திருவேட்டநல்லூர் மக்கள் தேர்தலை புறக்கணிக்க முடிவு

By செய்திப்பிரிவு

தென்காசி: புளியங்குடி அருகே முந்தல் அருவி நீர் பங்கீட்டு உத்தரவை அமல்படுத்த வலியுறுத்தி, திருவேட்டநல்லூர் ஊராட்சியில் தேர்தலை புறக்கணிப்பதாக கிராம கூட்டத்தில் முடிவு எடுத்துள்ளனர். கோரிக்கையை வலியுறுத்தி வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றி உள்ளனர்.

தென்காசி மாவட்டம், புளியங்குடி அருகே திருவேட்ட நல்லூர் ஊராட்சியில் பொதுப் பணித்துறைக்கு பாத்தியப்பட்ட கலிங்கன்குளம் கண்மாய் உள்ளது. இந்த கண்மாய் நேரடி பாசனம் மூலம் 150 ஏக்கர் விவசாய நிலங்களும், உபரி நீர் மூலம் மேலும் 3 குளங்களும் பாசன வசதி பெறுகிறது. மேற்குத் தொடர்ச்சி மலையில் உருவாகும் முந்தல் அருவியே, கலிங்கன் குளத்தின் பிரதான நீர் ஆதாரமாகும். அருவியில் இருந்து வரும் கால்வாயை மறித்து சாலை அமைத்ததால், கலிங்கன் குளத்துக்கு வரும் நீர் தடைபட்டு உள்ளது.

நீர்ப்பங்கீட்டு உத்தரவுக்கு தடை விதித்து உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை அமல்படுத்தாத அதிகாரிகளைக் கண்டித்தும், நீர் வரத்து ஒடையை ஆக்கிரமித்து அமைக்கப்பட்ட சாலையை அகற்றக்கோரியும், திருவேட்டநல்லூர் ஊராட்சி பகுதி வீடுகளில் பொதுமக்கள் நேற்று கருப்புக் கொடி ஏற்றினர். தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபடப் போவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

கிராம கமிட்டியைச் சேர்ந்த ஏமு என்பவர் கூறியதாவது: முந்தல் அருவி கால்வாயை மறித்து சாலை அமைத்து, சட்ட விரோதமாக நீரை மடை மாற்றம் செய்துள்ளனர். இதனால், பொதுப் பணித்துறை நிர்வாகத் துக்கு உட்பட்ட கலிங்கன் குளம் கடந்த 35 ஆண்டுகளில் ஒரு முறை மட்டுமே நிரம்பி உள்ளது. அதுவும் ஒரு கண்மாயில் உடைப்பு ஏற்பட்டதாலேயே கலிங்கன் குளம் நிரம்பியது.

கடந்த 2013-ம் ஆண்டு மாவட்ட நீதிமன்ற உத்தரவுப் படி அப்போதைய திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர், பொதுப் பணித்துறை செயற் பொறியாளர் ஆய்வு செய்து, கால்வாயின் குறுக்கே சட்ட விரோதமாக அமைக்கப்பட்ட சாலையை அகற்ற உத்தரவிட்டனர். இதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கு 8 ஆண்டுகளாக உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்தது. இதில், 3 மாதங்களில் நீர்ப்பங்கீடு செய்யுமாறு மாவட்ட ஆட்சியருக்கு, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

உயர் நீதிமன்ற உத்தரவுப்படி, தென்காசி மாவட்ட ஆட்சியர் கள ஆய்வு செய்து வருவாய் ஆவணங்கள் மற்றும் பாசனப் பரப்பு அடிப்படையில் நீர் பங்கீடு செய்து கடந்த ஜூலை மாதம் உத்தரவிட்டார். இந்த உத்தரவுக்கு தடை விதிக்கக்கோரி தாக்கல் செய்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், நீர் பங்கீட்டு உத்தரவுக்கு தடை விதிக்க மறுத்து, கீழமை நீதிமன்றத்தை அணுகி நிவாரணம் பெறுமாறு அறிவுறுத்தியது.

எனவே, முந்தல் நீர்ப்பங்கீட்டு உத்தரவை செயல்படுத்த வலியுறுத்தியும், கால்வாய் குறுக்கேயுள்ள சாலையை அகற்றக் கோரியும், தேர்தலை புறக்கணிப்பது என்று ஊர்க் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு உள்ளது. அனைத்து வீடுகளிலும் கருப்பு கொடி ஏற்றப்பட்டு உள்ளது. நீர் பங்கீட்டு உத்தரவை அமல்படுத்தும் வரை போராட்டம் தொடரும். இவ்வாறு அவர் கூறினார். தேர்தல் புறக்கணிப்பு அறிவித்துள்ள மக்களிடம் வருவாய்த் துறை, காவல் துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப் படுத்த நட வடிக்கை எடுத்து வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE