“மோடி ஆட்சியில் தமிழக மீனவர்கள் மீது அறிவிப்படாத போர்!” - முதல்வர் ஸ்டாலின் @ தூத்துக்குடி பிரச்சாரம்

By செய்திப்பிரிவு

சென்னை: "தமிழக மீனவர்களுக்கு எதிரான இலங்கையின் அராஜகங்கள், கைதுகள் அளவில்லாமல் போனது பாஜக ஆட்சியில்தானே. இல்லையென்று ஆதாரபூர்வமாக மறுக்க முடியுமா? விஸ்வகுரு என்று விளம்பரப்படுத்திக் கொள்ளும் நீங்கள், தமிழக மீனவர்களைக் காப்பாற்ற ஒரு துரும்பையும் எடுத்துப் போடவில்லையே? எந்த முகத்தை வைத்துக் கொண்டு தமிழக மீனவர்களிடம் ஓட்டு கேட்டு வருகிறீர்கள்?" என்று தூத்துக்குடியில் நடந்த திமுக பிரச்சாரக் கூட்டத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.

தூத்துக்குடி மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் கனிமொழி மற்றும் ராமநாதபுரம் மக்களவைத் தொகுதி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வெற்றி வேட்பாளர் நவாஸ் கனி ஆகியோரை ஆதரித்து தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் நடைபெற்ற தேர்தல் பரப்புரைப் பொதுக்கூட்டத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியது: "நாங்கள் குடும்பக் கட்சிதான். தமிழகத்தில் இருக்கும் ஒவ்வொரு குடும்பத்துக்கும் நன்மை செய்கின்ற கட்சி. ஒவ்வொரு நாளும் காலை முதல் இரவு வரை மக்களுடன் மக்களாக இருந்து, மக்களுக்காகப் பணியாற்றிக் கொண்டு இருக்கும் கட்சி.

தமிழகத்தை மொழி, இனம், பண்பாட்டு ரீதியாக, ஒடுக்கப்பட்டதை எதிர்த்து உருவானதுதான் திமுக. இந்த தமிழகத்தை எப்படியாவது அடிமைப்படுத்திவிட முடியாதா? என்று பகல் கனவு காணும் உங்களின் தூக்கத்தைக் கெடுக்கும் கொள்கை வாரிசுகள் நாங்கள். இப்படிப்பட்ட கொள்கை உரமிக்க தன்மானக் கூட்டத்தைப் பார்த்தால் உங்களுக்குக் கசக்கத்தான் செய்யும்.

அதனால்தான் இந்தத் தூத்துக்குடி மக்களின் பிரதிநிதியான கனிமொழியை, மேடையில் இருக்கும்போதே நீங்கள் அவமதித்தீர்கள். திமுகவைச் சேர்ந்தவர் என்று இல்லை. ஒரு பெண் என்றாவது மதித்தீர்களா? தூத்துக்குடி மக்கள் வாக்களித்துத் தேர்ந்தெடுத்த நாடாளுமன்ற உறுப்பினர் என்றாவது மதித்தீர்களா? உண்மையில் நீங்கள் கனிமொழியை அவமதிக்கவில்லை, தூத்துக்குடி மக்களைத்தான் அவமதித்தீர்கள். ஜூன் 4-ஆம் தேதி பாருங்கள், கனிமொழியை மீண்டும் தூத்துக்குடி மக்கள் தேர்ந்தெடுத்து நாடாளுமன்றத்துக்கு அனுப்பத்தான் போகிறார்கள். அன்றைக்கு எதிர்க்கட்சி வரிசையில் இருக்கும் பாஜக அதைப் பார்க்கத்தான் போகிறீர்கள்.

கடந்த அதிமுக ஆட்சியில், தூத்துக்குடி என்றாலே நமக்கு நினைவுக்கு வந்தது எது? துப்பாக்கிச் சூடு. 13 பேர் அநியாயமாகக் கொல்லப்பட்டதை மறக்க முடியுமா? அப்படியொரு மனிதநேயமற்ற கொடூரமான துப்பாக்கிச் சூட்டை நடத்தியவர்தான் பழனிசாமி. தமிழக வரலாற்றில் அதிமுக ஆட்சியால் வைக்கப்பட்ட மிகப்பெரிய கரும்புள்ளி. துயரமும் கொடூரமுமான அந்த சம்பவத்தை இப்போது நினைத்தாலும் நெஞ்சமெல்லாம் பதறுகிறது.

2018-ம் ஆண்டு எதிர்க்கட்சித் தலைவராக இருந்த நான் உடனடியாகத் தூத்துக்குடிக்கு வந்தேன். துப்பாக்கிச் சூட்டின் சத்தமும், மக்களின் மரண ஓலமும் ஒலித்துக் கொண்டிருந்த அந்தக் காட்சி, இப்போதும் என் மனதை விட்டு அகலவில்லை. ரத்தத்தை உறைய வைக்கும் இந்தச் சம்பவம் பற்றி அன்றைய முதல்வர் பழனிசாமியிடம் ஊடகங்கள் கேட்டபோது, என்ன கூறினார்? “இப்படி ஒரு சம்பவம் நடந்ததே எனக்குத் தெரியாது. உங்களைப்போல் நானும் டிவி பார்த்துதான் தெரிந்துக் கொண்டேன்” என்று துளிகூட நெஞ்சில் ஈரம் இல்லாமல் பழனிசாமி பேட்டி அளித்ததை யாரும் மறந்திருக்கவே முடியாது.

”உள்துறையைக் கையில் வைத்திருந்த மாநிலத்தின் முதல்வர் பேசும் பேச்சா அது?” என்று நாடே கோபத்தில் கொந்தளித்தது. அந்தளவுக்குப் பெரிய பொய்யை கூறினார் பழனிசாமி. அவர் கூறியது எவ்வளவு பெரிய பொய் என்று அவர்கள் ஆட்சிக் காலத்தில் அமைக்கப்பட்ட ஆணையமே கூறிவிட்டது. நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணைய அறிக்கையில் பழனிசாமி கூறியது பொய் என்று தெளிவாக வந்துவிட்டது.

‘பச்சைப்பொய் பழனிசாமி’ என்று மக்கள் சும்மாவா சொன்னார்கள். பழனிசாமிக்குத் தெரிந்துதான் துப்பாக்கிச் சூடு நடந்தது என்று ஆணையம் ஆதாரப்பூர்வமாக கூறியிருக்கிறது. ஆணையத்தில் சாட்சியாக விசாரிக்கப்பட்டவர்கள் யார் தெரியுமா? அப்போது இருந்த தலைமைச் செயலாளர், அடுத்து, சட்டம் - ஒழுங்கு பொறுப்பிலிருந்த அப்போதைய டிஜிபி.அன்றாட நிகழ்வுகளை முதல்வருக்கு சொல்லும் அப்போதைய உளவுத்துறை ஐஜி. இப்படி அரசின் உயர் பொறுப்புகளில் இருந்த அனைவரும் கூறிய சாட்சியத்தை வைத்துத்தான், பழனிசாமிக்கு தெரிந்துதான் துப்பாக்கிச் சூடு நடந்திருக்கிறது என்று ஆணையம் உறுதி செய்தது.

தூத்துக்குடியில் நடக்கின்ற சம்பவங்களையும், அங்குள்ள நிலவரங்களையும் நிமிடத்துக்கு நிமிடம் எடப்பாடி பழனிசாமியிடம் அப்டேட் செய்ததாக அவர்கள் கூறினார்கள். எனவே, ஊடகங்கள் மூலமாகத்தான் துப்பாக்கிச் சூடு சம்பவம் பற்றி தெரிந்து கொண்டதாகப் பழனிசாமி கூறியது தவறானது என்று ஆணையத்தின் அறிக்கையில் வெட்ட வெளிச்சம் ஆகிவிட்டது. இவ்வாறு, பழனிசாமியின் பொய்யை அம்பலப்படுத்திய ஆணையம், திமுக ஆட்சியில் அமைக்கப்பட்டதல்ல. அதிமுக ஆட்சியில் பழனிசாமி முதல்வராக இருந்தபோதே அமைக்கப்பட்டது. திமுக அரசு பொறுப்பேற்றதும் நீதிபதி அருணா ஜெகதீசனின் இடைக்கால அறிக்கையில் தெரிவிக்கப்பட்ட கருத்துகளின் அடிப்படையில், நம்முடைய திமுக அரசு பல நடவடிக்கைகளை எடுத்தது.

கலவரத்தில் ஈடுபடாத நபர்கள் மீது பதிவு செய்யப்பட்ட 38 வழக்குகளை திரும்பப் பெற்றோம். போராட்டத்தின்போது காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு, காவலில் வைக்கப்பட்ட 93 நபர்களுக்கு, அவர்களும் - அவர்களின் குடும்ப உறுப்பினர்களும் அனுபவித்த மன வேதனைகளின் பொருட்டு 1 லட்சம் ரூபாய் நிவாரண உதவி வழங்கப்பட்டது. காவல் துறையினரால் கைது செய்யப்பட்டு, பாளையங்கோட்டை மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டு, பிறகு இறந்த பரத்ராஜ் என்பவரின் தாயாருக்கு 2 லட்சம் ரூபாய் நிதியுதவி அளிக்கப்பட்டது. திரும்பப் பெறத் தகுதியுள்ள 38 வழக்குகளில் தொடர்புடைய நபர்களின் உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்புக்காகத் "தடையில்லாச் சான்றிதழ்" வழங்க அரசாணை வெளியிடப்பட்டது. இது எல்லாவற்றிற்கும் திமுக ஆட்சிக்கு வந்ததும், 26.05.2021 அன்றே உத்தரவிட்டோம்.

தூத்துக்குடி சம்பவத்தில் பாதிக்கப்பட்ட 21 நபர்களுக்கு, கடந்த ஆட்சியில் கண்துடைப்பாகச் சில பணிகள் வழங்கப்பட்டது. அவர்கள் தங்களின் படிப்புத் தகுதிக்கு ஏற்ற பணிகளைக் கேட்டார்கள். அதை நிறைவேற்றிக் கொடுத்ததும் திமுக அரசுதான். அவர்கள் கல்வித் தகுதிக்கு ஏற்ற பணியிடங்கள் 18 நபர்களுக்கு வழங்கப்பட்டது. எல்லாவற்றிற்கும் மேல், இந்தத் துயரங்களுக்கு எல்லாம் காரணமான ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாகத் திறக்க முடியாதபடி சமீபத்தில் உச்சநீதிமன்றத்தில் உறுதியான வாதங்களை முன்வைத்து வெற்றி கண்டது, நம்முடைய திராவிட மாடல் அரசுதான்.

ஒரு ஆட்சி நிர்வாகம் ஈவு இரக்கமில்லாமல் எப்படி நடக்கக் கூடாது என்பதற்கு எடுத்துக்காட்டு கடந்த அதிமுக.ஆட்சி. ஆனால், பாதிக்கப்பட்ட குடும்பங்களின் கண்ணீரைத் துடைத்து, அவர்களின் வாழ்க்கையில், ஒளி வீசும் உதயசூரியனாக இருக்கிறதுதான் நம்முடைய திமுக ஆட்சி, இந்தத் திராவிட மாடல் ஆட்சி. மக்கள் விரோத ஆட்சி நடத்திய பழனிசாமி, தன் ஆட்சி அவலங்களை எல்லாம் மக்கள் மறந்திருப்பார்கள் என்று நினைக்கிறார். மக்களை ஏமாற்ற மீண்டும் அவர் பிரச்சாரம் செய்யத் தொடங்கியிருக்கிறார். இரண்டு நாட்களுக்கு முன்னால் திருச்சியில் பேசிய பழனிசாமி, எனக்கு இரண்டு மகிழ்ச்சியைக் கொடுத்திருக்கிறார். ஒன்று, திமுகவுக்கும், அதிமுகவுக்கும்தான் போட்டி என்று கூறியிருக்கிறார். அந்தளவுக்காவது பழனிசாமிக்குப் புரிதல் இருக்கே என்று, எனக்கு முதல் மகிழ்ச்சி.

பழனிசாமி அவர்களே, களத்தில் மோதுவோம். எங்கள் சாதனைகளையும், உங்கள் துரோகங்களையும் எடைபோட்டு மக்கள் தீர்ப்பளிக்கட்டும். எங்கள் கொள்கைகள் எப்படி உயர்வானது. அந்தக் கொள்கைகளுக்காக நாங்கள் எப்படி உறுதியுடன் நிற்கிறோம். கொள்கை அடிப்படையில் ஆட்சி நடத்தி, திட்டங்களைச் செயல்படுத்துகிறோம் என்று ஒவ்வொரு நாளும் மக்கள் பார்க்கிறார்கள். அதேபோல், பழனிசாமி என்பவர் யார்? நேற்று யாருடன் இருந்தார்; இன்றைக்கு யாருடன் இருக்கிறார்; நாளைக்கு யாருடன் இருப்பார்; சுயநலத்தின் முழு உருவமாகத் தமிழகத்தின் உரிமைகளை எப்படி அடகு வைத்தார்; நேரத்துக்கு ஏற்ற மாதிரி எப்படியெல்லாம் தவழ்ந்த, தவழ்ந்து பழனிசாமி போராடுவார் என்று மக்கள் எடைபோட்டுத் தீர்ப்பளிப்பார்கள்.

எப்படி என்னைப் பற்றி அவதூறுகளைப் பரப்பி, விமர்சித்துப் புடம் போட்ட தங்கமாக, எஃகுபோல் நெஞ்சுறுதி கொண்டவனாக மாற்றியிருக்கிறார்களோ, அதேபோல், இப்போது உதயநிதியையும் விமர்சிக்கத் தொடங்கியிருக்கிறார். இது இரண்டாவது மகிழ்ச்சி. எங்களைத் தொடர்ந்து விமர்சியுங்கள். வரவேற்கிறோம். விமர்சனங்கள் ஆக்கபூர்வமானதாக இருந்தால், சொல்வது யார் என்று பார்க்கமாட்டோம், பயனடைவது மக்கள் என்று செயலாற்றுவோம். இதுதான் திமுக.

நடப்பது மக்களவைத் தேர்தல். கடந்த பத்தாண்டுகளில் நாட்டை நாசப்படுத்திப் படுகுழியில் தள்ளியிருப்பது பாஜக. எந்த பாஜக? ‘மோடிதான் எங்கள் டாடி‘ என்று பாதம்தாங்கிளாகத் தூக்கி தலையில் சுமந்தீர்களே அந்தப் படுபாவி பாஜக. எந்த பாஜக? தங்களுக்கு எதிரான ஓட்டுகள் பிரிய வேண்டும் என்று உங்களுக்கு ஸ்க்ரிப்ட் கொடுத்துள்ளதே அந்த பாஜக. அந்த பாஜகவைக் கண்டித்து விமர்சித்து ஒரு வார்த்தைகூட உங்களிடமிருந்து வரவில்லையே? எஜமான விஸ்வாசம் தடுக்கிறதா?

உங்களுக்கு, முன்னாள், இந்நாள் கிடையாது. எந்நாளும் பாஜகதான் எஜமானர்கள். நீங்கள் அவர்களின் பாதம்தாங்கிகள்… மனமுவந்து தமிழகத்துக்கும், தமிழக மக்களுக்கும் துரோகம் இழைக்கும் கொள்கையற்ற கூட்டம் நீங்கள். மோடியைப் பற்றி பாசாங்குக்காககூட பத்து சொற்களை பேசாத பாதம்தாங்கி பழனிசாமிதான், தமிழகத்தைக் காப்பாற்ற போகிறாராம்; உரிமைகளை மீட்கப் போகிறாராம். அனைத்து உரிமைகளையும் அடகு வைத்தது நீங்கள்தான். உங்களுக்கு இதையெல்லாம் கூற அருகதை இருக்கிறதா?

இப்படி பாதம்தாங்கி பழனிசாமி ஒரு பக்கம் என்றால்… அவரின் ‘ஓனர்’ மோடி மற்றொரு பக்கம் வந்திருக்கிறார். தேர்தல் நேரத்தில்தான் மோடியைத் தமிழகத்துப் பக்கம் பார்க்க முடியும். சில நாட்களுக்கு முன்னால், கன்னியாகுமரிக்கு வந்த பிரதமர் நரேந்திர மோடி, இலங்கைக் கடற்படையால் தமிழ்நாட்டு மீனவர்கள் தாக்கப்படுவதற்கும் கைது செய்யப்படுவதற்கும், திமுகவும் காங்கிரசும்தான் காரணம் என்று கூறியிருக்கிறார்.

“நான் ஆட்சிக்கு வந்தால், ஒரு மீனவர்கூட தாக்கப்பட மாட்டார் கைது செய்யப்பட மாட்டார்” என்று மார்தட்டினாரே மோடி? ஆனால், வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு, ராமநாதபுரம் – தூத்துக்குடி என்று பல்வேறு மாவட்ட மீனவர்களுக்குச் சிறைத் தண்டனை, படகுகள் பறிமுதல், படகுகள் நாட்டுடைமை, கடும் அபராதம், மூன்றாயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் கைது என்று, தமிழக மீனவர்கள்மீது இலங்கைக் கடற்படை அறிவிக்கப்படாத ஒரு போரை நடத்துவது மோடி ஆட்சியில்தான்.

இதையெல்லாம் வேடிக்கை பார்ப்பது யார்? தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல்களைத் தட்டிக் கேட்க நீங்கள் தயங்குவது ஏன்? பாதிக்கப்படுவது தமிழக மீனவர்கள் என்பதாலா? கதறி அழுவது தமிழக பெண்கள் என்பதாலா? குஜராத் மீனவர்கள்மீது பாகிஸ்தான் துப்பாக்கிச் சூடு நடத்தினால், சிறையில் அடைத்தால், படகுகளை நாட்டுடைமை ஆக்கினால் இப்படிதான் அமைதியாக இருப்பீர்களா? நீங்கள்தான் பெரிய விஸ்வகுருவாயிற்றே, இலங்கையை உங்களால் கண்டிக்க முடியாதா? நீங்கள் விஸ்வகுருவா? இல்லை மவுனகுருவா? பதில் கூறுங்கள் மோடி. பதில் கூறுங்கள் என்று நான் மட்டும் கேட்கவில்லை. தூத்துக்குடி - ராமேஸ்வரம் மீனவர்கள் மட்டும் கேட்கவில்லை. ஒட்டுமொத்தத் தமிழக மீனவர்களும் கேட்கிறார்கள்.

2014 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பு, பாம்பனில் பாஜக சார்பில் 'கடல் தாமரை' என்று ஒரு போராட்டம் நடத்தப்பட்டது. அப்போது பாஜக. தலைவர்களில் ஒருவராக இருந்த சுஷ்மா சுவராஜ் இங்கு வந்திருந்தார். பாஜக ஆட்சிக்கு வந்தால், கச்சத்தீவு மீட்கப்படும், மீனவர் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காணப்படும் என்று கூறினார். இதெல்லாம் பத்தாண்டு காலத்தில் நடந்திருக்கிறதா? “தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையால் துன்புறுத்தப்படுவதும், கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்படுவதும் தினசரி நடக்கிறது. இதற்குக் காங்கிரஸ் அரசின் பலவீனம்தான் காரணம் என்று ராமநாதபுரத்தில் வைத்துதான் நரேந்திர மோடி கூறினார்.

மீனவர்கள் பாதுகாப்பாக வாழவேண்டும் என்றால், இந்தியாவில் வலுவான மத்திய அரசு அமைய வேண்டும் என்று கூறினார். மீனவர்கள் வாழ்வு சிறக்க சபதம் எடுப்பதாகக் கன்னியாகுமரியில் கூறினார். “நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஒரு மீனவர்கூட உயிரிழக்க மாட்டார்கள்” என்று கூறினார். தங்கச்சிமடம் மீனவர் பிரிட்டோ கொலை செய்யப்பட்டாரே, அது யார் ஆட்சியில்? மீனவர்கள்மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டதே, அப்போது நீங்கள்தானே பிரதமர்? மேசியா நாகராஜன், செந்தில்குமார், சாம்சன், டார்வின் என்று நான்கு மீனவர்கள் படுகொலை செய்யப்பட்டார்களே, அப்போது வேடிக்கை பார்த்த பிரதமர் யார்? நீங்கள்தானே.

தமிழக மீனவர்களுக்கு எதிரான இலங்கையின் அராஜகங்கள், கைதுகள் அளவில்லாமல் போனது பாஜக ஆட்சியில்தானே. இல்லையென்று ஆதாரப்பூர்வமாக மறுக்க முடியுமா? விஸ்வகுரு என்று விளம்பரப்படுத்திக் கொள்ளும் நீங்கள், தமிழக மீனவர்களைக் காப்பாற்ற ஒரு துரும்பையும் எடுத்துப் போடவில்லையே? எந்த முகத்தை வைத்துக் கொண்டு தமிழக மீனவர்களிடம் ஓட்டு கேட்டு வருகிறீர்கள்?

தமிழக மீனவர்களைக் காப்பாற்ற தவறிய பிரதமர் மோடி, திசைதிருப்பும் எண்ணத்துடன் எங்கள் மேல் குறை சொல்கிறார். ஒரு பிரதமர் வாக்கு கேட்டு வருகிறார் என்றால், தன்னுடைய ஆட்சிக் காலத்தில் செய்த சாதனைகளைக் கூறி வாக்கு கேட்க வேண்டும். மாறாக, பிரதமர் மோடி, எதிர்க்கட்சிகளைத் திட்டுவதில் நேரத்தை செலவு செய்து கொண்டு இருக்கிறார். பாஜக ஆட்சிக்கு வந்தால், வெளிநாட்டில் இந்தியர்கள் பதுக்கி வைத்திருக்கும் கருப்புப் பணத்தை மீட்டு ஆளுக்கு 15 லட்சம் ரூபாய் தரலாம் என்று கூறினாரே, கொடுத்தாரா? 15 ஆயிரமாவது கொடுத்தாரா? இல்லையே. உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால், சுருக்குப் பையில் இருக்கும் பணத்தைகூட எப்படி உருவ வேண்டும் என்றுதான் திட்டம் போடுகிறார்.

ஆண்டுக்கு 2 கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கித் தருவேன் என்று கூறினாரே, எங்கே அந்த வேலைவாய்ப்புகள்? உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால், கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, இப்போது மோடி ஆட்சியில்தான் வேலைவாய்ப்பின்மை தலைவிரித்தாடுகிறது. உழவர்களின் வருமானம் இரண்டு மடங்கு ஆகிவிட்டதா? உழவர்களின் வாழ்வாதாரத்தையே பாழாக்குகிற மூன்று வேளாண் சட்டங்களைக் கொண்டு வந்து, விவசாயிகளைத் தலைநகர் எல்லையில் போராடவிட்டு, அவர்கள் வெயிலிலும் - மழையிலும் கஷ்டப்படுவதைப் பார்த்து சந்தோஷப்பட்டீர்கள். ஏதோ எதிரிகள் நம் நாட்டு எல்லைக்குள் நுழைந்ததைப்போல் தாக்குதல் நடத்துகிறீர்கள். விவசாயிகளை எதிரிகள் போல் நடத்துவதுதான் மோடி மாடலா?

அடுத்ததாக ஒன்று கூறினார். வீடு இல்லாதவர்களே இந்தியாவில் இருக்கமாட்டார்கள் என்று கூறினார். அனைவருக்கும் வீடு கட்டிக் கொடுத்துவிட்டாரா? இல்லையே. பெயர் மட்டும் பிரதமர் வீடு கட்டும் திட்டம். அதில் 60 விழுக்காடு பணம் மாநில அரசுதான் தர வேண்டும். இப்படி ஸ்டிக்கர் ஒட்டிக் கொள்ள அவமானமாக இல்லையா? இதுனால்தான், ”வாயாலேயே வடை சுடுவார் மோடி” என்று சொல்கிறோம்.

தமிழகத்துக்கு கொடுத்த எந்த வாக்குறுதியையாவது மோடி நிறைவேற்றியிருக்கிறாரா? 2014-ம் ஆண்டு ராமநாதபுரத்துக்கு வாக்கு கேட்டு வந்த மோடி என்ன கூறினார்? மிகப்பெரிய புண்ணியத் தலமான ராமேஸ்வரம், சுற்றுலாத் தலமாக மாற்றப்பட்டு, உலகத்தினர் அனைவரும் வந்து செல்ல ஏற்பாடு செய்யப்படும் என்று கூறினார். ராமேஸ்வரத்தை உலகப் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமாக மாற்றிவிட்டார்களா? மீண்டும் தனுஷ்கோடிக்கு ரயில் பாதை அமைக்க 2019 மார்ச் மாதம் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினாரே? அதன், இன்றைய நிலை என்ன? ராமேஸ்வரம் – தனுஷ்கோடி இடையே 17 கிலோ மீட்டர்தானே தூரம்? ஐந்து ஆண்டுகள் ஆகிவிட்டதே, 17 கிலோ மீட்டருக்குப் பாதை அமைக்க முடியாதா? ராமேஸ்வரத்துக்கும் - தனுஷ்கோடிக்கும் தூரம் இல்லை. உங்கள் மனதுக்கும் தமிழகத்துக்கும்தான் ரொம்ப தூரம்.

இப்படி தமிழகத்துக்கு எதுவும் செய்யாமல், தமிழகத்துக்குக் கொடுத்த எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றாமல், அவர் கொண்டுவரும் திட்டங்களுக்கு நான் தடையாக இருந்தேன் என்று கூறுகிறார். அவர் தமிழகத்துக்கு எந்தத் திட்டத்தைக் கொண்டு வந்தார்? தமிழகத்துக்கு என்ன சிறப்புத் திட்டம் கொண்டு வந்தீர்கள் என்று நானும் நாள்தோறும் கேட்டுக் கொண்டே இருக்கிறேன். ஒரே ஒரு சிறப்புத் திட்டத்தைக்கூட பத்தாண்டுகள் பிரதமராக இருந்த மோடியால் கூற முடியவில்லை" என்று முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

15 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

34 mins ago

தமிழகம்

33 mins ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

மேலும்