செங்கல்பட்டு சார் பதிவாளரின் ஸ்ரீவில்லி. வீட்டை மதிப்பீடு செய்த லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள்

By அ.கோபால கிருஷ்ணன்

ஸ்ரீவில்லிபுத்தூர்: வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக எழுந்த புகாரில் செங்கல்பட்டு சார் பதிவாளராக பணியாற்றும் முத்துச்சாமி ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே புதிதாக கட்டியுள்ள வீட்டை லஞ்ச ஒழிப்புத் துறை மற்றும் பொதுப் பணித்துறை பொறியாளர்கள் மதிப்பீடு செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே இடையன்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் முத்துசாமி (57). இவரது மனைவி வசந்தா (52). முத்துச்சாமி செங்கல்பட்டு மாவட்டத்தில் சார் பதிவாளராக பணியாற்றி வருகிறார். வசந்தா செங்குளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். முத்துச்சாமி இதற்கு முன் ராஜபாளையம், சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர் சார் பதிவாளராக பணியாற்றி உள்ளார்.

முத்துச்சாமி மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக கடந்த ஆண்டு லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப் பதிவு செய்து, ஏடிஎஸ்பி ராமச்சந்திரன் தலைமையில் விசாரணை நடைபெற்று வருகிறது. ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வன்னியம்பட்டி சாய் நகரில் சார் பதிவாளர் முத்துச்சாமி மனைவி பெயரில் ஓராண்டுக்கு முன் கட்டிய வீட்டுக்கு இன்று காலை லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் வந்தனர்.

வீட்டில் முத்துச்சாமியின் மனைவி மற்றும் மகன் இருந்தனர். பொதுப் பணித்துறை பொறியாளர்கள் வீட்டை அளவீடு செய்து மதிப்பீடு செய்யும் பணியில் ஈடுபட்டனர். பொதுப்பணித் துறையினர் அறிக்கை தாக்கல் செய்த பின் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என லஞ்ச ஒழிப்புத் துறையினர் தெரிவித்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE