பெங்களூரு குண்டுவெடிப்பு விவகாரம்; தமிழகத்தில் 10 இடங்களில் என்ஐஏ தீவிர சோதனை: முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக தகவல்

By செய்திப்பிரிவு

சென்னை: கர்நாடக மாநிலம் பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே குண்டு வெடிப்பு வழக்கில் துப்பு துலக்கும் வகையில் தமிழகத்தில் 10 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தி தகவல்களை திரட்டி சென்றனர்.

இதுகுறித்து என்ஐஏ அதிகாரிகள் தரப்பில் கூறப்படுவதாவது: கர்நாடக மாநிலம்பெங்களூரு ஒயிட் பீல்டில் பிரபலமான உணவகமான ராமேஸ்வரம் கஃபேவில் கடந்த மார்ச் 1-ம் தேதி சக்தி வாய்ந்த குண்டு வெடித்ததில், 10 பேர் காயமடைந்தனர். இந்த சம்பவம் குறித்து என்ஐஏ விசாரித்து வருகிறது.

இச்சம்பவத்தில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் ஒரு இளைஞர் அணிந்து செல்லும் தொப்பி மூலம் என்ஐஏ அதிகாரிகள் துப்பு துலக்கினர். இதில் அந்த தொப்பி, சென்னை மயிலாப்பூர் டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் இருக்கும் ஒரு கடையில், கர்நாடக மாநிலம் ஷிமோகாவைச் சேர்ந்த அப்துல் மாத்தேன் தாஹா என்பவர் வாங்கியிருப்பது தெரியவந்தது.

அந்த தொப்பியில் இருந்த தலைமுடியை டிஎன்ஏ சோதனை நடத்தியதிலும், சிசிடிவி கேமரா பதிவுகளை அடிப்படையாக வைத்தும் துப்பு துலக்கியதில் அந்த தொப்பியை அணிந்திருந்தது கர்நாடக மாநிலம் ஷிமோகாவைச் சேர்ந்த முஸாவிர் ஹூசைன் ஷாஜிப் என்பது தெரியவந்தது. ஷிமோகாவில் ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்துக்கு ஆட்களை சேர்த்ததாக என்ஐஏ கடந்த 2020-ம் ஆண்டு பதிவு செய்த வழக்கில், முஸாவிரும், அவரது கூட்டாளி அப்துல் மாத்தேன் தாஹா தேடப்படுகின்றனர்.

இது தொடர்பாக சென்னையில் என்ஐஏ அதிகாரிகள் அண்மையில் முகாமிட்டு விசாரணை செய்தனர். இதில் முஸாவிர், தாஹாவும் திருவல்லிக்கேணியில் ஒரு விடுதியில் தங்கியிருந்ததும், அங்கு சென்னையைச் சேர்ந்த சிலரை ரகசியமாக சந்தித்து சதி திட்டத்துக்கு ஆதரவு பெற்றதும் தெரியவந்தது.

இந்த வழக்கில் மேலும் தகவல்களை திரட்டும் வகையில் சென்னை முத்தியால்பேட்டை விநாயகர் கோயில் தெருவில்வசிக்கும் அபுதாஹிர் வீடு, ஆழ்வார்பேட்டை டிடிகே சாலை அருகே புதுப்பேட்டை கார்டன்பி.வி. மூன்றாவது தெருவில் வசிக்கும் லியாகத் அலி வீடு, வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த ரஹீம் வீடு ஆகிய 3 இடங்களில் பெங்களூரு என்ஐஏ அதிகாரிகள் நேற்று ஒரே நேரத்தில் சோதனை நடத்தினர். இந்தசோதனை சுமார் 4 மணி நேரம் நடைபெற்றது.

சோதனையில் 3 செல்போன்களை என்ஐஏ அதிகாரிகள் கைப்பற்றி எடுத்துச் சென்றதாக கூறப்படுகிறது. அதோடு அபுதாஹிர், லியாகத் அலி, ரஹீம் ஆகிய 3 பேருக்கு நாளை (29-ம் தேதி) பெங்களூரு என்ஐஏ அலுவலகத்தில் நடைபெறும் விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இதேபோல், சென்னை ஓட்டேரியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் அப்துல் ரஹிம் (35) என்பவரது வீட்டிலும் நேற்று சோதனை நடந்தது. பெங்களூரு குண்டுவெடிப்பு மற்றும் ஹவாலா மோசடி விவகாரத்தில் சந்தேகத்தின்பேரில் இந்த சோதனை நடத்தப்பட்டதாகவும் வரும் 1-ம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்றும் சம்மன் அளித்துச் சென்றுள்ளனர்.

மார்த்தாண்டம்: இதேபோல் பெங்களூருகுண்டுவெடிப்பு வழக்கில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் மற்றொரு நபர் ராஜா முகமது (45) என்பவர், கடந்த 2022-ம்ஆண்டு, கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே உள்ள சாங்கையில் உள்ள அருளப்பர் என்பவரின் வீட்டில், 6 மாதங்களாக வாடகைக்கு குடியிருந்தது தெரியவந்துள்ளது. இதைத் தொடர்ந்து நேற்று காலை கொச்சியில் இருந்து வந்த என்ஐஏ அதிகாரிகள் ராஜா முகமது தங்கியிருந்த வீட்டை சோதனை செய்தனர். மேலும்வீட்டு உரிமையாளரிடம் ஒரு மணி நேரத்துக்கு மேலாக விசாரணை மேற்கொண்டனர்.

ராமநாதபுரம்: மேலும் ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினம் பழங்கோட்டை தெருவில் உள்ள சேக்தாவூத் (38) மற்றும் அவரது தந்தை பக்ருதீன் வீடுகளில் என்ஐஏ டிஎஸ்பி முருகன் தலைமையிலான 3 அதிகாரிகள் நேற்று காலை 6.30 முதல் பகல் 12.15 மணி வரை சோதனையில் ஈடுபட்டனர். சேக் தாவூதின் செல்போனை என்ஐஏ அதிகாரிகள் பறிமுதல் செய்து விசாரணைக்கு எடுத்துச் சென்றனர். மேலும் சேக் தாவூதை நாளை (மார்ச் 29) பெங்களூரு என்ஐஏ அலுவலகத்தில் ஆஜராகும்படி சம்மன் வழங்கினர்.

இதன்படி, தமிழகம் முழுவதும் சுமார் 10 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE