ராகுல் - கமல் இணைந்து பிரச்சாரம்

By செய்திப்பிரிவு

காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியுடன் இணைந்து மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்வது தொடர்பாக திட்டமிடப்பட்டு வருவதாக தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்தார். திமுக கூட்டணியில் காங்கிரஸுக்கு ஒதுக்கப்படும் தொகுதிகளில் சில, மநீமவுக்கு வழங்கப்படும் என கூறப்பட்டது.

ஆனால், காங்கிரஸ் தொகுதிகளை விட்டுக் கொடுக்க விரும்பாததாலேயே மநீம தேர்தலில் போட்டியிட முடியாத சூழல் உருவானதாக அக்கட்சியினர் மத்தியில் அதிருப்தி நிலவுவதாக கூறப்படுகிறது. அதற்கேற்ப, கமல்ஹாசனின் பிரச்சார பயண திட்டத்தில் காங்கிரஸ் வேட்பாளர்களின் தொகுதிகள் இடம்பெறவில்லை.

இந்நிலையில், சென்னை, ஆழ்வார்பேட்டையில் உள்ள மநீம தலைமையகத்தில் கமல்ஹாசனை தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை, மூத்த தலைவர் கே.வீ.தங்கபாலு உள்ளிட்டோர் சந்தித்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் செல்வப்பெருந்தகை கூறும்போது, எந்த வித நிபந்தனையுமில்லாமல் இண்டியா கூட்டணிக்கு ஆதரவு அளித்தமைக்காக கமலுக்கு வாழ்த்து சொல்லுமாறு ராகுல் கூறியிருந்தார்.

தேர்தல் தொடர்பாக உரையாடினோம். எந்தெந்த தொகுதியில் பிரச்சாரத்தை மேற்கொள்வது என்பது குறித்து மேலும் உரையாட இருக்கிறோம். விரைவில் கமல்ஹாசனுடன் ராகுல் பேசுவார்.

இருவரும் சேர்ந்து பிரச்சாரம் மேற்கொள்வது குறித்து திட்டமிடப்பட்டு வருகிறது. ராகுல்காந்தி நேசிக்கும் தலைவர் கமல்ஹாசன் என்றார்.முன்னதாக, ராகுல் காந்தி பிரச்சாரம் தொடர்பான விவரங்கள் ஓரிரு நாட்களில் அறிவிக்கப்படும் என செல்வப்பெருந்தகை தெரிவித்திருந்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE