பயணிகளின் கூட்ட நெரிசலை சமாளிக்க சென்னை சென்ட்ரல் - கோவை இடையே சிறப்பு ரயில்

By செய்திப்பிரிவு

சென்னை: கோவை - சென்னை சென்ட்ரல் இடையேயான சிறப்பு ரயில் (வண்டி எண்.06050) கோவையில் இருந்து நாளை (31-ம் தேதி) இரவு 11.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 8.30 மணிக்கு சென்னை சென்ட்ரல் வந்தடையும்.

மறுமார்க்கத்தில், சென்னையிலிருந்து இந்த ரயில் (06049) நாளை மறுநாள் (ஏப்.1-ம் தேதி) காலை 10.20 மணிக்குப் புறப்பட்டு அன்று இரவு 8.25 மணிக்கு கோவை சென்றடையும். இந்த சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு தொடங்கி உள்ளது.

பராமரிப்பு பணி காரணமாக, சென்னை சென்ட்ரல் வழியாக இயக்கப்படும் சில ரயில்கள் மாற்றுப் பாதையில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, ஆலப்புழா-தன்பாத் விரைவு ரயில் (வண்டி எண்.13352), கொச்சுவேலி-கோரக்பூர் ரப்திசாகர் விரைவு ரயில் (12512) ஆகியவை வரும் ஏப்.2-ம் தேதியும், இந்தூர்-கொச்சுவேலி அதிவிரைவு ரயில் (22645), தன்பாத்-ஆலப்புழா விரைவு ரயில் (13351)ஆகியவை ஏப்.1-ம் தேதி சென்னை சென்ட்ரலுக்கு செல்லாமல் பெரம்பூர் வழியாக இயக்கப்படும். பயணிகளின் வசதிக்காக மேற்கண்ட ரயில்கள் பெரம்பூரில் நின்று செல்லும்.

மேலும், ஈரோடு-சென்னை சென்ட்ரல் ஏற்காடு விரைவு ரயில் (22650), கேஎஸ்ஆர் பெங்களூரு-சென்னை சென்ட்ரல் விரைவு ரயில் (12658) ஆகியவை வரும் ஏப்.2-ம் தேதி ஆவடி வரை மட்டுமே இயக்கப்படும்.

சென்னை சென்ட்ரல்-கேஎஸ்ஆர் பெங்களூரு விரைவு ரயில் (12657) வரும் ஏப்.2-ம் தேதியன்றும், ஹவுரா-சென்னை சென்ட்ரல் மெயில் ஏப்.1-ம் தேதியன்றும், சென்னை சென்ட்ரல்-ஈரோடு ஏற்காடு விரைவு ரயில் (22649), சென்னை சென்ட்ரல்-ஷாலிமர் கோரமண்டல் விரைவுரயில் (12842) ஏ்ப்.3-ம் தேதியன்றும் சென்னை சென்ட்ரலுக்குப் பதிலாக சென்னை கடற்கரையில் இருந்து இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE