தமிழகத்தில் பாஜக கூட்டணி கட்சிகளுக்கு மட்டும் கேட்ட சின்னம் கிட்டியது எப்படி? - ஒரு பின்புலப் பார்வை

By நிவேதா தனிமொழி

நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்காமல், அதற்கு பதிலாக ‘மைக்’ சின்னத்தைத் தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது. அதேபோல், மதிமுகவுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்கப்படவில்லை. விசிக கடந்த முறை போட்டியிட்ட பானை சின்னத்தை ஒதுக்க முடியாது என தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. பாஜக கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு அவர்கள் கேட்கும் சின்னம் ஒதுக்கப்படுவதாகவும், ஆனால் எதிர்க்கட்சிகளுக்கு கேட்ட சின்னத்தை ஒதுக்காமல் தேர்தல் ஆணையம் ஒருதலைபட்சமாக செயல்படுவதாகவும் எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர். அதன் பின்னணி என்ன?

நாம் தமிழர் கட்சி சின்னம்: 2019-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில், நாம் தமிழர் கட்சி கரும்பு விவசாயி சின்னத்தில் போட்டியிட்டது. அதனைத் தொடர்ந்து நடந்த அனைத்து தேர்தல்களிலும் நாதக கரும்பு விவசாயி சின்னத்தில் தான் போட்டியிட்டது. இந்த நிலையில், தற்போது இந்தச் சின்னத்துக்கும் சிக்கல் எழுந்தது. முன்னுரிமை அடிப்படையில் அந்தச் சின்னத்தை வேறு ஒரு கட்சிக்கு ஒதுக்கியதால் நாம் தமிழருக்கு அந்தச் சின்னம் கிடைக்கவில்லை. அவர்கள் நீதிமன்ற படி ஏறிய நிலையிலும் எதுவும் நடக்கவில்லை. இதனால், மைக் சின்னத்தைத் தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது.

இந்த நிலையில், செய்தியாளர்களைச் சந்தித்த நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான், “பாஜக என்னுடன் கூட்டணி வைக்க பேச்சுவார்த்தை நடத்தியது. அதற்கு நான் மறுப்பு தெரிவித்ததால் சின்னம் ஒதுக்கப்படவில்லை. ஒருவேளை நான் கூட்டணி அமைத்திருந்தால் எனக்கு கரும்பு விவசாயி சின்னம் கிடைத்திருக்கும்” எனப் பேசினார்.

மதிமுகவுக்கும் சிக்கலாகும் சின்னம்: 1996-ம் ஆண்டு முதல் போட்டியிட்டு வருகிறது. இந்தத் தேர்தல்களில் மதிமுகவுக்குப் பம்பரம் சின்னம் ஒதுக்கப்பட்டது. கடந்த 2006-ம் ஆண்டுசட்டப்பேரவை தேர்தலில் 5.99 சதவீத வாக்குகள் பெற்ற நிலையில், மாநில கட்சியின் அங்கீகாரத்தைத் தேர்தல் ஆணையம் ரத்து செய்தது. இருந்தபோதிலும், 2014-ம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலில் மதிமுகவுக்குப் பம்பரம் சின்னம் ஒதுக்கப்பட்டது. எனவே, வரும் மக்களவைத் தேர்தலிலும் மதிமுகவுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்க வேண்டும் என்று கோரி தேர்தல் ஆணையத்துக்கு மதிமுக மனு அளிந்திருந்தது.

ஆனால், “இரண்டு தொகுதியில் போட்டியிட்டால் மட்டுமே பம்பரம் சின்னம் ஒதுக்க முடியும். ஒரு தொகுதியில் போட்டியிட்டால் ஒதுக்க முடியாது” என்று தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்துள்ளது. இதனை எதிர்த்து மீண்டும் நீதிமன்றம் செல்ல மதிமுக திட்டமிட்டிருப்பதாக சொல்லப்படுகிறது. சின்னம் விவகாரம் குறித்து துரை வைகோ கூறும்போது, “சின்னம் விவகாரத்தில் தேர்தல் ஆணையம் ஒருதலைப்பட்சமாக நடந்து கொள்கிறது. பாஜக கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு அவர்கள் விரும்பும் சின்னம் ஒதுக்கப்படுகிறது. ஆனால் பிற கட்சிகள் வஞ்சிக்கப்படுகின்றன” என விமர்சித்திருந்தார்.

விசிகவுக்கு எழுந்துள்ள சிக்கல்! - மக்களவைத் தேர்தலில் தங்களுக்குப் பொது சின்னமாக பானை சின்னம் ஒதுக்கக் கோரி தேர்தல் ஆணையத்தில் விசிக மனு அளித்தது. ஆனால், ‘கடந்த 2 பொதுத் தேர்தல்களில் குறைந்தபட்சம் 1 சதவீதத்துக்கும் குறையாமல் வாக்குகள் பெற்றிருந்தால் மட்டுமே பொது சின்னம் கோர முடியும். எனவே, பொது சின்னமாக பானை சின்னம் வழங்க இயலாது’ என்று ஆணையம் கடிதம் அனுப்பியது.

இதை எதிர்த்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் விசிக வழக்கு தொடர்ந்தது. 2014 மற்றும் 2019 பொதுத் தேர்தல்களில் முறையே 1.51 சதவீதம் மற்றும் 1.18 சதவீத வாக்குகள் பெற்றதாக தெரிவித்திருந்தது. இந்நிலையில், பொது சின்னம் கோரும் விண்ணப்பத்துடன் கட்சியின் நிதியாண்டு கணக்கை தாக்கல் செய்யவில்லை என்று காரணம் கூறி, பானை சின்னத்தை ஒதுக்க தேர்தல் ஆணையம் நேற்று மறுப்பு தெரிவித்துள்ளது. உச்ச நீதிமன்றத்தில் முறையிட விசிக திட்டமிட்டுள்ளது.

இவையெல்லாம், தேர்தல் ஆணையத்தின் விதிப்படிதான் நடக்கிறதா என்னும் கேள்வியை எதிர்க்கட்சியினர் முன்வைக்கின்றனர். குறிப்பாக, விசிகவைச் சேர்ந்தவர்கள் “பானை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற 1 எம்பி, 4 எம்எல்ஏக்கள் இருக்கிறோம். எங்களுக்கு சின்னம் ஒதுக்கீடு செய்யப்படவில்லை. ஆனால், 1 எம்பி, 1 எம்எல்ஏ இல்லாத அமமுக, தமாகா ஆகிய கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் எப்படி குக்கர், சைக்கிள் சின்னத்தை ஒதுக்கியது?” என்னும் கேள்வியை முன்வைக்கின்றனர்.

ஆனால், தேர்தல் ஆணையத்தின் விதிப்படி ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் போட்டியிடுவோருக்கு பொதுச் சின்னங்கள் ஒதுக்கப்படும் எனக் கூறியது. ஆகவே 2 மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் அமமுகவுக்கும், 3 இடங்களில் போட்டியிடும் தமாகாவுக்கு சின்னத்தை ஒதுக்கியிருக்கிறது ஆணையம்.

பொதுச் சின்னம் ஒதுக்கப்படுவது எப்படி? - சுயேட்சை வேட்பாளர்கள் மற்றும் அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் பொது சின்னத்தை ஒதுக்கும். அக்கட்சிகள் தேர்தல் ஆணையத்திடம் உள்ள பொதுச் சின்னங்களிலிருந்து தங்களுக்கு விருப்பமான மூன்று சின்னங்களை தங்களின் விருப்பமாக கோர வேண்டும். தேர்தல் ஆணையத்தின் பொதுச் சின்ன பட்டியலில் இல்லாத எந்த சின்னமும் நிராகரிக்கப்படும். ஆகவே, ஒரு மக்களவையில் மட்டும் போட்டியிடுவதால், மதிமுக கேட்ட சின்னம் அவர்களுக்கு ஒதுக்கப்படவில்லை.

இந்த ஆண்டு ஜனவரி 4-ம் தேதி, பதிவு செய்யப்பட்ட, அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகளுக்கு சின்னங்கள் ஒதுக்கீடு செய்வதில் சில புதிய விதிமுறைகளை தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி, சின்னம் கோரும் கட்சி கடந்த மூன்று ஆண்டுகளின் வரவு - செலவு கணக்கையும் கடந்த இரண்டு தேர்தல்களின் செலவு அறிக்கைகளையும் கட்சியின் அலுவலக பொறுப்பாளர் கையொப்பமிட்ட விண்ணப்பத்தையும் சமர்ப்பிக்க வேண்டும் என்று அறிவித்ததும் குறிப்பிடத்தக்கது. இதை சமர்பிக்காததால் விசிக கேட்ட சின்னத்தை ஒதுக்க தேர்தல் ஆணையம் மறுத்துவிட்டது.

சின்னம் ஒதுக்காததால் நடப்பது என்ன? - சின்னம் கிடைக்காமல் இருப்பதால் கட்சிகள் தங்களுடைய வலுவை இழக்க நேரிடும். குறிப்பாக, மதிமுக இந்தக் காரணத்தை வலியுறுத்திதான் இரண்டு தொகுதிகளை ஒதுக்கக் கோரி திமுகவிடம் கோரிக்கை வைத்தது. ஆனால், ஒரு இடத்தை மட்டுமே ஒதுக்கியது திமுக. தற்போது பம்பரம் சின்னம் கிடைக்காமல் திணறிவருகிறது மதிமுக. அவர்கள் பரப்புரை மேற்கொள்வார்களா?

இதுதான் தற்போது எதிர்க்கட்சிகள் நிலையாக உள்ளது. வேட்பு மனு தாக்கல் முடிந்த நிலையிலும் சின்னம் சிக்கல் காரணமாக எதிர்க்கட்சிகள் தங்களின் பரப்புரை முழுமையாக தொடங்காமல் உள்ளது. எனவே, இது அந்தக் கட்சிகளை வலுவிழக்கச் செய்யும் என அரசியல் நோக்கர்கள் கருத்துகளை முன்வைக்கின்றனர்.

பாஜக திட்டம் என்ன? - ஆனால், பாஜக கூட்டணி கட்சிகள் பொறுத்தவரை சிட்டிங் எம்பி இல்லாத நிலையிலும் பாஜக அவர்களுக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட தொகுதியை ஒதுக்கியது. குறிப்பாக, ஒரு தொகுதியைக் கேட்டேன். ஆனால், பாஜக இரண்டு தொகுதிகளை ஒதுக்கியதாகக் கூறினார் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன். இந்தச் சின்னம் ஒதுக்கீட்டில் சிக்கலை தவிர்க்கவே அப்படியான அணுகுமுறையைப் பாஜக கையாண்டிருக்கலாம்.

தமிழ் மாநில காங்கிரஸுக்கும் 3 தொகுதிகளைப் பாஜக ஒதுக்கியதும் குறிப்பிடத்தக்கது. அதேபோல், தாமரை சின்னத்தில் போட்டியிடும் பிற சிறிய கட்சிகளைத் தங்கள் கட்சி வேட்பாளர் போல் அறிவித்தது பாஜக. இப்படியாக தங்கள் கூட்டணி கட்சிகளுக்கு எந்தச் சிக்கலும் எழாத வண்ணம் மிகச் சரியாக காய்களைப் பாஜக நகர்த்தியுள்ளது என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.

எனவே, ’தங்களுக்கு சாதகமான கட்சிகளுக்கு சின்னங்களை ஒதுக்கியும் எதிர்க்கட்சிகளுக்கு வேண்டுமென்றே தேர்தல் ஆணையத்தை வைத்து சின்னம் ஒதுக்குவதில் இழுத்தடிக்கிறது பாஜக’ என எதிர்க்கட்சிகள் விமர்சனத்தை முன்வைக்கின்றனர். ஆனால், தேர்தல் ஆணையம் அதன் தனி அதிகாரம்படி செயல்படுவதாகவும், விதிப்படிதான் சின்னங்கள் ஒதுக்கப்படுவதாகப் பாஜக தரப்பினர் கூறிவருவதும் குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

11 mins ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

18 hours ago

மேலும்