பத்திர பதிவுகளை ரத்து செய்ய மாவட்ட பதிவாளருக்கு அதிகாரம் அளிக்கும் சட்ட திருத்தம் நிறுத்திவைப்பு: தமிழக அரசு பதில் அளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

By செய்திப்பிரிவு

சென்னை: மோசடியாக பதியப்பட்ட பத்திர பதிவுகளை ரத்து செய்ய மாவட்ட பதிவாளருக்கு அதிகாரம் வழங்கி தமிழக அரசு கொண்டு வந்த சட்ட திருத்தத்தை நிறுத்தி வைத்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஆள்மாறாட்டம், போலி ஆவணங்கள் மூலம் சொத்தின் உரிமையாளருக்கு தெரியாமல் முறைகேடாக பதியப்படும் பத்திர பதிவுகளை அந்தந்த மாவட்ட பதிவாளர்களே நேரடியாக ரத்து செய்யும் வகையில் தமிழக அரசு கொண்டுவந்த சட்ட திருத்தம் கடந்த 2022 ஆகஸ்ட் 16 முதல் அமலுக்கு வந்தது.

இந்த சட்ட திருத்தத்தின் அடிப்படையில், தமிழகம் முழுவதும் மோசடி பத்திர பதிவுகள் தொடர்பாக 11 ஆயிரத்துக்கும் மேற்பட்ட புகார்கள் பெறப்பட்டன. மேலும், இந்த சட்ட திருத்தத்தை முன்தேதியிட்டு அமல்படுத்தி, ஆயிரக்கணக்கான பத்திர பதிவுகள் ரத்து செய்யப்பட்டன.

இந்நிலையில், தமிழக அரசின் இந்த புதிய சட்ட திருத்தத்தை எதிர்த்து புதுக்கோட்டை வளர்மதி, திருச்செங்கோடு நித்யா பழனிச்சாமி, விழுப்புரம் கார்த்திகேயன் உள்ளிட்டோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடர்ந்தனர். அதில் அவர்கள் கூறியதாவது:

தமிழக அரசு கடந்த 2022-ம் ஆண்டு பத்திர பதிவு சட்டத்தில் புதிதாக கொண்டு வந்துள்ள பிரிவு 77-ஏ, 77-பி ஆகிய பிரிவுகளின்கீழ் போலியாக பதியப்பட்ட பத்திரங்களை மாவட்ட பதிவாளரே ரத்து செய்யலாம் என்றும், அதுதொடர்பான மேல்முறையீட்டை பத்திர பதிவு துறை தலைவர் விசாரிக்கலாம் என்றும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இது தன்னிச்சையானது. பல்வேறு முறைகேடுகளுக்கும் இது வழிவகுத்துள்ளது. எனவே, இந்த சட்ட திருத்தம் செல்லாது என அறிவித்து ரத்து செய்ய வேண்டும்.

இவ்வாறு அதில் கோரியிருந்தனர்.

நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், என்.செந்தில்குமார் அமர்வில் இந்த வழக்குகள் நேற்று விசாரணைக்கு வந்தன. அப்போது, மனுதாரர்கள் தரப்பில் மூத்த வழக்கறிஞர் என்.ஜோதி ஆஜராகி வாதிட்டார். அப்போது அவர் கூறியதாவது:

இந்த புதிய சட்ட திருத்தத்தின்கீழ் எந்த வழிமுறையோ, விதிமுறைகளோ, வழிகாட்டு நெறிமுறைகளோ வகுக்கப்படவில்லை. சொத்துக்கு சம்பந்தம் இல்லாத 3-வது நபர் புகார் அளித்தாலும், அதன்பேரில் பத்திர பதிவை ரத்து செய்ய மாவட்ட பதிவாளர்களுக்கு வானளாவிய அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

இதனால், அதிக அளவில் துஷ்பிரயோகம் நடக்கிறது. 90 வயது மூதாட்டியின் பெயரில் 60 ஆண்டுகளுக்கு முன்பு பதியப்பட்ட பத்திர பதிவை ரத்து செய்யக் கோரி மனு அளிக்கப்பட்டுள்ளது. மாவட்ட பதிவாளர் எப்படி விசாரணை நடத்த வேண்டும், அதற்கான காலவரம்பு என்ன என்பதற்கு எந்த விதியும் வகுக்கப்படவில்லை. இதனால், சொத்தின் உரிமை தொடர்பான ஸ்திரத்தன்மை பாதிக்கப்படும். இது இயற்கை நீதிக்கு புறம்பானது என்பதால், அந்த சட்ட திருத்தம் செல்லாது என்று அறிவிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் வாதிட்டார்.

இதுதொடர்பாக அரசின் நிலைப்பாடு அறிந்து பதில் அளிக்க அவகாசம் வேண்டும் என அரசு தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் கோரினார்.

இதையடுத்து நீதிபதிகள், “மோசடி பத்திர பதிவுகளை ரத்து செய்யும் வகையில் மாவட்ட பதிவாளருக்கு அதிகாரம் வழங்கும் இந்த சட்ட திருத்தம் தொடர்பாக ஏப்ரல் 4-ம் தேதிக்குள் தமிழக அரசு தரப்பில் பதில் அளிக்க வேண்டும்’’ என்று உத்தரவிட்டனர். அதுவரை இந்த சட்ட திருத்தத்தின் அடிப்படையில் எந்த நடவடிக்கையும் எடுக்க கூடாது என்று நிறுத்தி வைத்தும் உத்தரவிட்டுள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE