சிதம்பரம் மக்களவைத் தொகுதி, எனது சொந்த தொகுதி. இந்த முறையும் இங்குதான் நான் போட்டியிடுவேன்" என்று தொகுதி உடன்பாடு நடந்து கொண்டிருந்த நேரத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்திருந்தார். அதுபோலவே, திமுக கூட்டணியில் சிதம்பரத்தை கேட்டுப் பெற்று, இந்த முறையும் அங்கு களமிறங்குகிறார்.
சிதம்பரம் (தனி) தொகுதி கடலூர், பெரம்பலூர், அரியலூர் ஆகிய 3 மாவட்டங்களை உள்ளடக்கிய தொகுதியாகும். 2004 மக்களவைத் தேர்தல் வரை இந்த தொகுதி சிதம்பரம், புவனகிரி, காட்டு மன்னார்கோவில் (தனி), மங்களூர் (தனி), குறிஞ்சிப்பாடி, விருத்தாசலம் ஆகிய சட்டபேரவைத் தொகுதிகளை உள்ளடக்கியதாக இருந்தது.
2008-ல் தொகுதி மறுசீரமைப்பில் மங்களூர் (தற்போது திட்டக்குடி), விருத்தாசலம், குறிஞ்சிப்பாடி ஆகிய தொகுதிகள் கடலூர் மக்களவைத் தொகுதியில் சேர்க்கப்பட்டன. அந்த 3 தொகுதிகளுக்கு மாற்றாக அரியலூர் மாவட்டத்தில் உள்ள அரியலூர், ஜெயங்கொண்டம், பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள குன்னம் ஆகிய தொகுதிகள் சேர்க்கப்பட்டுள்ளன.
1957-ல் ‘இரட்டை உறுப்பினர்’ தொகுதியாக இந்த தொகுதி இருந்தது. அந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஆர்.கனகசபை பிள்ளை, எல்.இளையபெருமாள் ஆகியோர் எம்.பி.க்களாக வெற்றி பெற்றனர்.
1962-ல் நடந்த மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியைச்சேர்ந்த ஆர்.கனகசபை, 1967, 1971-ல் திமுகவைச் சேர்ந்த வி.மாயவன், 1977-ல் அதிமுகவைச் சேர்ந்த ஏ.முருகேசன், 1980-ல் திமுகவைச் சேர்ந்த வே.குழந்தைவேலு ஆகியோர் வெற்றி பெற்றனர்.
1984, 1989. 1991 ஆகிய 3 முறையும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த டாக்டர் ப.வள்ளல்பெருமான், 1996-ல் திமுகவைச் சேர்ந்த சி.வெ.கணேசன் (தற்போதைய தொழிலாளர் நலத் துறை அமைச்சர்), 1998-ல் பாமகவைச் சேர்ந்த தலித் எழில்மலை, 1999, 2004-ல் பாமகவைச் சேர்ந்த இ.பொன்னுசாமி, 2009-ல் விசிக தலைவர் திருமாவளவன், 2014-ல் அதிமுகவைச் சேர்ந்த மா.சந்திரகாசி ஆகியோர் வெற்றி பெற்றனர்.
2019-ல் மீண்டும் திருமாவளவன் வெற்றி பெற்று, தற்போதைய மக்களவைத் தொகுதி உறுப்பினராக தொடர்கிறார். சிதம்பரம் (தனி) தொகுதியில் நடைபெற்ற 16 மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் 5 முறையும், திமுக 4 முறையும், பாமக 3 முறையும், அதிமுக 2 முறையும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி 2 முறையும் வென்றுள்ளன.
இங்கு 5 முறை போட்டியிட்ட திருமாவளவன் 2 முறை வெற்றி பெற்றுள்ளார். 2019 தேர்தலில் திருமாவளவன், அதிமுக வேட்பாளர் சந்திரசேகரை எதிர்த்து போட்டியிட்டு, வெற்றி பெற்றார். தற்போது 6-வது முறையாக போட்டியிடுகிறார். இம்முறை தனி சின்னத்தில் களம் காண்கிறார்.
இவருடன் பாஜக வேட்பாளர் பி.கார்த்தியாயினி, அதிமுக வேட்பாளர் மா.சந்திரகாசன், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் இரா.ஜான்சிராணி, பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் க.நீலமேகம் மற்றும் 9 சுயேச்சைகள் போட்டியில் இருந்தாலும், முக்கிய போட்டியாளர்களாக விடுதலை சிறுத்தைகள், அதிமுக, பாஜக வேட்பாளர்கள்தான் உள்ளனர்.
சிதம்பரம் மக்களவைத் தொகுதியில் உள்ள 6 சட்டப்பேரவைத் தொகுதிகளில் குன்னம், ஜெயங்கொண்டம் தொகுதிகள் திமுக வசம் உள்ளன. காட்டுமன்னார்கோவில் விடுதலை சிறுத்தைகள் வசமும், அரியலூர் மதிமுக வசமும் உள்ளது. புவனகிரி, சிதம்பரம் தொகுதிகள் அதிமுக வசம் உள்ளன. திருமாவளவனுக்காக தமிழக அமைச்சர்கள் எம்ஆர்கே.பன்னீர்செல்வம், சி.வெ.கணேசன், எஸ்.எஸ்.சிவசங்கர் ஆகியோர் தீவிரமாக தேர்தல் பணியாற்றி வருகின்றனர்.
‘வெற்றி பெற்றபிறகு தொகுதிக்கு வந்து மக்களை சந்திக்கவில்லை, தொகுதிக்கு எதுவும் செய்யவில்லை’ என்ற மனக்குறை திருமாவளவன் மீது மக்களிடம் அதிக அளவில் உள்ளது. ஆனாலும், திமுக, விடுதலை சிறுத்தை கட்சிகளின் வாக்கு வங்கியை நம்பி களம் காண்கிறார்.
அதிமுக வேட்பாளர் மா.சந்திரகாசன் பெரம்பலூர் மாவட்ட அதிமுக இலக்கிய அணி செயலாளராக உள்ளார். வேளாண் துறையில் பணியாற்றிய இவர், கட்சிப் பணிக்காக அரசுப் பணியை ராஜினாமா செய்தவர். கடந்த உள்ளாட்சித் தேர்தலில் இவரது மனைவி அம்பிகா சந்திரகாசன், அரியலூர் மாவட்ட கவுன்சிலராக, தமிழக அளவில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
சந்திரகாசன் இந்த தொகுதியில் உள்ள அதிமுக வாக்குவங்கியை நம்பி களம் காண்கிறார். பாஜக வேட்பாளர் பி.கார்த்தியாயினி, திருவண்ணாமலையை சேர்ந்தவர். 2011-ல் அதிமுக சார்பில் வேலூர் மேயரானார். 2017-ல் பாஜகவில் இணைந்து, தற்போது அக்கட்சியில் மாநிலச் செயலாளராக உள்ளார்.
தொகுதிக்கு புதியவரான கார்த்தியாயினி, பாமக மற்றும் கூட்டணிக் கட்சிகளின் வாக்கு வங்கியை நம்பி களம் இறங்கியிருக்கிறார். இவர்களுடன் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் இரா.ஜான்சி ராணியும் வழக்கமான வாக்குகளை வசப்படுத்த, பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்த தொகுதியில் 7,49,623 ஆண் வாக்காளர்கள், 7,61,206 பெண் வாக்காளர்கள், 86 இதர வாக்காளர்கள் என மொத்தம் 15,10,915 வாக்காளர்கள் உள்ளனர்.
தீர்க்கப்படாத பிரச்சினைகள்: கொள்ளிடத்தில் தடுப்பணை அமைக்கப்படவில்லை (அரியலூர்). நீண்டகாலமாக தொகுதி மக்களால் வலியுறுத்தப்படும் முந்திரி தொழிற்சாலை அமைக்கப்படவில்லை (அரியலூர்), நிரந்தர வெள்ளத் தடுப்புப் பணிகள் மேற்கொள்ளப்படவில்லை. (சிதம்பரம், காட்டுமன்னார்கோவில்).
சுற்றுலா மற்றும் ஆன்மிக நகரமான சிதம்பரத்தில் முக்கிய ரயில்கள்கூட நின்று செல்வதில்லை. சிதம்பரம்-காட்டுமன்னார்கோவில்- ஜெயங்கொண்டம் ரயில் பாதை திட்டம் பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ளது.`பிச்சாவரம் சுற்றுலாத் தலம் உலகத் தரத்துக்கு மேம்படுத்தப்படும், சிதம்பரம் நகரில் கவரிங் வர்த்தகச் சந்தை உருவாக்கப்படும்' என தேர்தல்கள் தோறும் அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் அப்படியே உள்ளன.
சிதம்பரம் தொகுதியில் வன்னியர் சமூகத்தினர் 35 சதவீதம், பட்டியல் இனத்தவர் 31 சதவீதம், இதர சமூகத்தினர் (உடையார், மூப்பனார், முதலியார், பிள்ளைமார், யாதவர், ரெட்டியார் மற்றும் பிற சமூகத்தினர்) 28 சதவீதம், முஸ்லிம்கள் 3 சதவீதம், கிறிஸ்தவர்கள் 3 சதவீதம் உள்ளனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
4 mins ago
தமிழகம்
50 mins ago
தமிழகம்
24 mins ago
தமிழகம்
30 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
15 hours ago