தென்காசி பாஜக வேட்பாளர் ஜான் பாண்டியன் சொத்து மதிப்பு விவரம்

By செய்திப்பிரிவு

தென்காசி: தென்காசி (தனி) தொகுதி பாஜக வேட்பாளர் ஜான் பாண்டியன் திங்கள்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தார். இத்தொகுதியில் வேட்புமனு தாக்கல் தொடங்கிய முதல் 3 நாட்களில் யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை.

தென்காசி தொகுதி தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளரான தமிழக மக்கள் முன்னேற்ற கழக தலைவர் ஜான் பாண்டியன் பாஜக, பாமக, அமமுக உள்ளிட்ட கூட்டணி கட்சி தொண்டர்களுடன் மேளதாளம் முழங்க தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்தார்.

மாவட்ட தேர்தல் அலுவலரும் ஆட்சியருமான ஏ.கே.கமல் கிஷோரிடம், வேட்புமனுவை ஜான்பாண்டியன் தாக்கல் செய்தார். பின்னர் அவர் செய்தியாளர் களிடம் கூறும்போது, “தென்காசி தொகுதியில் பாஜகவின் தாமரை சின்னத்தில் போட்டியிடுகிறேன். மக்களுக்கு நன்மை செய்ய தேர்தலில் போட்டியிடுகிறேன். மக்களுக்கு திமுக செய்த துரோகங்கள், பொய் பிரச்சாரங்களை மக்களிடம் சொல்லி வாக்கு சேகரிப்போம்.

தென்காசி மாவட்டத்தில் உலகத்தரத்தில் தொழிற் சாலைகள், தகவல் தொழில்நுட்ப பூங்கா கொண்டுவரவும், குற்றாலத்தை உலகத்தரமான சுற்றுலாதலமாக்கவும் பிரதமரிடம் முறையிட்டு பெற்றுத் தருவேன். தென்காசி மாவட்டத்தை முதன்மையான மாவட்டமாக்க பாடுபடுவேன். மக்களவையில் எனது குரல் நிச்சயம் ஒலிக்கும். இதுவரை இருந்த எம்பிக்கள் மக்களை சந்தித்ததில்லை. வெற்றி பெற்றதுடன் சென்றுவிட்டனர். சாதி, சமய பேதமின்றி அனைத்து மக்களுக்கும் தொண்டாற்றுவேன்” என்றார்.

சொத்து மதிப்பு: பாஜக வேட்பாளர் ஜான்பாண்டியன் அளித்துள்ள உறுதிமொழி பத்திரத்தில் தன்னிடம் ரூ.1 லட்சம், மனைவியிடம் ரூ.1 லட்சம் ரொக்கம் இருப்பதாகவும், தனது பெயரில் ரூ.2.43 கோடி மதிப்பில் அசையும் சொத்துகள், மனைவி பெயரில் ரூ.3.10 கோடி மதிப்பில் அசையும் சொத்துகள், தனது பெயரில் ரூ.4.98 கோடி மதிப்பில் அசையாச் சொத்துகள், மனைவி பெயரில் ரூ.2.70 கோடி மதிப்பில் அசையாச் சொத்துகள் இருப்பதாக கூறியுள்ளார்.

மேலும் தனக்கு ரூ.2 கோடிக்கும், மனைவிக்கு ரூ.93 லட்சத்துக்கும் கடன் இருப்பதாகக் கூறியுள்ளார். ஜான் பாண்டியனுக்கு மாற்று வேட்பாளராக அவரது மகன் வியங்கோ பாண்டியன் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE