்பை நிறைவேற்றுவோம்” என்று சொல்கிறார். | அதன் விவரம்: “வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கிவிட்டு சமூகநீதி குறித்து ஸ்டாலின் பாடம் நடத்தட்டும்” - ராமதாஸ்

ஆனால், பாமக கடந்த 3 தேர்தலாக தேசிய ஜனநாயக கூட்டணியில்தான் இருக்கிறது. உழவர்களுக்கு எதிரான 3 வேளாண் சட்டங்களுக்கும், இலங்கைத் தமிழருக்கும், சிறுபான்மையினருக்கும் எதிரான குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கும் ஆதரவு தெரிவித்து வாக்களித்த பா.ம.க., ஏன் சாதிவாரிக் கணக்கெடுப்புக்கு அழுத்தம் கொடுக்கவில்லை?

அதனால்தான், இந்த சந்தர்ப்பவாதக் கூட்டணியை ஏற்றுக் கொள்ள முடியாமல், அவர்கள் கட்சிக்காரர்களே மனம் நொந்து, அவமானத்தில் தலைகுனிந்து இருக்கிறார்கள்.

இன்று காலை நாளேடுகளில் மோடி பேசிய பேச்சு வெளிவந்திருக்கிறது. தன்னுடைய தாய்மொழியாகத் தமிழ் வாய்க்கவில்லை என்று வருத்தப்பட்டு பேசியிருக்கிறார். நேற்று மாலையில் இதைப் பேசிய அவர், காலையில் என்ன செய்திருக்கிறார் தெரியுமா? “அகில இந்திய வானொலி” என்ற தமிழ்ப் பெயரை ”ஆகாசவாணி” என்று இந்திப் பெயருக்கு மாற்றி உத்தரவு போட்டிருக்கிறார்” என்றார் முதல்வர் ஸ்டாலின்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE