கிண்டி தேசிய முதியோர் நல மருத்துவமனையில் ஒரு மாதத்தில் 8,673 பேருக்கு சிகிச்சை

By செய்திப்பிரிவு

சென்னை: சென்னை கிண்டியில் உள்ள கிங் இன்ஸ்டிடியூட் வளாகத்தில் ரூ.157 கோடியில் கட்டப்பட்டுள்ள தேசிய முதியோர் நல மையத்தை (மருத்துவமனை) பிரதமர் நரேந்திர மோடி கடந்த பிப்ரவரி 25-ம்தேதி திறந்து வைத்தார். 40 தீவிரசிகிச்சைப் பிரிவு மற்றும் 200 படுக்கைகள் கொண்ட இந்த மருத்துவமனையில் அதிநவீன மருத்துவ உபகரணங்கள், 5 அறுவை சிகிச்சை அரங்குகள், 20 கட்டண வார்டுகள் உள்ளன.

டிவி, குளிர்சாதன வசதியுடன் கூடிய கட்டண அறையில்உணவுடன் சேர்த்து ரூ.900 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 60 மருத்துவர்கள், 10 உயர் சிறப்புமருத்துவர்கள், 216 செவிலியர்கள், இயன்முறை சிகிச்சையாளர்கள் உள்ளிட்டோர் அங்கு பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

இதயம், சிறுநீரகம், மூளை,மனநலம், பார்வைத்திறன் குறைபாடு, ஞாபக மறதி உள்ளிட்ட அனைத்துபிரச்சினைகளுக்கு முதியவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. மேலும்,முதுமையியல், முதியோர்மருத்துவம் சார்ந்த ஆராய்ச்சிகளும் மேற்கொள்ளப்படுகின்றன. மருத்துவமனை திறக்கப்பட்டு ஒரு மாதம் நிறைவடைந்துள்ள நிலையில், இதுவரை 8,673 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மருத்துவமனையின் பொறுப்பாளர் மருத்துவர் எஸ்.தீபா கூறுகையில், ``தேசிய முதியோர் நல மருத்துவமனையை நாடி வருவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுவரை 8,673 பேர் சிகிச்சைபெற்றுள்ளனர். உள் நோயாளிகளாக மட்டும் இதுவரை 261பேர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்றுள்ளனர்.

அதில் 197 பேர்குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட 101 பேருக்கு சிகிச்சை வழங்கப்பட்டுள்ளது. கடந்த ஒருமாதத்தில் இதய சிகிச்சைகளுக்காக அதிகமானோர் அனுமதிக்கப்பட்டுள்ளனர்'' என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE