‘30 ஆண்டு பிரச்சினை... சாலை போடாவிட்டால் வாக்களிக்க மாட்டோம்’ - கிருஷ்ணகிரி பழையவூர் மக்கள்

By எஸ்.கே.ரமேஷ்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே 30 ஆண்டுகளாக நீடித்து வரும் சாலை பிரச்சினைகளுக்கு தீர்வு காணவிட்டால் தேர்தலைப் புறக்கணிக்கப் போவதாக கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.

கிருஷ்ணகிரி அடுத்த கம்மம்பள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட கிராமம் பழையவூர். இக்கிராமத்தில் 150 குடும்பங்களைச் சேர்ந்த 700-க்கும் அதிகமான மக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் கிராமத்தில் இருந்து கிருஷ்ணகிரி நகருக்கு, ஒண்டியூர் வழியாக வந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. ஒண்டியூர் சாலை முதல், பழையவூர் வரை தார்சாலை அமைக்க கடந்த 30 ஆண்டுகளாக போராடினர்.

இந்நிலையில், கடந்த 2015-ம் ஆண்டு சுமார் 1.5 கி.மீ. அளவில் தார்சாலை அமைக்க, ரூ.29 லட்சம் ஒதுக்கி சாலைகள் போடப்பட்டது. அப்போது 200 மீட்டர் தூரத்துக்கு சாலை போடவிடாமல் சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். இது தொடர்பாக காவல் நிலையம், தாலுகா அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், முதல்வர் தனிப்பிரிவு வரை புகாரளித்தும் யாரும் நடவடிக்கை எடுக்கதாததால், தேர்தலை புறக்கணிக்கவுள்ளதாக அப்பகுதி மக்கள் முடிவு செய்துள்ளனர்.

இதற்காக கிருஷ்ணகிரி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் குப்பம் பிரிவு சாலை உட்பட பல்வேறு இடங்களில் தேர்தல் புறக்கணிப்பு பேனர்களை வைத்துள்ளனர். இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ''எங்கள் கிராமத்தில் பூஸ்திதி சாலையில், தார் சாலை அமைக்க அலுவலர்கள் அளவீடு செய்து கற்கள் நட்டனர். இதனை ஆக்கிரமிப்பாளர்கள் அகற்றிவிட்டனர். எங்கள் ஊருக்கு செல்லும் ஒரே பாதையை ஆக்கிரமித்துள்ளனர். இவ்வழியே வரும் பால்வண்டி, பள்ளி வாகனங்களை ஊருக்குள் விடாமல் தடுக்கின்றனர்.

இது குறித்து புகாரளித்து நடவடிக்கை எடுக்காததால், எங்கள் கிராமத்தில் உள்ள 500 வாக்காளர்களும் வரும் மக்களவைத் தேர்தலை புறக்கணிக்க முடிவு செய்துள்ளோம். அதிகாரிகள் தலையிட்டு பிரச்னைக்குரிய இடத்தில் தார்சாலை அமைத்து கொடுத்தால் தேர்தலில் வாக்களிப்போம். இல்லாவிட்டால் தேர்தல் புறக்கணிப்பு செய்வது உறுதி'' என்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE