முதல்வர் ஸ்டாலின் நடைபயிற்சிக்காக தயாராகும் மதுரை பூங்கா!

By செய்திப்பிரிவு

மதுரை: தேர்தல் பிரச்சாரத்துக்காக ஏப்ரல் 9-ம் தேதி மதுரைக்கு முதல்வர் ஸ்டாலின் வர உள்ளார். அவர் நடைப்பயிற்சி மேற்கொள்வதற்காக மாநகராட்சி சுற்றுச்சூழல் பூங்காவை சீரமைக்கும் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன.

மக்களவைத் தேர்தலில் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் மு.க.ஸ்டாலின், மார்ச் 22-ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் பிரச்சாரம் செய்து வருகிறார். மதுரை, சிவகங்கை வேட்பாளர்களை ஆதரித்து ஏப்ரல் 9-ம் தேதி பிரச்சாரம் செய்வதற்கு முதல்வர் மதுரை வருகிறார். 10-ம் தேதி தேனி, திண்டுக்கல் வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்கிறார். அதனால் 9-ம் தேதி இரவு மதுரையில் முதல்வர் தங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அடுத்த நாள் ( ஏப். 10 ) காலை மாநகராட்சி அலுவலகத்தையொட்டி அமைந்துள்ள சுற்றுச்சூழல் பூங்காவில் முதல்வர் நடைப் பயிற்சி மேற்கொண்டு, வாக்காளர்களை சந்திக்க வாய்ப்பு உள்ளது. இதையடுத்து, சுற்றுச்சூழல் பூங்காவை தயாராக வைத்திருக்கும்படி மாநகராட்சி நிர்வாகத்திடம் திமுக மேலிட நிர்வாகிகள் தகவல் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

இதைத் தொடர்ந்து புதர் மண்டி, உரிய பராமரிப்பின்றி கிடந்த சுற்றுச்சூழல் பூங்காவை மாநகராட்சி நிர்வாகம் அவசர அவசரமாக சீரமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது. மண் அள்ளும் இயந்திரத்தின் மூலம் புதர்களை அகற்றி, பூங்கா வளாகத்தை புதுப்பிக்கும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE